அன்னா...விருட்சமாகும் ஒரு விதை!
ஏம்ப்பா, அவர் சொல்றதை கவர்மென்ட் ஏத்துக்குமா? ஏத்துண்டா நல்லது தாம்பா எதிர்காலத்துல..
* ஆமாமா... கம்யூனிட்டி சர்ட்டிபிகேட் வாங்கறது மொத, எல்லாத்துக்குமில்லே நோட்டை நீட்ட வேண்டியிருக்கு... இதுக்கு முடிவு வந்தா சுபிட்சம் வந்திரும்ல..
அது சரி தான், நம்ம ஜனநாயக நாட்டுல, பார்லிமென்ட் எதுக்கு இருக்கு; அது தானே எல்லாத்தையும் செய்யணும்; அதை இவரெல்லாம் மிரட்டறது நல்லாவா இருக்கு...
?
நீ சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. எப்படியோ நல்லது நடந்தா சரிதேன்...�
இப்படி நாகர்கோயில் பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருந்த நேரத்தில், ருசிகரமான அளவளாவல் காற்றில் மிதந்தபடி வந்தது.
இவர்கள் பேசியது சரியா, தவறா என்று பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், யாரை பற்றி இந்த படிப்பறியா மக்கள் பேசிக் கொண்டிருந்தனர் என்றால் வியப்பான ஒன்று.
அவர் தான், அன்னா ஹசாரே. சமூக ஆர்வலரான இவர், நாட்டில் ஆட்சி, அரசு நிர்வாகத்தில் ஊழலை முற்றிலும் ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர். அரசுடன் இவர் தலைமையிலான குழு பேச்சு நடத்தினாலும், இது நாள் வரை இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. மசோதாவை நிறைவேற்றும் பொறுப்பு, பார்லிமென்ட்டிடம் தானே இருக்கிறது.
லோக்பால் மசோதாவில் பிரதமர், நீதிபதிகள் ஆகியோரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் அன்னா. இதை மத்திய அரசு ஏற்கவில்லை. மேலும் சில முக்கிய விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
நம் நாடு ஜனநாயக நாடு. மக்களாட்சியில் ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். ஆகையால், நாட்டின் மீதுள்ள அக்கறையில் சிவில் சொசைட்டியினர் சொல்லும் யோசனைகளை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தங்களது யோசனைகள் எல்லாவற்றையும் மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று அரசை பணிய வைக்கும் தொனியில் வரம்பு மீறக்கூடாது தானே.
அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றவர்களை லோக்பால் மசோதாவின் வரம்புக்குள் சேர்ப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து பரிசீலனை செய்ய கால அவகாசம் தர வேண்டும்.
முதலில் மசோதாவை தாக்கல் செய்ய அரசை அனுமதித்தாலே போதும். அதன் பின், மாநில சட்டப் பேரவைகளுக்கு அனுப்பி, அவற்றின் கருத்தை அறிய முடியும். அதையடுத்து, லோக்பால் மசோதா எல்லா கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்ற முடியும்.
நமது அரசியலமைப்பு சட்டம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதுவரையில் 114 முறை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது எல்லாம் எப்படி சாத்தியமானது. மக்களாட்சியில் எல்லாமே சாத்தியம்தான். முடியாதது என்பது ஒன்றும் இல்லை.
அன்னா போன்ற சமூக ஆர்வலர்கள் போட்டது விதை தான்; அது ஆலாய் பரந்து விரிந்து விருட்சமாக பலன் கொடுக்கப்போவது மட்டும் உறுதி.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்