3."விழித்துக்' கொண்டால் தான் உண்டு! தொழிற் பயிற்சி வகுப்பில் "அட்வைஸ்'
பந்தலூர்: "தாங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே, ஏமாற்றப்படுவதில் இருந்து விடுபட இயலும்' என, நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
"எய்டு அண்ட் ஆக்சன் இந்தியா' அமைப்பின் மூலம், மகளிர் குழுக்களுக்கான இலவச தொழிற்பயிற்சி, பந்தலூரில் நடத்தப்படுகிறது. நெல்லியாளம் மூன்றாம் நிலை நகராட்சியின் மூலம் பரிந்துரைக்கப்படும் குழுக்களை சேர்ந்த பெண்கள் 33 பேருக்கு, 3 மாதங்களாக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒரு கட்டமாக, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மையத்துடன் இணைந்து பயிற்சி மையத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிதரன் வரவேற்றார்.
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி பேசுகையில், ""எல்லாம் தெரியும் என்பதை விட, தெரியாதவற்றை கேட்டு தெரிந்து அதற்கேற்ப செயல்படுவதால், சமுதாயத்தில் நல்ல நிலையை எட்ட முடியும். தெரிந்தவற்றை பிறருக்கு தெரிய வைத்து, சமுதாயத்தில் ஏமாறாமல், ஏமாற்றப்படாமல் பாதுகாக்க, இதுபோன்ற பயிற்சி முகாம்கள் பயன் தரும்,'' என்றார்.
பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ். எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தானந்த் பேசுகையில், ""சமுதாயத்தில் சிறப்பு நிலையை அடைய வேண்டும். அதற்கு, சமுதாயத்தோடு ஒன்றி வாழவும், தன்னால் முடிந்த அளவு உதவி புரியும் பக்குவமும் வர வேண்டும். வேலைக்காக வழிகாட்டும் பயிற்சியை முறையாக பெற்று, குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும், '' என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""2005-"06ம் ஆண்டின் கணக்கெடுப்பு படி, 15 சதவீதத்தினர் மட்டுமே, நுகர்வோர் சட்டம் குறித்து தெரிந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோராக நம்மை நம்பி சமுதாயமும், சமுதாயத்தை நம்பி நுகர்வோரும் இருக்கும் நிலையில், நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளும் ஏமாற்றப்படாதவாறு பெற வேண்டும். கடையில் வாங்கும் பொருட்களின் எடை, தயாரிப்பு, காலாவதி தேதி, விலை, தயாரிப்பு முகவரியை தெளிவாக பார்த்து வாங்க வேண்டும். தவறினால், உயிரை காப்பாற்ற பயன்படுத்தும் மருந்துப் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை கலப்படம், காலாவதியை பெற்று பயன்படுத்தி, இன்னலுக்கு ஆளாக நேரிடும். நுகர்வோர் தாங்களாகவே விழிப்புணர்வு பெற வேண்டும்,'' என்றார்.
மைய நிர்வாகி முருகன் மற்றும் பயிற்சியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக