கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 1.36 கோடி வீட்டு மின் இணைப்புகள், 19 லட்சம் விவசாய பம்ப்செட் மின் இணைப்புகள் உள்ளன. தமிழகத்தில் 15 ஆயிரத்து 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது உற்பத்தி செய்யப்படுவது, அதிகபட்சமாக, 9,100 முதல் 9,500 மெகாவாட் மட்டுமே. நம் தேவை 12 ஆயிரம் மெகாவாட். உற்பத்தி, சேமிப்பு மற்றும் வினியோகம் ஆகியவற்றில் ஏற்படும் இழப்பீடுகள் போக, நமக்குக் கிடைப்பது 9,100 முதல் 9,500 மெகாவாட் தான். வினியோகம் செய்யும் மின்சாரத்தில் 22 சதவீதம் விவசாயத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
மின்பற்றாக்குறையால் சமீபகாலமாக விவசாய பம்ப் செட்களுக்கு அரசு தினமும் எட்டு முதல் 10 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குகிறது. பம்ப்செட் மோட்டார் தரம் குறைவாக இருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது. அதற்கு பதிலாக திறன் மிக்க மோட்டார் பொருத்துவதால் 20 சதவீதம் மின்சாரம் சேமிக்க முடியும் என்பதால் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மோட்டார் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பொதுவாக விவசாய பம்ப்செட் மோட்டார்களில் பழமையான மோனோபிளாக் மோட்டார், ஆழ்துளை கிணறு தோண்டி தண்ணீர் உறிஞ்சும் கம்பரசர் மோட்டார், கிணற்று நீரின் உள்ளே போடும் சப்-மெர்சிபிள் மோட்டார் என மூன்று ரகம் உள்ளது. முன்பு, விவசாயிகள் கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்ச மோனோ பிளாக் மோட்டாரை பயன்படுத்தினர். அதன் பின், ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சுவதற்காக சப்-மெர்சிபிள் மோட்டாரையும், கிணறு தோண்டாமல் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதற்காக கம்பரசர் மோட்டாரையும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார்களால் ஏற்படும் பிரச்னைகள் தவிர, வேலை செய்ய ஆட்கள் கிடைக்காமை, விவசாய பயிர்களுக்கு குறைந்த கொள்முதல் விலை உட்பட பல பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில், இந்தத் திட்டத்தை பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் வரவேற்கின்றனர். எனினும், எந்த அடிப்படையில் மோட்டார் வழங்கப்பட உள்ளது, மின்மோட்டார் எந்த வகையில் பயன் தரும், தரமாக இருக்குமா, பராமரிப்புக்கு எந்த நடைமுறையை அரசு பின்பற்றப் போகிறது என்பது போன்ற பல கேள்விகளையும் அடுக்குகின்றனர்.
இதோ விவரங்கள்:
* மேட்டூர் அடுத்த கோயில்பாளையம் விவசாயி ராஜேந்திரன்: பம்ப்செட் மோட்டார்களில் 3 எச்.பி., 5 எச்.பி., 7.5 எச்.பி., 10 எச்.பி., மோட்டார் உள்ளன. விவசாயிகள் பலர் 3 மற்றும் 5 எச்.பி., திறன் கொண்ட மோட்டாரையை அதிகம் உபயோகிக்கிறோம். விவசாயிகள் ஏற்கனவே பயன்படுத்தும் குதிரை திறன் கொண்ட மோட்டாரை வழங்கினால் மட்டுமே உபயோகமாக இருக்கும். அகில இந்திய இயற்கை உழவர் இயக்க நிர்வாகியான காவேரிபுரத்தை சேர்ந்த குப்புசாமி: தற்போது ஒரு 5 எச்.பி., மோனோ பிளாக் மோட்டார் 8,000 ரூபாய் வரை விற்கிறது. மோட்டாரில் ஒரு முறை காயில் எரிந்து போனால், அதை சரி செய்ய 4,000 ரூபாய் வரை செலவாகிறது. எனவே, அரசு வழங்கும் மோட்டார் தரமானதாக இருக்க வேண்டும்.
* கொளத்தூர் செல்லியம்மன் உழவர் மன்ற தலைவர் சுந்தரம்: நாள்தோறும் எட்டு முதல் 10 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைக்கிறது. அந்த மின்சாரம் போதுமானதாக இல்லாதால் பெரும்பாலான விவசாயிகள், அதன் பின் வினியோகம் செய்யும் இருமுனை மின்சாரம் மற்றும் கன்டென்சர் மூலம் மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுக்கின்றனர். மோட்டார், "காயில்' கருகி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மின் மோட்டார் அரசு வழங்கும் பட்சத்தில், விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரத்தை அதிக நேரம் வழங்கினால் மட்டுமே விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்கும்.
* செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு விவசாயி நடராஜன்: சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இவர்கள், 3 எச்.பி., மோட்டார் பயன்படுத்துகின்றனர். இதனால் மின்சாரம் அதிகளவில் மிச்சமாகாது. அத்துடன் சிறு, குறு சான்றிதழ் வாங்குவதற்கு அதிகாரிகளுக்கும், பரிந்துரை செய்யும் ஆளுங்கட்சியினருக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ற கட்டுப்பாட்டை நீக்கினால் அரசுக்கு பலன் கிடைக்கும்.
* திண்டிவனம் ரோஷணை விவசாயி ஏழுமலை: பழைய மின் மோட்டாரை அகற்றி விட்டு புதிய மின் மோட்டார் பொருத்துவதால் நேரம் விரயமாவது தடுக்கப்படும். இரண்டு ஏக்கர் நிலத்தில் தினமும் 10 யூனிட் மின்சாரம் என்பது, முதல்வர் திட்டத்தால் ஏழு யூனிட் தான் செலவாகும். எனினும், குறித்த நேரத்தில் மின்சாரம் முறையாக வழங்கப்படாததால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
* கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி கூறியதாவது: சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு சலுகைகளை வழங்கி அரசிடம் கையேந்த வைப்பது நியாயமாகாது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு கட்டுப்படியான விலையை அரசு வழங்கினாலே போதுமானது; எந்த மானியமும் தேவையில்லை. அரசே திட்டமிட்டு சலுகைகளை அறிவித்து, விவசாயிகளை பிச்சைக்காரர்களாக கையேந்த வைக்கிறது. இது நாடு முழுவதும் நடக்கிறது. இதை, மக்கள் நலத்தில் அக்கறை கொள்ளும் எந்தவொரு அரசும் செய்யாது. தமிழக அரசு, 50 விவசாய ஆராய்ச்சி பண்ணைகளை வைத்துள்ளது. இதில் 25 பண்ணைகளில் அரசு விவசாயம் செய்து, வணிக நோக்கில் நெல், கரும்பு போன்றவற்றை சாகுபடி செய்ய வேண்டும். உற்பத்தி செலவுடன், 25 சதவீதம் சேர்த்து விலையை நிர்ணயித்தாலே போதுமானது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உட்பட எவ்வித சலுகைகளும் தேவையில்லை.
* கடலூர் தாலுகா கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி கோதண்டராமன்: புதிய மோட்டார் போட்டால், ஐந்து ஆண்டுகள் சிறப்பாக இயங்கும். அதன் பின் மோட்டாரின் பேரிங், புஷ் போன்ற பாகங்கள் தேய்மானம் அடைவதால், மின்சாரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளும். எனவே, கூடுமானவரை, தரமான மோட்டார் கொடுத்தால் நல்லது.
* சிதம்பரம், உழவர் மன்றத் தலைவர் ரவீந்திரன்: சமீப காலமாக ஏற்பட்டு வரும் மின் தட்டுப்பாட்டைப் போக்க, வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் மின் மோட்டார் வழங்கப்பட்டது. அதிக விலை மற்றும் தரமில்லாத மோட்டார்கள் வழங்கப்பட்டன. எனவே, இத்திட்டம் விவசாயிகளுக்கு பயன் தரவில்லை. முதல்வரின் திட்டம் மகிழ்ச்சி அளித்தாலும், அடிக்கடி ஏற்படும் மின் நிறுத்தத்தை கருத்தில் கொண்டு, குறைவான நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்ப் செட் வழங்கினால் வசதியாக இருக்கும். புதிய இணைப்பு கேட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இலவச பம்ப் செட் வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.
* கடலூர், வெலிங்டன் நீர்த்தேக்க நீர் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் கொத்தட்டை ஆறுமுகம்: சிறு, குறு விவசாயிகள் புதிய சான்று பெறுமாறு அறிவுறுத்தப்படுவதால், வருவாய்த் துறையினரால் அலைக்கழிக்கப்படுவர். இதைத் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலர் முத்தரசன் (திருத்துறைப்பூண்டி): யானையின்றி அங்குசம் வாங்குவது போன்றது இந்த அறிவிப்பு. விவசாயிகள், வர்த்தகம், சிறுதொழில்கள், தொழிற்சாலைகள், கல்விக்கு முழுமையான மின்சாரம் தேவைப்படும் நிலையில், இதை மூடி மறைக்கவே இதுபோன்ற அறிவிப்புக்களை அரசு செய்கிறது. மின்சாரத்துக்கு முழுமையான உத்தரவாதத்தை தராத வரையில் இதுபோன்ற அறிவிப்புக்களால் விவசாயிகள், பொதுமக்களை திருப்திபடுத்த இயலாது.
* தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன்: நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தான் மோட்டார் பயன்படுத்துகின்றனர். நீர்மட்டம் குறைந்ததால் 5 எச்.பி., மோட்டாருக்கு பதில் 7.5 எச்.பி., மோட்டாரும், 10 எச்.பி., மோட்டாரும் பயன்படுத்துகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 50 ஆயிரம் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. பகலில் நான்கு மணிநேரம், இரவில் ஒரு மணி நேரம் தான் மின்சாரம் கிடைக்கிறது. இதனால், இத்திட்டம் செயல்படுத்தும் முன், மும்முனை மின்சாரம் வழங்குவதை உறுதிபடுத்திவிட்டு, விவசாயிகளுக்குத் தேவையான மோட்டாரை வழங்க வேண்டும். ஏற்கனவே டீசல் மோட்டாருக்கு டீசல் மானியம் வழங்குவதாக கூறியதில், அரசியல் சார்புடையவர்கள், மோட்டாரே இல்லாதவர்கள், போலி பில் கொடுத்து மானியம் பெறுகின்றனர். பயனாளி பட்டியல் கூட வெளியிடவில்லை. மின்தடையுடன் மின்மோட்டார் வழங்குவதைவிட, டீசல் மோட்டார், டீசல் மானியத்தை வழங்கலாம். ஒரு விவசாயிக்கு, ஒரு போகத்துக்கு 120 நாளைக்கு, எவ்வளவு தண்ணீர் தேவை, அதற்கு எவ்வளவு டீசல் வேண்டுமென கணக்கிட்டு, அதற்கான தொகை வழங்கினால் சிறப்பு. மின்மோட்டார்தான் வழங்க வேண்டும் என்றால், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்து, விவசாயிகளின் தேவை அறிந்து, அரசியல் கலக்காமல் வழங்க வேண்டும்.
* அய்யம்பேட்டை ரமணி, கடகடப்பை சந்திரசேகர்: இலவச "டிவி' போல, அரசின் மோட்டாரும் வாங்கி பத்து நாளில் பழுதானால் அதை யாரிடம் சரி செய்வது, அதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என பல பிரச்னை வரும். விவசாயிகளின் தேவை அறிந்து கூடுதல் செலவானாலும், அவர்கள் கேட்கும் எச்.பி., மோட்டார், தரமான கம்பெனி மோட்டாராக வாங்கித் தர வேண்டும். பழுது ஏற்பட்டால் அதை குறிப்பிட்ட நிறுவனத்தார், உடனே பார்க்க வேண்டும். இதற்கும், "மின்சாரம் வழங்க உத்தரவாதம் தர முடியுமா?' என கேள்வி எழுகிறது. இப்போது, எங்கள் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதை சரி செய்யவே பத்து, 15 நாள் ஆகிறது. இத்திட்டம் விவசாயிகளுக்கு பலன் தருவது கேள்விக்குரியது தான்; கேலிக்குரியதும் தான்.
* பல்லடம், கூத்தாமண்டிப் பிரிவு லெனின்: இத்திட்டம் வரவேற்கத்தக்கது. இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகளிடம் ஏதாவது கூறினால், "உங்களுக்கு என்ன குறை? எல்லாம் இலவசம்' என்று கூறுகின்றனர். இந்நிலையில் மின்மோட்டார் இலவசம் என்றால், மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு கொடுக்க, ஓராண்டு தாமதம் செய்வர். எனவே, மின் மோட்டார் கொடுக்கும்போதே, மின் இணைப்பும் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால், விவசாயிகள் பயன் பெறுவர்.
* கிரிச்சிபாளையம் விவசாயி பழனிச்சாமி: விவசாயத்துக்கு போதிய அளவு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை என்பதால், பல்லடம் பகுதியில் விவசாயம் நலிவடைந்து வருகிறது. இலவச மின் மோட்டார் கொடுக்கும் உத்தரவை அடுத்து, விவசாயத்துக்கு ஆட்கள் பற்றாக்குறையை போக்க, நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் உள்ளவர்களை, விவசாய பணிகளுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சுப்பிரமணியன் (கண்ணமநாயக்கனூர் விவசாயி): மானியத்தில் பயன்பெற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். வருவாய்த்துறை, பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் அடங்கிய குழு அமைத்து மானியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* மணி (மருள்பட்டி விவசாயி): பல்வேறு சான்றிதழ்களை வாங்கி அலைக்கழிக்காமல், கிராம நிர்வாக அலுவலர் மூலம் திட்டத்தை நேரடியாக செயல்படுத்தலாம்.
* வேலுசாமி, ராயம்பாளையம்: திருப்பூர் மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் தண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. மொத்த பூமியில் முக்கால்வாசி "வானம் பார்த்த பூமியாகவே' இருக்கிறது. இலவச மோட்டார் தருவதை விட, அவிநாசி - அத்திக்கடவு தண்ணீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றினால், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 ஒன்றியங்கள் பயன்படும். அழிந்து போகும் நிலையிலுள்ள விவசாயமும் காப்பாற்றப்படும். தண்ணீர் ஆதாரத்தை மேம்படுத்தாமல், மோட்டார் தந்து புண்ணியமில்லை. உண்மையாகவே விவசாயிகளின் துயரை துடைப்பதென்றால், நெல்லுக்கு, கரும்புக்கு உரிய விலையும், பிற விளைபொருட்களுக்கு நியாயமான விலைகளையும் பெற்றுத் தர அரசு முன் வர வேண்டும்.
* பழனிசாமி, சாமந்தக்கோட்டை: செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதல், தென்னை மரத்தில், "யூரியோபைட்" தாக்குதல், தண்ணீர் இல்லாமை உட்பட பல காரணங்களால், விவசாயம் அழிந்து வருகிறது. அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை கண்காட்சியில் தான் கட்ட வேண்டும் போல் உள்ளது.
* அப்புக்குட்டி, சாலையப்பாளையம்: இடு பொருட்களின் விலை உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை, தொழிலாளர் கிடைக்காமை போன்றவற்றாலும் விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலையில், இது போன்ற கவர்ச்சி திட்டங்களால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், கிராமத்தில் உள்ள பெண்கள் வேலைக்குச் சென்று விடுகின்றனர். அதை விட அதிக சம்பளம் கொடுத்தாலும், தோட்ட வேலைக்கு யாரும் வருவதில்லை. தண்ணீரை அதிகரிப்பதற்கான பல திட்டங்களை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ள நிலையிலும், இலவச மோட்டார் தருவது உண்மையிலேயே வெறும் கண் துடைப்பு மட்டுமே. நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு இரு ஏக்கர் நிலம் தரவேயில்லை என்ற நிலையில், தற்போதைய அறிவிப்பும் காற்றில் கரைந்து விடும்.
* முத்தணம்பாளையம் "ஏ' பாசன குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி: பழைய மோட்டருக்கு புதிய மோட்டர் மானியத்தில் வழங்குதல், ஏற்கனவே உள்ள திட்டம். இதை சிறிது மாற்றம் செய்துள்ளனர். குறைந்த அளவிலான விவசாயிகளுக்கு மட்டும் பயன்படும். பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தேர்தல் வருவதால் விவசாயிகளை கவர, கவர்ச்சிகரமான திட்டம்; மின் இணைப்பு பெறுவதில், பெயர் மாற்றம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இவற்றை எளிமைப்படுத்த வேண்டும்.
* விவசாயி ஜெகனாதன்: விவசாயிகளின் உண்மையான தேவையை யாருமே நினைத்து பார்ப்பதில்லை. ஆட்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உள்ளது. ஒரு ஆளுக்கு 400 ரூபாய் வரை கூலி கொடுக்க வேண்டியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஊராட்சி தலைவரிடம் கூறிவிட்டால், தேசிய வேலை வாய்ப்பு திட்டம் மூலம் விவசாயத்துக்கு ஆட்கள் அனுப்புகின்றனர். அரசு சார்பில் 100 ரூபாய், விவசாயி சார்பில் 100 ரூபாய் என கூலியும் கொடுத்து விடுகின்றனர். வரும் நாட்களில் விவசாய தொழில் எங்கே முடியும் என்று தெரியவில்லை. ஆட்கள் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான வழி வகை செய்ய வேண்டும்.
* தர்மராஜ், பழநி: விளைநிலங்கள் "பிளாட்'களாக மாறும் சூழலில், இதுபோன்ற சலுகை விவசாயத்தை ஊக்குவிக்கும். அரசியல் குறுக்கீடு, அதிகாரிகளின் வசூல் தொந்தரவு இல்லாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறைந்தளவு நிலம் உள்ள விவசாயிகளில் பலர், ஆயிரக்கணக்கில் காப்புத்தொகை செலுத்தி மின் இணைப்பு பெற முடியாமல் உள்ளனர். இவர்களுக்கு மின் இணைப்பு, போர்வெல் ஏற்படுத்திக் கொடுக்க அரசு முன் வர வேண்டும். விவசாய மின் இணைப்பிற்கு கட்டணம் செலுத்திய போது பயன்படுத்திய அளவை விட, தற்போது 10 மடங்கு அதிகமாக விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். புதிய மின் பம்ப் வழங்குவதால், மின் பயன்பாட்டு அளவு 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. கூடுதல் சக்தி கொண்ட மின் பம்ப்களை பயன்படுத்துதல், இருமுனை மின் வினியோகத்தின் போது "கண்டன்சர்' கருவி மூலம் மும்முனையாக மாற்றி பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரச்னைகளால் அடிக்கடி மின்வினியோகம் தடைபடுகிறது. இது தவிர மின்வாரியம் ஏற்படுத்தும் தடையால், முறையாக அறிவிக்கப்பட்ட நேரங்களில் மின் வினியோகம் கிடைப்பதில்லை. மாறாக முன்னறிவிப்பின்றி எப்போது வரும், எப்போது நிற்கும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.
* ஆர்.மாயகிருஷ்ணன், கூடலூர், தேனி மாவட்டம்: திட்டம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும், முறையாக சிறு விவசாயிகளிடம் வந்து சேருமா என்பதில் சிக்கல் உள்ளது. ஏற்கனவே நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மோட்டார் தரமான கம்பெனியாக இருக்கும். அரசு தர உள்ள புதிய மோட்டார் அதே தரத்தில் இருக்குமா என்பதும் கேள்விக்குறி தான். அடிக்கடி பழுது ஏற்பட்டால் அதை சரி செய்யவே நேரம் சரியாகி விடும். திடீர் மின் தடையால் மோட்டார் அடிக்கடி பழுதடைய தான் வாய்ப்புள்ளது. மோட்டார் வினியோகம் செய்ய அரசு டெண்டர் விடும் போது, குறைந்த விலைக்கு எடுப்பவர்கள் எப்படி தரமான மோட்டார்களை வழங்க முடியும்?
* சின்னக்கண்ணு (அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் மாவட்டம்): குறைந்த அழுத்த மின்வினியோகத்தால் பல கிராமங்களில் "டியூப்' லைட் போடுவதே பெரிய விஷயம். கால்வாய் பாசனம் இல்லாமல் மழையை நம்பியுள்ள கிராமங்களில் தான் இந்நிலை. மோட்டார் இலவசமாக வழங்கப்பட்டால் கிணற்று பாசனம் மூலம் பயனிருக்கும் என்றாலும், மின்வினியோகம் முழுமையாக இல்லாத போது அவை எப்படி இயங்கும்?
* எல். ஆதிமூலம், விவசாய சங்க சிவகங்கை மாவட்ட தலைவர்: நாள் ஒன்றுக்கு விவசாயத்திற்கு 10 மணி நேரம் மின்வினியோகம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தமிழகத்தில் தரமற்ற அளவில், குறைவான சக்தியுடன், குறைந்த நேரத்திற்கு தான் வினியோகம் செய்கின்றனர். இதனால், தான் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. தேர்தலுக்கான சலுகையாக இருந்தாலும், விவசாயிகளிடத்தில் வரவேற்கத்தக்க விஷயம் தான். அதே நேரம் புதிய மின்மோட்டாரினால், தேய்மான செலவு வேண்டுமானால் குறையலாம்; மின்சேமிப்பு இருக்காது.
* பி.பால்சாமி, விருதுநகர்: இலவச பம்ப்செட் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. மும்முனை மின்சாரம் சரியாக வழங்காததால் மோட்டார் புகைந்து விடுகிறது. மேலும் "பம்ப்செட் புட்பால் வாஷர்' மாற்றுவது உட்பட பல்வேறு பராமரிப்பு செலவு அதிகரித்து வருகிறது. எனினும், இலவச "டிவி' வழங்கியது போல், "பம்ப்செட்'களை அரசே நேரடியாக வழங்க வேண்டும். மேலும் மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனே வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தால் இன்னும் பல விவசாயிகள் பயன் பெறலாம்.
* தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொது செயலர் ஆறுபாதி கல்யாணம்: சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும் மோட்டார் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. விவசாயிகளிடம் இது போன்ற பாகுபாடு கூடாது. மின்சாரத்தை சேமிக்க வேண்டுமானால் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய 15 லட்சம் மின் மோட்டார்களையும் ஒரே சமயத்தில் மாற்ற வேண்டும். ஒரே நேரத்தில் நிதி ஒதுக்கி தரமான மோட்டார்களை வழங்கினால் தான், 20 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும். தேசிய விவசாய ஆணையம், மீன் வளர்ப்பு உள்ளிட்டவற்றை விவசாயமாகக் கருதி அதற்கான சலுகை அளிக்கக் கூறியும், தமிழக அரசு அமல்படுத்தாமல் உள்ளது. வேளாண் உற்பத்தியை பாதிக்கும் வகையில், இலவச மின்சாரத்தை பறிக்க சதி செய்வது நியாயமில்லை. தமிழகத்தில் உள்ள நீர்பாசனம் உறுதியளிக்கப்பட்ட 30 லட்சம் எக்டரில் 15 லட்சம் எக்டருக்கு மேற்பட்ட நிலங்களில் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. மோட்டார்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை இலவச மின்சாரம் என கூறி விவசாயிகளை கொச்சை படுத்தாமல் வேளாண் உற்பத்தி மின்சாரம் என அரசு அறிவிக்க வேண்டும்.
மின்வாரிய அதிகாரிகள்: பெரும்பாலான விவசாயிகள், மோட்டாருக்கு எரிந்து போன, "காயிலை' தரம் குறைவான கம்பிகளை கொண்டு உள்ளூரிலேயே கட்டி பயன்படுத்துகின்றனர். அதன் தரம் குறைவாக இருப்பதால் கூடுதல் மின்சாரம் செலவாகிறது. மேலும் கம்ப்ரசர் மோட்டாரை ஆன் செய்து விட்டு வெளியில் சென்று விடுவதால், நாள் முழுதும் மோட்டார் ஓடிக் கொண்டிருக்கும். இதனால் மோட்டாரும் கெடுகிறது; இலவச மின்சாரமும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பம்ப்செட் மோட்டார் இயங்குவதற்கு 420 முதல் 440 வோல்ட் மின்சாரம் தேவை. மும்முனை மின்சாரம் இல்லாத சமயத்தில் கன்டென்சர் மூலம் பம்ப்செட் மோட்டார்களை இயக்கி தண்ணீர் எடுக்கின்றனர். அப்போது தேவையான அளவு மின்சாரம் மோட்டாருக்கு கிடைக்காததால், மோட்டார் பழுதடைந்து விடுகிறது. தற்போது கன்டென்சர் உபயோகித்து இயக்க முடியாத பம்ப்செட் மோட்டார்களும் விற்பனைக்கு வருகின்றன. இந்த சிக்கலான பிரச்னை குறித்து, அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
மின் சிக்கனத்தைக் கடைபிடிக்க அரசு எடுத்துள்ள முயற்சி, விவசாயிகளுக்கு மட்டுமல்ல; இந்த மின் சிக்கனம் மூலம் பொதுமக்கள் பலன் அடைவர் என்பதும் உண்மை. எனினும், விவசாயிகள் கூறியுள்ள கருத்துக்கள் ஒதுக்கித் தள்ளக் கூடியதல்ல. டீசல் விலை ஏறியபோது, பம்ப்செட் இயக்க முடியவில்லை என, விவசாயிகள் கூறினர். உடனே டீசல் மோட்டாருக்கு மானியம் வழங்கப்பட்டது. இது, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பலன் அளிப்பதாக இருந்தது. இப்போது, தமிழகம் முழுதும் மின் வெட்டு பரவலாக இருப்பதால், புதிய மின்மோட்டார் மூலம் சிக்கனத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், விவசாயத்திற்கு தண்ணீரே இல்லாத போது, மின் மோட்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்வது, ஆள் பற்றாக்குறையுடன் எப்படி பணியாற்றுவது என்ற கேள்விக்கெல்லாம் அரசு தீர்வு காண வேண்டும் என்பது, அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கேரளாவில் உள்ளது போல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆட்களைத் தேர்வு செய்து, விவசாய வேலைக்கு அனுப்புதல், கோவை, திருப்பூர் மாவட்ட தண்ணீர் பிரச்னை, காவிரி ஆற்றுப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது, பாய்ந்தோடும் வழியிலெல்லாம் சாயக் கழிவுகளை ஏந்திச் செல்லும், நொய்யல் ஆற்றைச் சுத்தம் செய்தல் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்க, அரசு ஆவன செய்தால், தமிழகத்தில் விவசாயம் செழிக்கும்.
எவ்வளவு விவசாயிகள் உள்ளனர்?
* மாநிலத்தில் மொத்தம் 19 லட்சம் பேர், பம்ப்செட் வைத்துள்ளனர்.
* இவர்களில் 15 லட்சம் பேர் சிறு, குறு விவசாயிகள். இவர்களில், யாருடைய மின்மோட்டார் பழுதடைந்துள்ளதோ, அவர்களுக்கு மட்டும் இலவசமாக மின் மோட்டார் கொடுக்கப்பட உள்ளது.
* மீதமுள்ள நான்கு லட்சம் பேர், ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள். இவர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் மின் மோட்டார் கொடுக்க உள்ளதாக அரசு கூறியுள்ளது.
மக்கள் என்ன சொல்கின்றனர்? "இத்திட்டம் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இதற்கான நிதியை அரசு எங்கிருந்து பெறப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறி' என்கின்றனர் பொதுமக்கள்.
அவர்கள் கேட்பது:
* இதற்கான நிதியை அரசு எங்கிருந்து திரட்ட உள்ளது?
* மத்திய அரசு கொடுக்குமா? திட்டக் கமிஷனிடம் கோரிக்கை வைக்க உள்ளதா?
* மாநில அரசே தரப் போகிறதா?
* மாநில அரசு எனில், தனியாக நிதி ஒதுக்கப்படுமா?
* வேறு திட்ட நிதியிலிருந்து எடுத்துக் கொடுத்தால், அந்தப் பற்றாக்குறையைச் சரி செய்ய, அரசு என்ன செய்யப் போகிறது?
எவ்வளவு செலவாகப் போகிறது? கடந்த ஆண்டு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்காக, தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, 5,828 கோடி ரூபாயை, தமிழக அரசு மானியமாகக் கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டைய செலவான 1,191 கோடியே 80 லட்சம் யூனிட் மின்சாரத்துக்கான செலவுத் தொகை இது. இந்த ஆண்டு, இந்த அளவை விட அதிகமாக மின்சாரம் செலவாகும் என்றும், மானியத்தை அதிகரிக்குமாறும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அரசிடம் கேட்டுள்ளது. தற்போது, புதிய மின் மோட்டார் பொறுத்தப்படும் பட்சத்தில், 20 சதவீத மின்சாரத்தைச் சேமிக்கலாம் என முதல்வர் கூறியுள்ளார். இதன் மூலம், ஆண்டு ஒன்றுக்கு 238 கோடியே 20 லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்க முடியும். ஒரு யூனிட்டுக்கு 4.89 ரூபாய் என்ற கணக்கு அடிப்படையில், 1,165 கோடி ரூபாய் சேமிக்க முடியும். ஒரு மின் மோட்டாருக்கு 15 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப் போவதாக அரசு நேற்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அரசின் 50 சதவீத மானியத்தில் வேளாண் துறை மூலமாக பெறப்பட்டுள்ள மோட்டார்கள் போக, மீதமுள்ள 14 லட்சம் மின் மோட்டார்களில், பழுதடைந்தவை மட்டும் மாற்றப்படும். 14 லட்சம் என்ற கணக்கு வைத்துக் கொண்டாலும், 2,100 கோடி ரூபாய் அரசுக்குச் செலவாகப் போகிறது. அரசு வழங்க உள்ள மின் மோட்டார், ஐந்து ஆண்டுகளில் பிரித்து வழங்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அந்தக் கணக்குப்படி பார்த்தால், ஒரு ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் செலவாகும்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு இது தான்!
* சீரான மின்சப்ளை இன்றி, என்ன செய்ய முடியும்?
* அரசு வழங்க உள்ள மின் மோட்டார் தரமானதாக இருக்குமா?
* திடீரென பழுது ஏற்பட்டால், யார் சரிசெய்யப் போகின்றனர்?
* சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் எளிதில் கிடைக்குமா?
* அரசியல் தலையீடு இல்லாமல், அரசே நேரடியாக கொடுக்குமா?
* தண்ணீர் பிரச்னையை கவனிக்க வேண்டாமா?
* விளைச்சல்களின் கொள்முதல் விலை அதிகரிக்குமா?
* ஆள் பற்றாக்குறையை தீர்க்க அரசு என்ன செய்யப் போகிறது?
* திட்டம் நீர்த்துப் போகாமல் இருக்க, என்ன வழிமுறைகளை அரசு கையாள உள்ளது?
- இலவச மின் மோட்டார் விவகாரம் குறித்து வாயைத் திறந்தாலே, விவசாயிகள், இப்படி "மளமள'வென கேள்விகளை அடுக்குகின்றனர்.