புதுடில்லி: ''மருந்து கடைகளில், குழந்தைகள் உணவு, ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்க தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணைஅமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் கூறினார். அதுபோல, பிற துரித
உணவுகளான, மக்ரோனி, பாஸ்தா போன்றவற்றையும் சோதனைக்கு உட்படுத்தப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
'நெஸ்லே' என்ற சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் தயாரித்து, குழந்தைகள் விரும்பிச்
சாப்பிடும், 'மேகி நுாடுல்ஸ்' உணவுப் பண்டத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, எம்.எஸ்.ஜி., என்ற ரசாயனம், காரீயம் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில், மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, நெஸ்டம், செரிலாக், ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற குழந்தைகள் உணவு, குழந்தைகள் பயன்பாட்டுப் பொருட்களை, மருந்துக் கடைகளில் இருந்து அகற்றி, சாதாரண
கடைகளில் விற்பனை செய்ய அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பாதுகாப்பானவை:
இதுகுறித்து, மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் கூறியதாவது: மருந்துக் கடைகளில் உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து பானங்கள், தின்பண்டங்கள் போன்றவை விற்கப்படுவதால், அவை மிகவும் பாதுகாப்பானவை என்ற எண்ணம், மக்கள் மத்தியில் ஏற்படுகிறது.அந்த தவறான எண்ணத்தை, மக்கள் மத்தியில் போக்க, குழந்தைகள் உணவு போன்றவற்றை,மருந்துக் கடைகளில் விற்பது தடை செய்யப்படும்இவ்வாறு, அமைச்சர் கூறினார்.எனினும், அதற்கான உத்தரவு இன்னமும் பிறப்பிக்கப்படவில்லை.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், நாட்டையே உலுக்கிய, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை, முதன்முதலில் அம்பலப்படுத்தியவர்; மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், பா.ஜ.,வின் முன்னணிதலைவர்களில் ஒருவர்.
இதற்கிடையே, மேகி நுாடுல்ஸ் போல, ரெடிமேடாகக் கிடைக்கும், பாஸ்தா, மக்ரோனி போன்ற, பன்னாட்டு உணவுப் பண்டங்களின் தரத்தையும் பரிசோதிக்க, மத்திய அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு முடிவு செய்துள்ளது.
நுகர்வோர் கோர்ட்டில்...:
நிலைமை இவ்வாறு இருக்க,
முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, மேகி நுாடுல்ஸ் உணவுப் பண்டத்தை தயாரித்த, நெஸ்லே இந்தியா மீது, தேசிய நுகர்வோர் கோர்ட்டில், மத்திய நுகர்வோர் விவகாரத் துறை வழக்குதொடர்ந்துள்ளது.இது, ஏற்கனவே சிக்கலில் சிக்கித் தவிக்கும், நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு, மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
11 மாநிலங்களில் தடை:
கோவாவில், மேகி நுாடுல்ஸ் விற்பனைக்கு, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது; இதன் மூலம், அந்த உணவுப் பண்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள, 11வது மாநிலமாகி உள்ளது, கோவா.
தமிழகம், டில்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், அசாம், பீகார், ம.பி., ஜம்மு - காஷ்மீர், குஜராத், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், மேகி நுாடுல்ஸ் தடை செய்யப்பட்டு உள்ளது.கோவாவில் நடத்தப்பட்ட சோதனையில், மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டுகளில், அபாய கரமான ரசாயனங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்து உள்ளது. எனினும், பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர், லட்சுமிகாந்த் பர்சேகர் நேற்று கூறினார்.
சோம்பேறி தாய்மார்கள்:
முன்பெல்லாம், குழந்தைகளுக்கு, தாய்மார்கள், விதவிதமான உணவுப் பண்டங்களை செய்து கொடுப்பர். இப்போது தாய்மார்கள், சோம்பேறிகளாகி விட்டனர். அதனால் தான்
பன்னாட்டு நிறுவனங்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுப் பண்டங்களை விற்கின்றன
உஷா தாக்குர் ,மத்திய பிரதேச, பா.ஜ., - எம்.எல்.ஏ.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக