ஊட்டி:
மழைநீர் ஒழுகும் அரசு பஸ்களை சரிசெய்ய வேண்டும் என, நுகர்வோர் அமைப்பு கோரியுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தின் துறை ரீதியான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம், ஊட்டியில் நடைபெற்றது.
அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பீட்டர்ஸ்டீபன் தலைமை வகித்தார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், பேசியதாவது:
அமைப்பின் கோரிக்கையை ஏற்று, கூடலூர் - ஊட்டி வழித்தட பஸ்களை, சாதாரண பஸ்களாக மாற்றி, கட்டணத்தை குறைத்ததை வரவேற்கிறோம்.
ஆனால், பல பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால், பயணிகள் சிரமப்படுவதுடன், போக்குவரத்து கழகத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படுத்துகிறது.
பஸ்களின் ஜன்னல்கள், கண்ணாடி இல்லாமல் உள்ளதால், மழைக்காலங்களில் பயணம் செய்ய முடிவதில்லை. அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்து, கண்ணாடிகளை பொருத்த வேண்டும்.
சில அரசு பஸ்களில், மேற்கூரையில் தார் சீட்டுகள் ஒட்டப்பட்டும் இரு பக்கவாட்டுகளிலும் மழைநீர் ஒழுகுகிறது. இதை சரி செய்ய வேண்டும்;
முதலுதவி பெட்டி இருக்க வேண்டும். கிளையின் தொலைபேசி எண் எழுதி வைக்கப்படவில்லை.
வசூலிக்கும் கட்டணத்துக்கு ஏற்ப வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்;
கழகம் சார்பில் நடத்தப்படும் கட்டண கழிப்பிடங்களில், விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதை தவிர்க்க, போக்குவரத்து மூலம் தற்காலிக ஊழியரை நியமித்து, கழிப்பிடங்களை பராமரிக்க வேண்டும்.
ஊட்டி - கைகாட்டி வழித்தடத்தில் காலை 8 முதல் 10 மணி வரை இயக்கப்படும் பஸ்களை, சரியான நேரத்தில் இயக்க வேண்டும்;
பல பஸ்களில் வழித்தட அறிவிப்பு பலகைகள், உரிய முறையில் வைப்பது கிடையாது. இரவில், அறிவிப்பு பலகைகளுக்கு விளக்கு இல்லாததால், எந்த ஊர் செல்லும் பஸ் வருகிறது என்பதை அறிய, பயணிகள் சிரமப்படுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோட்ட மேலாளர் சண்முகம் பேசுகையில், "அனைத்து பஸ்களும் நுகர்வோரின் பயன் கருதி இயக்கப்படுகிறது. உரிய நேரத்தில் இயக்க அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. புதிய பஸ்கள் அரசிடம் இருந்து பெறப்பட்டு இயக்கப்படும். பஸ்சில் மழைநீர் ஒழுகும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரின் பேரில், கூடலூர் கிளை கழக கழிப்பிடம் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் வரும் 22ம் தேதி விடப்படுகிறது'' என்றார்.
ஊட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கிளை நிர்வாகிகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் சார்பில் ராஜன், பசுவராஜ், மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக