லஞ்சம் வாங்குவதில் திறமைசாலிகள் யார் என்று உலக அளவில் போட்டி நடத்தினால் நிச்சயம் இந்தியர்கள்தான் முதலிடத்தைப் பிடிப்பார்கள். அதிலும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுகளையும் லோக் அயுக்தாவையும் நியமித்த பிறகும்கூட லஞ்சம் வாங்குவது என்றால் சாதாரணம் இல்லை. லஞ்சத்தை எங்கே, எப்படி, யார் மூலம் வாங்குவது என்று மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வார இறுதியில் ரூம் போட்டு யோசிக்கிறார்கள் என்றால் மிகையில்லை. இன்ன வேலைக்கு இன்னின்ன பதவிகளில் உள்ளவர்களுக்கு இவ்வளவு என்று அவர்கள் "ரேட்' நிர்ணயம் செய்யும் துல்லியம் இருக்கிறதே அது ஊதியக் கமிஷன்களுக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே வருமானத்தைப் பிரித்துத் தரும் நிதிக் கமிஷன்களுக்கும் கூட கிடையாது. மாநில அரசுகளைப் பொறுத்தவரையில் லஞ்சம் வாங்குவதில் முதலிடம் பிடிப்பது வருவாய்த்துறைதான். அரசுக்கு வருவாய் வருகிறதோ இல்லையோ அதிகாரிகளுக்கு வீடு தேடி வந்துவிடுகிறது. எனவேதான் அந்தத் துறைக்கு வருவாய்த்துறை என்று பெயர். அதில் நியமனம் பெறுவதற்குத்தான் எத்தனை பரிந்துரைகள், கடவுளிடம் வேண்டுதல்கள், போட்டித் தேர்வுகள்... சமீபத்தில் தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுக்கு முதுகலைப் பட்டதாரிகள், ஆய்வியல் நிறைஞர்கள்கூட அலை மோதினார்கள். அரசிதழ் பதிவு பெறாத வேலைதான்; ஆனால் வருமான வரி கூட செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத - அதே சமயம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய பதவியாயிற்றே? அவ்வளவு ஏன், கிராம அளவில் தலையாரி பதவிக்கு நியமனம் என்றால்கூட தமிழ் நாட்டில் மிகப்பெரிய அடிதடியே நடக்கும். லஞ்சம் வாங்குகிறவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை. சிலர் கூச்சம் காரணமாகக் கேட்பதில்லை, சிலர் குறைவாகக் கேட்டு நஷ்டம் அடைந்துவிடுவோமோ என்று கேட்பதில்லை. மற்றவர்கள் பக்கத்து சீட்டில் இருப்பவர்கள் காதில்விழுந்து அவர்களும் பங்கு கேட்பார்களோ என்று கேட்பதில்லை. பழக்கப்பட்ட மூத்த ஊழியர்கள்தான் இந்த பேரங்களையே நடத்துகிறார்கள். அலுவலக வேலைகளைப் பார்த்துக் கொண்டே அடிக்குரலில் கேட்பதும், ஏதாவது கசங்கிய தாளின் ஒரு மூலையில் கிறுக்கிக் காட்டுவதும், அடையாறு கலாஷேத்ராவில் பயிற்சி பெறாமலேயே அடவுகள், கண் அசைவுகள், உதட்டுச் சுழிப்புகள் ஆகியவை மூலம் பேரங்களை அவர்கள் நடத்தும் சாமர்த்தியமே சாமர்த்தியம். லஞ்சம் வாங்குவது நல்லதா, கெட்டதா என்பதெல்லாம் இருக்கட்டும்; இந்த லஞ்சம் மட்டும் இல்லை என்றால் தமிழ் நாட்டில் எத்தனை அரசு ஊழியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே போயிருப்பார்கள் இந்த விலைவாசி உயர்வு காலத்தில். ஏதோ லஞ்சம் வாங்க வழியிருப்பதால்தான் அவர்களால் அன்றாட வாழ்க்கையையும் நடத்திக்கொண்டு, பிள்ளைகளைக் கல்லூரியில் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து, சொந்தமாக வீடு கட்டி, பெண்களுக்கு நிறைய நகை போட்டு சீர் செய்து மாமியார் வீட்டுக்கு அனுப்ப முடிகிறது. வெறும் சம்பளம் மட்டுமே வாங்கினால் சாமியாராகக்கூட பணம் போதாது. (சாமியார் என்றால் ஆஸ்ரமம் வைக்க வேண்டும், அங்கே சாப்பாட்டுச் செலவோடு மாத்திரை, மருந்துக்கும் அதிகம் செலவிட நேரிடும். கேமரா செலவு தனி...) இந்த நிலையில் எந்த அசடும் லஞ்சத்தை தான் வேலை செய்யும் டேபிளுக்குக் கீழேயே ரொக்கமாக கத்தையாக வாங்கி மாட்டிக் கொள்ள விரும்புவதில்லை. லஞ்சத்தை பார்ட்டியிடமிருந்து வாங்கவும் அதை உரியவரிடம் கொண்டு போய்ச் சேர்க்கவும் முகமையாளர்கள் வந்துவிட்டார்கள். இவர்களை மாநில அரசுத் தேர்வாணையமோ, மத்திய அரசு தேர்வாணையமோ தேர்வு செய்வதில்லை. அரசு ஊழியர்களே அவர்களுடைய அலுவலகத்துக்கு வந்து போகும் டீக்கடைக்காரர்கள், ஜெராக்ஸ் கடை உரிமையாளர்கள் போன்றோரிலிருந்து தேர்வு செய்கின்றனர். லஞ்சப் பணத்தை அதிகாரிகள் கையால் தொடுவதில்லை என்பதால் அவர்தான் லஞ்சம் வாங்கினார் என்பதை போலீஸôரால் நிரூபிக்க முடியாமல் லஞ்ச வழக்கு தோற்றுவிடுகிறது. லஞ்ச விஷயத்தில் பிற மாநிலங்களுக்குத் தமிழகம்தான் முன்னோடி. இங்கே லஞ்சத்தை முகமையாளர்கள்தான் வாங்கி வைத்து, அலுவலகம் முடிந்தவுடன் உரிய அதிகாரிகளிடம் சேர்க்கின்றனர். ரொக்கமாகச் சில சமயங்களிலும், பொருளாக பல சமயங்களிலும் கொடுக்கின்றனர். கம்ப்யூட்டர், கட்டில், மேஜை, மரச்சாமான்கள், கேமரா போன்ற அத்தியாவசியப் பண்டங்கள் வீடு தேடி வந்துவிடுகின்றன. அதிகாரிகள் கோடை விடுமுறைக்கு சிம்லா, டார்ஜிலிங், ஊட்டி அல்லது வெளிநாடுகளுக்குப் போகவும் இந்த ஏஜெண்டுகளே டிக்கெட் வாங்கி, ரூம் போட்டு எல்லாவற்றையும் செய்துவிடுகின்றனர். அதற்காக இவர்களுக்கு சிறிய தொகை சேவைப் பணமாக அவ்வப்போது தரப்படுகிறது. இது சாதாரண சேவையா என்ன? அரசு ஊழியர்களுக்கு லஞ்சமும் கிடைக்க வேண்டும், அதேசமயம் அவர்கள் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரிடம் சிக்காமலும் இருக்க வேண்டும் என்றால் இந்த ஏஜெண்டுகளின் துணை இல்லாமல் முடியுமா? சரி, இந்தப் பணத்தையெல்லாம் ஏஜெண்டுகள் ஒழுங்காகத் தருவார்களா, கணக்கில் ஏமாற்றிவிடுவார்களா என்றா கேட்கிறீர்கள்? அரசு அதிகாரிகள் என்ன விவரம் இல்லாதவர்களா? அவர்களுக்கு வர வேண்டிய பணத்தை எந்த நாளும் இழந்து மோசம் போகமாட்டார்கள். அவர்களை மீறி ஏஜெண்டு நம்பிக்கைத் துரோகம் செய்தால் அந்தப் பாவத்துக்காக அவரைச் சும்மா விடமாட்டார்கள். லஞ்சம் என்பது தொடர்கதைதான், முடிவே இல்லாதது. இப்படி வாங்கி வாங்கியே பழக்கப்பட்ட அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களிலேயே தங்களின் கீழ் பணி புரிகிறவர்களிடம் விடுப்பு அளிக்க, சிறப்பு ஊதியம் தர, வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் பெற, வீடு கட்டுவதற்கான கடனுக்கான நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய, ஈட்டிய விடுப்பைப் பணமாக்கிக் கொள்ள லஞ்சம் வாங்கிவிடுகிறார்கள். சில சமயம் சிக்கலான சீட்டிலிருந்து (சிக்கல் வேறு எதுவுமில்லை,துறைவிதிகளை எல்லாம் படித்துப்பார்த்து ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்) பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே வழியுள்ள சீட்டுகளுக்கு மாற்றித்தரவும் லஞ்சம் வாங்கப்படுகிறது. ""தமிழ்நாட்டில்தான் லஞ்சத்தை விஞ்ஞான முறைப்படி வாங்குகிறார்கள்'' என்று அகில இந்திய அளவிலே நமக்கு சிறப்பு இடத்தை அளித்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் ""பகுத்தறிவோடு'' செயல்படுகிறவர்கள் அல்லவா நாம்? காற்று வீசாமல் இருக்கலாம், காலரா பரவாமல் இருக்கலாம், லஞ்சம் வாங்காமல் அரசு அலுவலர்களால் ஒரு நாளும் இருக்க முடியாது என்று இந்த விவகாரத்தை ஆழ ஆய்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நுகர்வோர்
- முகப்பு
- நுகர்வோர் சட்டம்
- environment
- awarness programme photos
- NEWS
- மக்கள் ஆலோசனை மையம்
- கண் தானம்
- THE CONSUMER PROTECTION ACT, 1986
- consumer links
- கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
- cchep nilgiris
- NEAC
- ► 2010 (197) வலைப்பதிவு இடுகைத் தலைப்புகள் visit http://cchepeye.blogspot.in
- ▼ 2011 (184) ▼ January ► December
அன்புடன் வரவேற்கின்றோம்
you are welcome to our web page
எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்
Please give your GOOD IDEAS FOR DEVELOPING THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPSகூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
ஞாயிறு, 30 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக