பிரச்னைகள்
ஊட்டி: "போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் "கட்-அவுட்'கள், விளம்பரத் தட்டிகளை, கட்சிப் பாகுபாடின்றி அப்புறப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு செயல்படுத்தும் கிராம நுகர்வோர் மன்றங்கள் மற்றும் மக்கள் மையங்களின் ஆலோசனை கூட்டம், ஊட்டியில் நடத்தப்பட்டது.மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து வரவேற்றார். பொதுச் செயலர் வீரபாண்டியன், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் அவசியம், மனித உரிமை ஆணையம் குறித்து விளக்கினார். நுகர்வோர் மைய செயலர் கணேசன், குழந்தை தொழிலாளர் மற்றும் அடிப்படை கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.மூலிகைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, நீலகிரியில் மூலிகைக் கண்காட்சி நடத்த வேண்டும்; பல பகுதிகளில் தேயிலைத் தூள் கலப்படம் நடப்பதால், தேயிலை வாரியம், சுகாதாரத் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மழை காலம் துவங்கியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்; நவம்பர் மாத மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முறையாக சீரமைக்க வேண்டும்.போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக இருக்கும் "கட்-அவுட்'கள், விளம்பரத் தட்டிகளை, கட்சிப் பாகுபாடின்றி அப்புறப்படுத்த வேண்டும்; அப்புறப்படுத்தும் செலவுத் தொகை, உரியவர்களிடம் வசூலிக்க வேண்டும்; கோடை விழா பெயரில், ஆடம்பர அழைப்பிதழை தவிர்க்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு, புகையிலையிலிருந்து விடுதலை பெற உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.கூட்டமைப்பு பெருந்தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகி ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக