ஊட்டி; "நீலகிரி மாவட்டத்தில் இலவச கழிப்பிடங்கள் அமைத்து, பராமரிக்க, தன்னார்வ அமைப்புகளிடம் வழங்கலாம்' என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய, மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களின் "அவசர' தேவையை நிறைவேற்ற, அரசு, மாநகராட்சி, உள்ளாட்சி மன்றங்கள் மூலம் கட்டண கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன; இதை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள், குத்தகை ஒப்பந்தத்தை மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், மறைவிடங்கள் பல, திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்படுகின்றன; சுகாதார சீர்கேட்டால், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி மற்றும் போக்குவரத்து கழகம் மூலம் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களில், ஒரு ரூபாய் முதல் 3 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆத்திரமடையும் சிலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, ஏ.டி.சி., அருகில், எச்.ஏ.டி.பி., அரங்கம் செல்லும் சாலை, பஸ் ஸ்டாண்ட் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகப் பகுதி உட்பட பல இடங்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது; இந்நிலையை மாற்ற மாவட்ட நிர்வாகம், நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், முகம் சுளித்து செல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் நகராட்சி, மாவட்ட நிர்வாகம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், பொதுப்பணித் துறை இணைந்து, புதிய சுகாதார தூய்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
தூய்மை நீலகிரி, தூய்மை ஊட்டி என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், முறையாக செயல்படுத்தாததால், நடைமுறையில் வெற்றி பெறாமல் உள்ளது. இதை தவிர்க்க, மக்கள் அதிகம் திரளும் இடங்களில் இலவச கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்; புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டாலும், கட்டணமின்றி பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள கழிப்பிடங்களில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். கழிப்பிடங்கள், லாப நோக்கில் செயல்படுத்தப்படும் பட்சத்தில், சுகாதாரமான நீலகிரியை உருவாக்க முடியாது.
கழிப்பிடப் பராமரிப்பை, நகராட்சி தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். தற்போது, மதுரை உட்பட மாநகராட்சிகளில், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன; இங்கு பணிபுரியும் சுகாதார ஊழியருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது; கழிப்பிடத்தை பயன்படுத்த மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. இதே போல், நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைத்து தன்னார்வ அமைப்புகளிடம் பராமரிக்க வழங்கலாம்; அல்லது, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தனி ஊழியர் நியமித்து பராமரிக்கலாம். சுகாதார மாவட்டமாக நீலகிரியை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக