ஊட்டி: "மாணவர்களுக்கான போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம், வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு பஸ்களின் இயக்கம் குறைக்கப்பட்டு, கிராமப் பகுதிகளுக்கான பஸ்கள், நகரப் பகுதிகளுக்கு மாற்றி இயக்கப்படுகின்றன. இதனால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சில பஸ்களின் நடத்துனர்கள், பள்ளி , கல்லூரி மாணவ, மாணவியரை ஏற்றி செல்ல மறுக்கின்றனர். மாணவர்களை ஏற்றிச் செல்ல, போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
பஸ்சில் பயணிக்கும் முறை குறித்து, பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பல தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர், வரிசையில் நின்று பஸ்களில் ஏறி பயணிக்கின்றனர். இம்முறையை, அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும்.
இதை கண்காணிக்கவும், மாணவர்களை ஏற்றிச் செல்லாத பஸ்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், பள்ளி மாணவர்களிடையே ஒரு குழுவை ஏற்படுத்தினால் பயன் கிடைக்கும். தனிக்குழுவாக இல்லாவிட்டாலும் என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., மாணவர் படை, குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினர் இப்பணியை மேற்கொள்ளலாம்.
பள்ளி நிர்வாகங்கள் ஆதரவு தெரிவித்தால்,கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்- மக்கள் மையம் ஆதரவு தரும். பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, போக்குவரத்து, போலீசார், கல்வித் துறையினர் ஒன்றிணைந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக