புதுடில்லி : "புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆற்றுவோம்' என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் இதைப் படியுங்கள்; புகைபிடிக்கும் பழக்கத்தால் இந்திய ஆண்களின் ஆயுளில் ஓர் ஆண்டு குறைந்து விடுவதாக, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த 1947ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 37 வயது. 2007ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 64.7. ஆனால் புகைபிடிக்கும் பழக்கம் தற்போது அதிகரித்திருப்பதால், ஆயுளில் ஓராண்டு குறைந்து விடுவதாக, ஆராய்ச்சியாளர் பிரபாத் ஜா கூறுகிறார்.
டொரன்டோ பல்கலைக்கழகத்தில் பொது நலவாழ்வு ஆராய்ச்சியாளராக இருக்கும் பிரபாத் ஜா, இந்தியாவில் புகைபிடிக்கும் பழக்கம் குறித்தும், புகையிலை மீதான வரி விதித்தல் குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர், புகைபிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர். 10 பேரில் ஒருவர், இப்பழக்கத்தில் உயிரிழக்கிறார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை விட, இந்தியாவில் இந்த வகையிலான இறப்பு அதிகம். கடந்த 1999ல் புகைபிடிப்போர் தொகை 13 சதவீதம். 2006ல் 25 சதவீதம். நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம், இந்தப் பழக்கத்தால், ஓராண்டு குறைகிறது.
இந்தியாவில் புகைபிடிப்பதற்கு எதிரான சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படவில்லை. இங்கு புகைபிடிப்போர், மொத்தம் ஐந்து கோடி பேர் இருக்கின்றனர். இவர்களில், மூன்று கோடியே 84 லட்சம் பேர், பீடி குடிப்பவர்கள். ஒரு கோடியே 32 லட்சம் பேர், சிகரெட் பிடிப்பவர்கள். இவர்களில் பெரும்பாலோர் மரணம் 30 வயதிலிருந்து 69 வயதுக்குள்ளாக, அற்பாயுசில் முடிந்து விடுகிறது.
அமெரிக்கா, பிரிட்டனில் 40 சதவீதம் பேரும், தாய்லாந்தில் 15 சதவீதம் பேரும் புகைப் பழக்கத்திலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில், வெறும் இரண்டு சதவீதம் பேர் தான், இப்பழக்கத்திலிருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு பிரபாத் ஜா தெரிவித்தார்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க இப்போது இருக்கும் ஒரே ஆயுதம், அதன் மீது அதிக வரியை விதிப்பதுதான். இந்த பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர், புகையிலை மீது 17 சதவீத வரி விதிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார். இதனால், சிகரெட் விலை ஆறு சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக