உலக மகா அதிசயம். அதுவும், களைத்துப்போன தொழிலாளர்களின் உடல் வலிக்குக் கட்டாயம் சாராயம் வேண்டும் என்றே நேற்று வரை கருதி வந்த கம்யூனிஸ்டுகள் கூட, டாஸ்மாக் சாராயம் ஒரு மிகப்பெரிய பிரச்னை என்று இன்று ஒத்துக் கொண்டுள்ள அதிசயம்.நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், பா.ம.க., கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்தில் அதிகரித்து வரும் டாஸ்மாக் மதுப்பழக்கத்தைப் பற்றிக் கவலை தெரிவித்துள்ள நிகழ்வு வரவேற்க வேண்டிய மாற்றம்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவபுண்ணியம், ஆறரைக் கோடி மக்களில், இரண்டு கோடி மக்கள் டாஸ்மாக் சாராயத்தில் கரைகிறார்களே, இது என்ன வளர்ச்சி என்று கூறி புண்ணியம் தேடிக் கொண்டுள்ளார்.சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ. கட்சித் தலைவர் நல்லகண்ணுவிடம் வரைமுறையற்ற டாஸ்மாக் சாராய வியாபாரம் பற்றிக் கருத்து பரிமாறிக் கொண்டபொழுது, ""அது தான் வருமானம் வேணும்னுதான் முச்சந்தியில் எல்லாம் கவர்மெண்ட் சாராயக்கடை வெச்சிருக்கிறாங்களே, மேலும் குடிகாரனாகப் பார்த்து திருந்தினாத்தான் உண்டு'' என்று பேசினார். அனுபவம் மிக்க அரசியல் தலைவர்களிடம் கூட, இந்தியாவில் அசுர வளர்ச்சி பெற்று எல்லா சமூகத்தினரையும் புதை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சாராயச் சந்தையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லை என்பதே உண்மை.இன்றைக்கு இந்திய மக்களின் மிகப்பெரிய பொது எதிரியானது சாராயச் சந்தைதான் என்றால் மிகையில்லை. தமிழக அரசு தனது மிகக் கேவலமான சாராய வருமான மூர்க்கத்தனத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில், தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாகாத இளைஞர்களை-மதுவால் பாதிக்கப்படாத குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதை ஏதோ வீரியத்துடன் எழுத வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. மதுப்புழக்கத்தால், சமூகம், பொருளாதாரம், மனித வளம், கலாசாரம், நடத்தை மற்றும் ஒழுக்கவியல், சுகாதாரம் போன்ற பல்வேறு தளங்களில் மிக வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நுணுக்கமான பாதிப்புகளைக் கூட தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து புரிந்து வைத்திருப்பதால் தான் இதனை உறுதியுடன் கூற முடிகிறது. இன்றைக்கு எந்த ஒரு பொது நிகழ்வுகளிலும் இளைஞர்களைக் காண முடிவதில்லை. இளைஞர்கள் நுகர்வுக் கலாசாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். மிக அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்கள், கூடிக் களிக்கும்-இல்லையில்லை-விட்டில் பூச்சிகளாக விழுந்து கொண்டிருக்கும் இடங்களாக டாஸ்மாக் விடுதிகள் உள்ளன.தமிழகம் முழுவதுமுள்ள (அரசின் அடுத்த சாதனையாக கட்டிக் கொண்டிருக்கிற பிரம்மாண்டமான அண்ணா நூலகம் உள்பட) நூலகங்கள், இளைஞர்களைக் கவர்வது இப்பொழுதெல்லாம் முடியாத காரியமாகி விட்டது.ஜூன் மாதக் கடைசியில் கோவையில் அரசு நடத்த இருக்கும் செம்மொழி மாநாடு வரலாறு படைக்குமா என்பது வேண்டுமானால் கேள்வியாக இருக்கலாம். ஆனால், மாநாடு நடக்க இருக்கும் வாரத்தில், கோவை மாவட்ட டாஸ்மாக் சாராய விற்பனை புதிய சாதனை படைக்கும் என்பதை இன்றே உறுதியுடன் கூற முடியும்.தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், சாராய நிறுவனங்கள், இடைத்தரகர்கள், கட்சிக்காரர்கள் எல்லோரும் இணைந்து கொள்ளையடிக்கும் மையப் புள்ளியாக, மாஃபியாவாக, டாஸ்மாக் சந்தை மாறி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒரு நிழல் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவகை குற்றங்களுக்குமான இடங்களாக டாஸ்மாக் விடுதிகள் மாறிவிட்டன. இந்தியா முழுவதுமே மதுக் கலாசாரத்தில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும், தமிழகத்தில் அரசு இயந்திரம் இயங்குவதற்கே, மது வருமானத்தைத்தான் மிக அதிகமாக நம்பியுள்ள நிலை உள்ளது. அதனால், தமிழக அரசு மிக வேகமாக மது விற்பனையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளது. மற்ற அண்டை மாநில அரசுகளும் தமிழக அரசின் வெற்றி பார்முலாவை அப்படியே நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றன.எதிர்க்கட்சிகளிடமும், பொது மக்களிடமும் இந்த மது வியாபாரம் ஒரு சுனாமி போன்று உருவெடுத்துள்ளது என்ற பொதுக் கருத்து இல்லாமையால்தான், தமிழக அரசால், இப்படி பொது நன்மையை முற்றிலும் முறிக்கும் கொள்கையைச் செயல்படுத்த முடிகிறது.எதிர்காலத்தில், மற்றொரு அரசோ அல்லது இன்றைய ஆளுங்கட்சி அரசோ கூட மதுவிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற முற்போக்கு நடவடிக்கை எடுக்க நினைத்தால், முடியாது போய்விடும். ஏனென்றால், இந்த நிழல் உலகத்தில் பலரது தொழில், வருமானம் பாதிக்கப்படும். அதனை அவர்கள் விட்டுவிட மாட்டார்கள். மதுச் சந்தை மூலம் சுலபமாக குறுக்கு வழியில் வருமானம் ஈட்டி வருபவர்கள், நாளை தங்கள் வருமானத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த ஒரு பாதகச் செயலிலும் ஈடுபடத் தயங்கமாட்டார்கள். இன்றைக்கு லட்சக்கணக்கான ஆண்கள் குடிநோயில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு நடத்தும் குடிநோய் மையங்கள் தமிழகத்தில் மொத்தமே எட்டு மருத்துவமனைகளில்தான் உள்ளன. இந்த நிலையில், ஊருக்கு ஊர் தனியார்கள், குடி சிகிச்சை மையங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர். இவ்வகை குடிசிகிச்சை மையங்களில், 90 சிகிச்சை மையங்கள் போலியானவை. "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற விரக்தி மனநிலையில் உள்ள மனைவிமார்கள், தங்கள் குடிநோயுள்ள கணவர்களை இப்போலி மையங்களில் சேர்த்து எப்படியாவது குணமடைய வேண்டும் என்று கடன் வாங்கியாவது செலவு செய்கின்றனர். ஆனால், சிகிச்சை என்ற பெயரில், இங்கு துன்புறுத்தலும், அறிவியல் சாராத ஏமாற்று சிகிச்சைகளும்தான் அளிக்கப்படுகின்றன.போலி மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு, இம்மையங்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அரசே, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் குடிமுறிவு மையங்களை ஏற்படுத்தினால்தான் இவ்வகை போலி நிறுவனங்களை ஒழித்துக் கட்ட முடியும். குடிநோயில் இருந்து ஒருவரை மீட்பது மிகமிகக் கடினம். மீட்டாலும் அது மிகத் தாற்காலிக நடவடிக்கையாகவே இருக்க முடியும். ஆனால், குடிநோய் வராமல் தடுப்பது சுலபம். போலி குடிமுறிவு மையங்களைப் போலவே, சித்தா, ஆயுர்வேதா, யுனானி என்று விதவிதமான போலி குடிநோய் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் கடை பரப்பி உள்ளனர். இப்படிப்பட்ட போலி மருத்துவர்களின் விளம்பரங்களை ஏமாற்று வேலை என்று தெரிந்து கொண்டே வெளியிடும் பத்திரிகைகளை என்னவென்று சொல்வது. பல மனைவிமார்கள் இவ்வகை போலி மருத்துவர்களிடம், குளிகைகளையும், மருந்துப்பொடிகளையும் மிகுந்த விலை கொடுத்து வாங்கி ரகசியமாக கணவர்களுக்கு உணவிலும், பாலிலும் கலந்து கொடுத்து (மருத்துவர் அறிவுரைப்படி) ஏமாந்துபோய் வருவது சகஜமாகி விட்டது.தாய்மார்களோ, இந்தப் போலி குளிகைகளுக்காக, தங்கள் தாலிகளைக் கூட அடமானம் வைக்கிறார்கள். தமிழக அரசோ, சாராய வருமானத்துக்காக தனது ஆன்மாவையே அடமானம் வைக்கிறது. சமீபத்தில் சென்னைக்கு அருகில் புழல் பகுதியில் உள்ள 50 பள்ளிகளில் படிக்கும் 13-16 வயதுக்குள்பட்ட மாணவர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.இதில் 11 சதவிகிதம் பள்ளி மாணவர்கள் மது அருந்துகிறார்கள் என்று தெரிய வந்ததுள்ளது. இந்த 11 சதவிகிதம் இன்னும் சில ஆண்டுகளில் 30 சதவிகிதம் ஆகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால், அரசின் மது விற்பனை நடவடிக்கைகள் அத்தனை கேவலமாக உள்ளது.ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், நாட்டின் இன்றைய நிலவரத்தைப் பற்றியும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றியும் உச்சகட்ட அலட்சியத்தைத் தன்னுள் கொண்டுள்ளனர்.எந்த ஒரு பள்ளி மாணவனும் பள்ளிக்கு வரும் போதும், வீடு திரும்பும் போதும் டாஸ்மாக் கடையைத் தாண்டாமல் போக முடியாது என்ற நிலையே உள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தபோது, இதனால் வேலை இழப்பு ஏற்படுமே என்ற கேள்வியைத் தான் புத்திசாலித்தனமாக முதல்வர் கேட்டுள்ளார். நடு இரவில் தோன்றிய கடவுளிடம், நாளை காலை உலகில் யாருக்குமே எய்ட்ஸ் நோய் இருக்கக் கூடாது என்று வரம் கேட்டு, கடவுள் அருள் புரிந்தால் என்ன ஆகும்?எய்ட்ஸ் நோயை நம்பி, கடை பரப்பியுள்ள நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், விளம்பர நிறுவனங்கள், அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை ஊழியர்கள் எல்லோருக்கும் அடுத்த நாள் காலையே வேலை போய்விடும். அதனால், நாட்டில் எப்பொழுதும எய்ட்ஸ் நிலைத்துநின்று வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறாரா முதலமைச்சர். டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால், 35,000 ஊழியர்களின் வேலை போய் விடும் எனும் முதலமைச்சரின் விளக்கம், பாரதியின் இந்தக் கவிதை வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.""நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.''
நுகர்வோர்
- முகப்பு
- நுகர்வோர் சட்டம்
- environment
- awarness programme photos
- NEWS
- மக்கள் ஆலோசனை மையம்
- கண் தானம்
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- consumer links
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
- cchep nilgiris
- NEAC
- ► 2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
- ▼ 2011 (184) ▼ January ► December
அன்புடன் வரவேற்கின்றோம்
you are welcome to our web page
எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்
Please give your GOOD IDEAS FOR DEVELOPING THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPSகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
ஞாயிறு, 30 மே, 2010
நெஞ்சில் உரமும் இல்லை; நேர்மைத் திறமும் இல்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக