ஊட்டி, ஆக. 25:
ஊட்டி நகரின் மையப்பகுதியான ஏ.டி.சி., பகுதியை தூய்மைப்பகுதியாக அறிவிக்க கோரியும், எட்டின்ஸ் சாலையையொட்டி அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் குவிந்து கிடக்கும் கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், காதித குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தாத நகராட்சியை கண்டித்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் ஏ.டி.சி., பகுதியை போர்கால அடிப்படையில் தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தயும் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் சுவரொட்டி வைக்கும் நூதன போராட்டம் நேற்று நடந்தது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விழிப்புணர்வு சங்கத்தினர் கூறுகையில், ஏற்கனவே எங்கள் அமைப்பு சார்பில் உலக சுகாதார தினத்தன்று இது தொடர்பாக கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தியும் நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அப்பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் குழாய்ககள் அமைக்க வேண்டும். அங்கு சுகாதார சீர்கேடுகளை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும். இப்பிரச்சனை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில் ஏன் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்பதும் பொதுமக்கள் கேள்வியாக உள்ளது என்றனர்.
போராட்டத்தில் கூடலூர் நுகர்வோர் சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரணியம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் வீரபாண்டியன், விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், மலைச்சாரல் கவிமன்ற தலைவர் சோலூர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக