அங்கீகாரம் பெறாமல் இயங்கும் கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-06-22 10:35:55
ஊட்டி: மாவட்டத்தில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்கள் உரிய அங்கீகாரத்துடன் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். அங்கீகாரம் பெறாமல் இயங்கும் கல்வி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மாவட்டத்தில் அங்கீகாரமற்ற கல்வி நிலையங்கள் மூலமாக பயனற்ற கல்வி வழங்கப்படுகிறது. ஆசிரியர், கணினி, கேட்டரிங், நர்சிங், தொழிற்பயிற்சி என சில பயிற்சி நடத்தும் நிறுவனங்கள் அரசிடம் உரிய முறைப்படி அங்கீகாரம் பெறுவதில்லை. அரசு அங்கீகாரம் பெறாமல் அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஏமாற்றுகின்றனர். சான்றிதழ் படிப்புகள் மற்றும் பட்டபடிப்புகளுக்கு சான்று வழங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்நுட்ப துறைகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படிப்பை நடத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் மட்டுமே மாணவர்களை தேர்வில் பங்கேற்க வைக்க முடியும். மற்ற அங்கீகாரம் பெறாத கல்வி நிலையங்கள் அரசு தேர்வுக்கு மாணவர்களை பரிந்துரைக்க முடியாது.
கணினி பயிற்சி, தட்டச்சு பயிற்சி உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் நடத்த சம்பந்தப்பட்ட பாடங்களில் முதுநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதற்கான கட்டுமான வசதிகளும், மாணவர்களுக்கு பயிற்சி வழங்க போதுமான தளவாடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அங்கீகாரமற்ற கணினி, தட்டச்சு, கேட்டரிங், நர்சிங் பயிற்சிகள் வழங்கும் நிலையங்கள் பெருகி வருகின்றன. இந்நிறுவனங்கள் தரும் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி ஏமாறுகின்றனர். பயிற்சிகளுக்கு கட்டணமாக 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நிர்ணயிக்கின்றனர். ஏழை மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளையடிகின்றனர். இதுபோன்ற பல கல்வி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவதில் இருந்து தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் செயல்படும் கல்வி நிலையங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக