முறைகேடு தொடர்பான புகார் வந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை
கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-06-22 10:38:42
ஊட்டி: ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனி அலுவலர் எச்சரித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் துறை ரீதியான மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ‘‘ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகள் பேட்டரி சார்ஜ் நிற்பதில்லை என கூறி பழைய எடைக்கற்கள் தாரசுகளை பயன்படுத்துகின்றனர். புதிய பேட்டரிகள் மாற்றி மின்னணு தராசுகள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பங்க்களில் மதியத்திற்கு மேல் மண்ணெண்ணெய் தருவதில்லை.
சில ரேஷன் கடைகளில் பணியாளர்கள் உரிய நேரத்தில் கடையை திறப்பதில்லை.
தரமற்ற பொருட்கள் உடனடியாக திரும்பபெற்று தரமான பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும். என்.சி.எம்.எஸ் மூலம் கூடலூரில் மட்டும் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
பந்தலூரில் உர குடோன் அமைக்க வேண்டும். ஏஜன்டுகள் மூலமாக கிராமபுற பகுதிகளில் கூட்டுறவு மூலம் உர விற்பனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
தனி அலுவலர் கேசவன் பேசியதாவது:
மின் தட்டுபாடு காரணமாக மின்னணு எடை தராசுகள் பேட்டரி பழுதடைந்திருக்கலாம். புதிய மின்னணு தராசுகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுநேரமும் மண்ணெண்ணெய் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் வருகை கண்காணிக்கப்படுகிறது. தொடர்ந்து புகார்கள் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சுழற்சி முறை மாற்றம் செய்யப்படும். ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். கலாவதியான பொருட்கள் கடையில் இருப்பு வைக்க கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலூரில் என்.சி.எம்.எஸ்., உர குடோன் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஏஜன்ட்டுகள் மூலம் உர விற்பனை செய் வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். உரம் வேண்டுவோர் என்.சி.எம்.எஸ்ஐ அணுகி உரம் பெற்று கொள்ளலாம். கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க மறுத்தால் இணை பதிவாளர் அல்லது தனி அலுவலரிடம் முறையீடு செய்யலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகரிக்கப்படாத நபர்கள் கடைகளில் இருப்பின் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மண்ணெண்ணெய் அளவு குறித்து அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதை ஒட்டாத கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் அளவு குறைந்தே காணப்படுகிறது. அனைவருக்கும் சுழற்சி முறையில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு மருந்தகங்களில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் வாங்கி பயன் அடையலாம் என்றார்.
கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக