அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 30 மே, 2010

சுகாதார சோகம் தீருமா?

ஆரோக்கியமான உடல் என்ற சுவர் இருந்தால்தான் நீண்ட ஆயுள் என்ற சித்திரம் வரையலாம். சுற்றுப்புற சுகாதாரம் இதற்கு முக்கிய அஸ்திவாரமாகும். சுகாதாரமற்ற கழிவுகளை குறைக்கத் திணறும் நாடாக இந்தியா மாறிவருவது அபாய பாதையில் பயணிப்பதைக் காட்டுகிறது.÷சுகாதாரத்தில் நம் நாட்டின் நிலையை மத்திய அரசின் சமீபத்திய கணக்கெடுப்பு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. சுகாதாரமான நகரங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த இந்தக் கணக்கெடுப்பில் எந்த நகரமுமே 90 மதிப்பெண்களை எட்டிப் பிடிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.÷சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, குப்பைகள் அகற்றுதல் என பல்வேறு காரணிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் சண்டீகர் 73 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றது. இப் பட்டியலில் மைசூர், சூரத் நகரங்கள் 69 மதிப்பெண்களும், தில்லி 68 மதிப்பெண்களும் பெற்று அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.÷தமிழகத்தில் திருச்சி மட்டுமே 59 மதிப்பெண் பெற்றுள்ளது. சென்னை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பிற நகரங்களின் நிலை பரிதாபத்துக்குரியது.÷சுகாதார நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் நிலை மிகவும் பின்தங்கியிருப்பது தமிழர்கள் அனைவருக்குமே தலைகுனிவு.சுகாதாரக் கேடுகளுக்கு முக்கிய காரணிகளாக கழிப்பறையின்மை, கழிவுநீர் வாய்க்கால்களை முறைப்படுத்தாமை போன்றவற்றை நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள்.÷தமிழகத்தில் கழிப்பறை வசதியில்லாத பகுதிகளே இருக்கக் கூடாது என்ற முனைப்போடு கிராமங்களில் சுகாதார வளாகங்கள் உருவாக்கப்பட்டன.÷கழிப்பறை வசதி மட்டுமன்றி, குளியலறைகளும் இதில் இடம்பெற்றிருந்தன. ஆனால், மாதங்கள் சில கடந்த பின்பு இதன் பராமரிப்பு கேள்விக்குறியாகியது. திறக்கப்பட்ட அதே வேகத்தில் தற்போது பல சுகாதார வளாகங்களின் கதவுகள் மூடிக்கிடக்கின்றன. கழிவுநீர் கால்வாய்களை முறைப்படுத்துவதிலும் தமிழகத்தின் கவனம் கூடுதலாக்கப்பட வேண்டியது அவசியம்.÷இதேபோல மது, புகையிலைக்குப் பின்னர் உலகை மெல்லக் கொல்லும் விஷமாக பிளாஸ்டிக் கழிவுகள் மாறி வருகின்றன.காலையில் பல் துலக்குவதில் தொடங்கி இரவில் தூங்குவதற்காக கொசு வலைகளைத் தொங்கவிடுவது வரை பிளாஸ்டிக்கின் துணையின்றி இன்றைய வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிவிட்டது.÷அழகிய தோற்றம், எளிதான எடை, தண்ணீரிலிருந்து தற்காக்கும் தன்மை என பிளாஸ்டிக்கின் பயன்பாட்டுக்கு மக்கள் சொல்லும் காரணங்கள் அதிகம். ஆனால், அவை மண்ணில் புதைந்ததும் மக்கிப் போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகளைப் பற்றி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தாலும் கூட அதை மனதில் கொள்வதில்லை.÷உலகில் ஆண்டுதோறும் 500 பில்லியன் பிளாஸ்டிக் பைகளை மனிதர்கள் உபயோகிக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அதிகப்படியாக சென்னை நகரில் நாள் ஒன்றுக்கு 3,400 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.÷சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி சுழற்சிக்கு வழி செய்யப்பட்டது. சில இடங்களில் மகளிர் சுயஉதவிக் குழுவினரும் இப் பணியை ஏற்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மையங்கள் தற்போது செயலிழந்துவிட்டன.÷நிலவில் குடியேற ஆய்வுகள் நடக்கும் வேளையில் குப்பைகளைக் கொட்டத் தங்கள் ஊராட்சிப் பகுதியைப் பயன்படுத்துவதாகக்கூறி ஊராட்சி நிர்வாகங்கள் நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறுவதே தமிழகத்தின் நிலை. சில பகுதிகளில் குப்பைகளை அப்புறப்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு விலைபோய், அவர்களின் கண் அசைவுகளுக்கு ஆடும் கவுன்சிலர்களும் உள்ளனர்.÷இதனால் நோய்களின் பிறப்பிடமான குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்தாலும் கண்டுகொள்வதில்லை. மனித வாழ்வுக்கு அடிப்படையான இந்த சுகாதாரப் பிரச்னைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் இருப்பது ஏனோ?÷20 மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் பைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை, கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காத தொழிற்சாலைகளுக்கு அபராதம் போன்ற அரசின் கட்டளைகள் மற்றும் சட்டங்களுக்கு "ஈசல்'களைப் போல குறைந்த வாழ்நாள் இருப்பது நம் நாட்டில் மட்டுமே.÷மருத்துவம், கல்வி, விஞ்ஞானம், விவசாயம் போன்றவற்றில் மட்டும் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிந்து செயல்பட மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.÷குப்பைகளை அகற்றி சுகாதாரத்தைப் பேணுவதில் பன்னாட்டு நிலை அறிந்து நம் நாட்டின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுத்துவது தவறில்லை.ஒவ்வொரு தாலுகாவிலும் குப்பைகளைச் சுழற்சி முறையில் மாற்றவோ, பாதுகாப்பாக அழிக்கவோ நவீன தொழில்நுட்பக் கூடங்களை அமைக்கலாம். ÷மக்களுக்கு நோயற்ற வாழ்வை ஏற்படுத்த கடும் சிரத்தை எடுப்பது அரசின் முக்கியப் பணியாக இருந்தால் உற்பத்திப் பெருக்கம் எளிதாகிவிடும். எனவே கழிப்பறை இல்லா வீடுகள் இல்லை என்பதையும், பிளாஸ்டிக் கழிவுகளைப் பாதுகாப்போடு அழிக்கவும், குப்பையில்லா நகரங்களை உருவாக்கவும் புதிய திட்டங்களை உருவாக்கி சுகாதார சோகத்தை போக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக