பெருகும் வாகனங்கள்...! அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்...!
நாட்டின் மக்கள் தொகையைப் போலவே, வாகனப் பெருக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகத் தான் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, கான்ட்ராக்டர்கள் கோல்மால், அதிகாரிகள் மெத்தனம், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் என பல்வேறு காரணங்களால் இச்சாலை மேம்படுத்தும் பணிகளில் பல கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப தரமான சாலை வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் அரசு இயந்திரங்கள் திணறுகின்றன.அதிலும், இயந்திர வாழ்க்கை வாழும் சென்னைவாசிகள், சாலையில் மின்னல் வேகத்தில் பறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் விபத்துக்களும், உயிரிழப்புக்களும் தான் அதிகரிக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில், சென்னை நகரில் மட்டும் விபத்துக்களில் 888 பேர் பலியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக தமிழகத்தில் தான் அதிகமான வாகனங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 2006ம் ஆண்டு நாள் ஒன்றிற்கு 2416 வாகனங்கள் என்ற நிலை, 2007ல் 2645 ஆக உயர்ந்தது. இந்த வகையில் கடந்த 2006-07ம் ஆண்டு 91 லட்சம் வாகனங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டது. 2007-08ம் ஆண்டு ஒரு கோடியே 69 ஆயிரமாக மேலும் உயர்ந்தது. இதில், ஏழு லட்சத்து 6 ஆயிரம் வாகனங்கள் டிரான்ஸ்போர்ட் வாகனங்களாகவும், 93 லட்சத்து 63 ஆயிரம் வாகனங்கள் சொந்த உபயோகங்களுக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 82 சதவீதம் இருசக்கர வாகனங்கள்.சென்னை மாநகரில் கடந்த 2008ம் ஆண்டு 6823 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், 888 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்பை ஏற்படுத்திய 859 விபத்துக்களில், 857 விபத்துக்கள் டிரைவர்களின் தவறால் நடந்தவை.
இதில், 885 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. மோசமான சாலை காரணமாக நடந்த இரண்டு விபத்துக்களில் மூன்று பேர் இறந்துள்ளனர்.அரசு பஸ்களால் நடந்த 110 விபத்துக்களில் 117 பேரும், தனியார் பஸ்களால் நடந்த 24 விபத்துக்களில் 24 பேரும், லாரிகளால் நடந்த 189 விபத்துக்களில் 199 பேரும், கார், ஜீப், டாக்சி, டெம்போ போன்ற வாகனங்களால் நடந்த 176 விபத்துக்களில் 179 பேரும், இருசக்கர வாகனங்களால் நடந்த 180 விபத்துக்களில் 183 பேரும், மூன்று சக்கர வாகனங்களால் நடந்த 68 விபத்துக்களில் 69 பேரும், இதர வாகனங்கள் மூலம் நடந்த 112 விபத்துக்களில் 117 பேரும் உயிரிழந்துள்ளனர். இதைத் தவிர பல்வேறு இடங்களில் நடந்த 66 விபத்துக்களில் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், 4296 சிறுவிபத்துக்களில், 5060 பேர் லேசான காயமடைந்துள்ளனர். அதிலும், இருசக்கர, இலகு ரக வாகனங்கள் தான் விபத்துக்கள் அதிகமாக ஏற்படக் காரணமாக இருந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக