அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் விழுந்திருக்கின்றன. முதல் விக்கெட் உறுதியாகி விட்டது -சசி தரூர். அடுத்த விக்கெட், மூன்றாவது அம்பயரின் முடிவுக்காக காத்திருக்கிறது -லலித் மோடி. அது, "அவுட்' தானா இல்லையா என, நகத்தை கடித்தபடி, "டிவி' ஷோரூம் முன்னால் நிற்கும் ரசிகர்களைப் போல, ஆவலோடு காத்திருக்கிறது இந்தியா.
மோடி என்ற பெயர் இருந்தாலே சண்டையும், சச்சரவும் சேர்ந்தே வரும் போல! ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளைப் போலவே, லலித் மோடிக்கான ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருக்கின்றன. அணிகளுக்கான விலை நிர்ணயம், புதிய அணிகளுக்கான கட்டணம், அதிபர்களின் நிதி ஆதாரம், பின்னணி பைனான்சியர்கள் பற்றிய விவரம், ஐ.பி.எல்.,லின் துபாய் தொடர்பு, போட்டிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயத்தில் விளையாடிய பணம் என, ஏராளமான விஷயங்கள் சந்திக்கு வந்துவிட்டன. இந்த ஐ.பி.எல்., காமெடியில் எத்தனை ஆயிரம் கோடி பரிமாற்றம் நடந்திருக்கும் என்பது, புலனாய்வுத் துறைக்கே புரியாத புதிராய் இருக்கிறது. விஞ்ஞானப்பூர்வ ஊழல் நடந்திருக்கிறது என்பதில், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. அதை எப்படி வெளிக்கொணர்வது என்பதில் தான், மத்திய அரசும், வருமான வரித்துறையும் மண்டையைப் பிய்த்துக்கொண்டு இருக்கின்றன. மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு, ஆரம்ப முகாந்திரங்கள் ஆயிரம் இருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மையமாக, ஐ.பி.எல்., திகழ்கிறது.
ஐ.பி.எல்.,லின் இன்றைய சந்தை மதிப்பு, ஒன்றல்ல... இரண்டல்ல... 18 ஆயிரம் கோடி ரூபாய். 2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி துவக்கப்பட்ட முதல் போட்டி, மிகச் சரியாக இரண்டே ஆண்டுகளில் இந்த உயரத்தை எட்டியுள்ளது. லாட்டரியில் கூட இப்படி ஒரு பம்பர் பரிசு கிடைத்ததாக பதிவு இல்லை. இதுமட்டுமின்றி, பல்வேறு மாநில அரசுகள் இந்த விளையாட்டுக்கும், அணிகளுக்கும், வீரர்களுக்கும், டிக்கெட்டுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வரிவிலக்கு அளித்திருக்கின்றன. யார் வீட்டு பணத்துக்கு யார் விலக்களிப்பது? இத்தனை ஆயிரம் கோடிகள் புரண்டும், இந்த ஐ.பி.எல்.,காரர்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்புணர்வும் கிடையாது. விளையாட்டு வீரரின் நெற்றியைத் தவிர, கிடைத்த இடத்தில் எல்லாம் விளம்பரத்தைப் போட்டு, ரசிகனின் பாக்கெட்டில் இருந்து பணம் பறிப்பதையே அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். கடந்த 2009ம் ஆண்டு, இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்த சமயம்... "கொஞ்சம் ஒத்திவையுங்கள்' என, மத்திய அரசே கெஞ்சிக் கேட்டது. "அதெல்லாம் முடியாது; வட்டிக் கணக்கு என்ன ஆவது?' என அலட்சியப்படுத்திவிட்டு, அந்த ஆண்டுக்கான போட்டிகளை தென்னாப்ரிக்காவுக்கு கடத்திச் சென்றார் லலித் மோடி. அவ்வளவு ஏன்? ஐ.பி.எல்.,லை ஆரம்பித்ததிலேயே நல்ல நோக்கம் கிடையாது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவை முன்னிலைப்படுத்தி, இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) ஆரம்பிக்கப்பட்டது.
"நல்ல வீரர்கள், இளைஞர்கள், இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகின்றனர்; அணிக்கு ஆள் சேர்ப்பதில், பணம் பாதாளம் வரை பாய்கிறது' என்ற புகாரின் காரணமாக, இளம் வீரர்களை நாட்டுக்கு அடையாளம் காட்டும் விதத்தில், ஐ.சி.எல்.,லுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. அது நடந்துவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் குட்டு உடைந்து விடுமே! உடனடியாக, அவசரத் தீர்மானம் நிறைவேற்றி ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.பி.எல்., மொத்த நோக்கமும் பாழ். வீரர்களைச் சேர்க்கும்போது, அதன் முதல் நிபந்தனையே, "ஐ.சி.எல்.,லோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது' என்பது தான். அதோடு ஐ.சி.எல்., ஊத்தி மூடப்பட்டது; ஐ.பி.எல்., செழித்து வளர்ந்தது. அணியைச் சொந்தமாக்கிக்கொள்ள நூற்றுக்கணக்கான கோடிகள் பேரம் பேசப்பட்டன. அந்த அணிகளுக்கான வீரர்கள், ஆடு, மாடுகள் போல் ஏலம் எடுக்கப்பட்டனர். அவர்களது விலையும் கோடிகளில் கொளுத்தியது. கண், மண் தெரியாமல் பணம் விளையாடியது; இன்று, சர்ச்சையில் வந்து நிற்கிறது.
இப்போது எல்லா விரல்களும், லலித் மோடியை நோக்கி பாய்கின்றன. அத்தனைக்கும் காரணகர்த்தா அவர் தான் என்றாலும், அத்தனையையும் அவரே அள்ளிப் போட்டிருக்க வாய்ப்பில்லை. எந்த இடத்திலாவது ஊழல் நடந்தால், இரண்டு காரணங்களுக்காக அது வெளியில் தெரியும். ஒன்று, நியாயவான்கள் கொதிப்பது; இரண்டு, கூட்டாளிகளுக்கு உரிய பங்கு கிடைக்காதது. ஐ.பி.எல்.,லில் நியாயஸ்தர்களும் இல்லை; பங்கு கிடைக்காதவர்களும் இல்லை; "அத்தனை பேருக்கும் ஆனந்தம்' என்பது தான் லலித் மோடியின் அடிப்படை தத்துவம். தான் சம்பாதித்தது மட்டுமின்றி, அணி அதிபர்களும், உறவினர்களும், நண்பர்களும், அதிகார வர்க்கத்தினரும், ஆளும் கட்சியினரும் சம்பாதிக்க வழிவகுத்துக் கொடுத்தார் மோடி. அதனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை. இப்போது இவ்வளவு பெரிய பிரச்னை எழுந்தது கூட, யாருக்கு எவ்வளவு என்ற மோதல் எழுந்ததால் தான். தன் மூன்றாவது தோழிக்காக சசி தரூர் சண்டை பிடிக்க, லலித் மோடி முரண்டு பிடிக்க, கத்தரிக்காய் முற்றி கடைக்கு வந்துவிட்டது. "பிப்டி பிப்டி' என்பது வர்த்தகர்களின் வார்த்தை. அவர்கள் அணி திரண்டு அமைத்தது தான் ஐ.பி.எல்., என்பதால், இந்த விளையாட்டுக்கும், "டுவென்டி டுவென்டி' என்றே பெயர் வைத்தனர் போலும்.
அணிகளின் அதிபர் பட்டியலைப் பாருங்கள்... ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், ஷாருக் கான், பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி... அத்தனை பேரும் நம்பர் ஒன் கோடீஸ்வரர்கள். அப்போதே இது, விளையாட்டு என்ற அந்தஸ்தை இழந்து, வர்த்தகமாக பரிணமித்துவிட்டது. வியாபாரம் என்றால், லாபம் - நஷ்டம் தான் அளவீடே தவிர, வெற்றி - தோல்வி அல்ல. போதாதகுறைக்கு, அரசியல்வாதிகளின் நேரடி தலையீடு வேறு. சரத் பவார், பிரபுல் படேல், அருண் ஜெட்லி, சசி தரூர், லாலு பிரசாத், நிதிஷ் குமார், நரேந்திர மோடி என, மத்திய, மாநில கிரிக்கெட் வாரியங்களில், அரசியல்வாதிகளின் நேரடி பங்களிப்பு இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்தால், விளையாட்டு வினையாகத் தானே செய்யும்!
சரி, இவற்றுக்கெல்லாம் தீர்வென்ன? சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மோடியை நிரந்தரமாக நீக்கிவிடலாமா? நீக்கலாம்; நீக்காமலும் போகலாம். அது, மோடியின் பையில் எவ்வளவு சரக்கு இருக்கிறது; அது வெளியில் வந்தால் யார் யாருக்கு பாதிப்பு என்பதைப் பொறுத்தது. ஒருவேளை மோடி தொடராவிட்டாலும், மோசடி தொடரும் என்பதில் சந்தேகமில்லை. காரணம், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் ஐ.பி.எல்., பக்கம் திரும்பிவிட்டதால், பிரச்னையை தமக்குள்ளேயே, "தீர்த்துக்கொள்ள' பி.சி.சி.ஐ., திட்டமிட்டு வருகிறது. இல்லாது போனால், கிரிக்கெட்டின் மொத்த கட்டுப்பாடும், கையை விட்டுப் போய்விடும் என்ற அச்சம். எனவே, மோடியையோ, கேடியையோ பலி கொடுத்துவிட்டு, வர்த்தகத்தைத் தொடரவே வாரியம் விரும்பும். அதை அனுமதித்துவிடக் கூடாது. வீரர்களுக்கும், அணி அதிபர்களுக் கும், ஐ.பி.எல்.,லுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் கடுமையான வரி விதிக்க வேண்டும். அவர்களது வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்கு வழங்க வேண்டும். வாரியத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். தேர்தல் கமிஷன் போல, சுதந்திரமான அமைப்பின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வாரியத்தின் அத்தனை முடிவுகளும், அந்தக் கமிஷனின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதெல்லாம் நடந்தால், ஒழுங்கான கிரிக்கெட், ஓரளவு சாத்தியம். இல்லாவிட்டால் கிரிக்கெட்டும் உருப்படாது; நாடும் உருப்படாது. இது சத்தியம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக