ஊட்டி: நீலகிரியில், 80 சதவீதத்தினருக்கு காப்பீடு புதுப்பிப்பதற்கான தகவல் கிடைக்கப் பெறுவதில்லை எனவும்; 30 சதவீத இரு சக்கர வாகன உரிமையாளர்கள், தங்களின் வாகனக் காப்பீட்டை புதுப்பிப்பதில்லை எனவும், "கான்சர்ட்' அமைப்பு நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (கான்சர்ட்), வாகன காப்பீடு நிறுவனங்கள், நுகர்வோருக்கு முறையாக சேவையை வழங்கி வருகிறதா என்பது குறித்து, மாநிலம் தழுவிய ஆய்வு மேற்கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் ஆகியவற்றுடன் இணைந்து, "கான்சர்ட்' நிறுவனம்,கள ஆய்வு நடத்தியது.
ஆய்வு விவரம்: இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்களில் பெரும்பான்மையானோர், அரசின் வாகன பதிவின்போது அதன் பயனையோ, அவசியத்தையோ பெரிதாக கருத்தில் கொள்வதில்லை. வாகன காப்பீடு, 95 சதவீதத்தினர் நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை நாடி எடுத்துக் கொள்கின்றனர். அங்கு வழங்கும் படிவங்களை படிக்காமல் கையெழுத்திட்டு விண்ணப்பங்களை அவர்களே நிரப்பி விடுகின்றனர்.80 சதவீதத்தினர், காப்பீடு புதுப்பிப்பதற்கான தகவல் கிடைக்கப் பெறுவதில்லை. 30 சதவீதத்தினர் இரு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு புதுப்பித்து கொள்வதில்லை. பதிவை புதுப்பிக்க வேண்டிய சூழலில் மட்டுமே, வாகன காப்பீட்டை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.காப்பீடு செய்தோரில் 45 சதவீதத்தினர் மட்டுமே, வாகன விபத்து அல்லது வாகனம் காணாமல் போனால், காப்பீட்டு நிறுவன இலவச தொலைபேசி வாயிலாக 48 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிப்பதை அறிந்து வைத்துள்ளனர்.
பெரும்பாலும் வாகன காப்பீடு எடுப்போர், அதனால் பயன் கிடைக்கும் என்பதை விட, வாகன பதிவை செய்ய காப்பீடு அவசியம் என்று கருதியே, காப்பீடு பெறுகின்றனர்.
10 சதவீதத்தினர் வாகனம் வாங்கி கொடுக்கும் இடைதரகர்களே அனைத்து வேலைகளையும் முடித்து கொடுப்பதால், எந்த நிறுவனத்தில் காப்பீடு எடுத்துள்ளோம் என்பதை அறியாமல் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. காப்பீடு நிறுவனங்கள் நுகர்வோருக்கு முழுமையான தகவல்களை தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் விளக்கினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக