அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 22 ஜூலை, 2010

சேவைக்கு என்ன தேவை?


தேசிய அளவில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த வேளையில், அதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டது. "சாலை விபத்தில் பலத்த காயமடையும் நபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும் முன்னரே உயிரிழக்கிறார்' என்பது தெளிவானது. இதற்கு மற்றொரு காரணம் இருந்தது "சட்ட சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால், விபத்தில் காயமடைந்தவர்களை தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக் கூறுகிறார்கள். உயிரைக் காப்பாற்ற வாய்ப்பளிக்கும் தங்க நிமிடங்களைத் தவற விடுவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது' என்பதே.

இதையொட்டியே, புதிய சட்ட முன்வடிவைத் தயாரிக்கத் தேவையான பரிந்துரைகளை அளிக்குமாறு மத்திய சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சரகம் கோரியிருந்தது. அதைத் தொடர்ந்து, ஆணையத் தலைவர் நீதிபதி எம்.ஜெகன்நாத ராவ் தலைமையிலான குழுவினர், "விபத்துகளால் காயமடைந்தோர் மற்றும் இதர ஆபத்தான நிலையில் இருப்போருக்குத் தேவைப்படும் அவசர சிகிச்சை' பற்றி விரிவான ஆய்வு நடத்தி,​​ 2006-ம் ஆண்டு அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

சட்ட ஆணையத்தின் பரிந்துரையை முன்வைத்து, அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் விபத்துக்கான அவசர சிகிச்சையை அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இது ஏற்கெனவே இருக்கும் நடைமுறைதான் என்றாலும், அரசின் உத்தரவுபடி அனைத்து மருத்துவமனைகளும் விபத்துக்கான அவசர சிகிச்சையை இப்போது அளித்து வருகின்றன.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு வருபவர் குறித்த விவரங்களை அருகேயுள்ள காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். அளிக்கும் சிகிச்சைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். இறந்தால், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க நேரிடும் என்பன போன்றவை  ஏற்கெனவே இருக்கும் சட்டங்கள்தான் என்றாலும், இப்போது அதை ஏற்று, அவை சிகிச்சை அளித்து, சாட்சியமும் அளிக்கின்றன. இப்போது, காப்பீட்டுத் திட்டத்திலும் தனியார் மருத்துவமனைகளோடு தமிழக அரசு ஒப்பந்தம் போட்டிருப்பதால் விபத்து தவிர பிற இயற்கை நோய்களுக்கும் தனியார் மருத்துவமனைகள் இலவசமாகவே மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றன.

ஆனால், தற்கொலை முயற்சி, கொலை முயற்சி, தீ விபத்து, அடிதடி போன்றவற்றில் பலத்த காயத்தோடு வரும் நோயாளிகளுக்கு பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் அனுமதி வழங்குவதில்லை. நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்துகின்றனர் இதில், மருத்துவமனைகளுக்குச் செல்லும் வழியிலேயே உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழக்கின்றனர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழகத்தின் தென்கோடியில் இறக்க நேரிட்டால், அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர், அவரது பிரேதத்தைப் பரிசோதனை செய்த அரசு மருத்துவர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடகிழக்கு மாநிலத்தின் ஒரு மூலையில் இருக்கும் நீதிமன்றத்திலிருந்து சம்மன் வருகிறது.

இப்படி, வழக்கில் சாட்சியமாக காவல்துறையால் சேர்க்கப்படுவதும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றப் படியேறி ஓய்ந்து போவதும் நீடிப்பதே,காவல்துறை வழக்கு தொடர்பான நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகள் புறக்கணிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

போலீஸôருக்குத் தகவல் தெரிவித்ததற்காக நோயாளிகளின் உறவினர்களாலேயே மிரட்டப்படுவதும், கொலை வழக்கில் சாட்சியம் அளிக்கச் செல்லும்போது, எதிராளிகளின் கொலை மிரட்டலுக்கு மருத்துவர்கள் ஆளாவதும் நடைபெறுகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில், எந்த வகையில் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடுபவராக இருந்தாலும் அவரை நோயாளியாகவே கருதி, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றுவதற்கான சிகிச்சையை அளிக்கிறார்கள். மேலும், அந்த மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்கான வசதி இல்லாவிட்டால், உரிய உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸ், மருத்துவர் வசதியோடு வேறு மருத்துவமனைக்கு இடம் மாற்றுகிறார்கள்.

 மேலும் கொலை முயற்சியில் பாதிக்கப்பட்டு, சுய நினைவை இழந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளியிடம் உரிய பணம், காப்பீடு அட்டை இல்லாவிட்டாலும்,அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்த பிற அரசிடம் இருந்து மானியத் தொகையைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

சட்டப் பிரச்னைகள் இருந்தாலும் அந்நாடுகளின் அரசும், சட்டமும் மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கின்றன. பெரிய அளவிலான வழக்குகள் தவிர,பிறவற்றில் மருத்துவரின் சாட்சியங்கள் விடியோ கான்பரன்சிங் மூலம் பெறப்படுகிறது. இதனால், நீதிமன்றப் படியேறுவது குறைகிறது.

இதுதவிர, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் அபராதம், படுக்கை மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாவிட்டால் அபராதம் என அரசும் சட்டம் இயற்றியிருக்கிறது.அரசு மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளும் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் செயல்பட வேண்டும் என்பதைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்,நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இப்போது விபத்துகளில் பாதிக்கப்படுவோரை அனுமதிக்கும் தனியார் மருத்துவமனைகள் கொலை, தற்கொலை முயற்சிகளில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றன. இதற்கு மருத்துவர்கள் கூறும் காரணத்தையும் புறக்கணிப்பதற்கில்லை.

விபத்தாகட்டும்,கொலை, தற்கொலை முயற்சி வழக்காகட்டும், உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு, மருத்துவர்களை அலைக்கழிக்கும் போக்கை நீதிமன்றமும், அரசும் கைவிட்டாலே, அனைவரையும் நோயாளியாகவே பாவித்து, சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக