அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 30 மே, 2010

பொது நூலகத்துறைக்கு விடிவுகாலம் எப்போது?

இந்திய நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பெருமுயற்சியால், அன்றைய கல்வி அமைச்சர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியாரின் முழு உதவியால் சென்னை மாகாணப் பொது நூலகச் சட்டம் 1948-ல் நிறைவேற்றப்பட்டு, 1950 முதல் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1951-ல் கல்விக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது, முதல் பொது நூலக இயக்குநராகவும் பதவி ஏற்றார்.÷நூலக இயக்கத்தின் தேவையை உணர்ந்த கல்வியாளரான அவர் பதவியேற்றபோது தமிழ்நாட்டில் மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் செயல்பட்டு வந்த நிலையை மாற்றி,   தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். பல மாவட்டங்களில் மைய நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். ÷சென்னையில் தற்போது அண்ணாசாலையில் அமைந்திருக்கும் தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகக் கட்டட இடமும் அதற்குப் பின்னால் உள்ள இடமும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்குச் சொந்தமாக வாங்க, அன்றைய மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் வி.என்.சுப்பராயனுக்கு, தொழிலதிபர் சிம்சன் அனந்தராமகிருஷ்ணன் உதவியுடன், அரசு மூலம் எல்லா உதவிகளையும் பெற்றுத் தந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு.÷மேலும், தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் தன்னலமற்ற தகுதி வாய்ந்தவர்களை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர்களாக நியமித்து, நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டி, சிறப்பாகச் செயல்பட அடித்தளம் அமைத்தவர். அந்தக்காலம் தமிழ்நாடு நூலக இயக்கத்தின் பொற்காலமாகும்!÷நூலகம் என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் அமைப்பாகும். அதன் அடிப்படையில், ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக, அரசாணை எண்.1034 - கல்வி - 5.7.1972-ல் வெளியிடப்பட்டு, பள்ளிக்கல்வி இயக்குநரகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தன்னிச்சையாகச் செயல்பட "பொது நூலகத் துறை' உருவாக்கப்பட்டு, நூலகவியலில் முதுகலைப் பட்டமும், நூல் அனுபவமும் கொண்டு கன்னிமாரா பொது நூலக நூலகராகப் பணியாற்றிய வே.தில்லைநாயகத்துக்குப் பதவி உயர்வு தரப்பட்டு, முதலாவது பொது நூலகத்துறை இயக்குநராக 31.7.1972 முதல் நியமிக்கப்பட்டார். அதன்பின் அரசாணை எண்.223 - கல்வி - 9.2.1974-ல் வெளியிடப்பட்டு பொது நூலகத்துறை இயக்குநர் நியமனத்துக்கான விதிமுறைகளும், கல்வித் தகுதிகளும் வெளியிடப்பட்டன. அதன்படி பொது நூலகத்துறை இயக்குநர் நியமனம் பெற நூலகவியலில் முதுகலைப்பட்டமும், குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் நூலகப்பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.÷1982-ல் வே.தில்லைநாயகம் ஓய்வுபெற்ற பின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றிலிருந்து அரசாணை எண். 223 கல்வியின் கல்வித்தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொது நூலகத்துறை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுள் சிலர் இயக்குநர் பதவி பெற்ற பின், பணியாற்றிக் கொண்டே நூலகவியலில் இளங்கலை, முதுகலைப்பட்டம் பெற்றார்கள்.÷ஆனால் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலிருந்தே பணி மாற்றத்தின் மூலம், அரசாணை எண்.223-கல்வியின் படி போதிய நூலக அனுபவம், நூலகவியலில் முதுகலைப்பட்டம் இல்லாவிட்டால் கூட பொது நூலகத்துறை இயக்குநர்களாக நியமனம் பெற்று வருகிறார்கள். அதன் மூலம் அரசாணை எண்.1043 (கல்வி) 5.7.1972-ன் செயல்பாடுகள் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்?÷பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் பத்தோடு பதினொன்றாக இணை இயக்குநராக இருப்பவர்கள், பணி மாற்றம் பெற்று பொது நூலகத்துறை இயக்குநராக வந்தபின், இங்கு முதல் இடத்துக்கு வந்து விடுகிறார்கள். அதன் மூலம் "பல வசதிகளைப்' பெறுகிறார்கள்.÷சட்டவியலில் பட்டம் பெறாமல் வழக்குரைஞர்களாகவோ, நீதிபதியாகவோ ஆகமுடியுமா? மருத்துவப்பட்டம் பெறாதவர்கள் டாக்டர்களாகச் செயல்பட முடியுமா? பொறியியல் பட்டம் பெறாதவர்கள் பொறியாளர்களாகச் செயல்பட முடியுமா? ஆனால் நூலகவியலில் பட்டம் பெறாதவர்கள், பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றியபின் பணிமாற்றம் பெற்றால், பொதுநூலகத்துறை இயக்குநராகப் பணிபுரியலாம்!÷பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிபவர்கள் மட்டும் எல்லாத் திறமைகளும் பெற்றவர்களா? அரசாணை எண்.1034-கல்வி-5.7.1972-ன் படி பள்ளிக் கல்வித்துறையிலிருந்து பொது நூலகத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டும், கடந்த 20 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வித்துறை தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எட்டுத் துறைகளில் ஒன்றாகவே பொது நூலகத்துறையை வைத்துக் கொண்டு, இயக்குநர் நியமனத்தை மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் என்னென்ன?÷பொதுவாக, பொது நூலகத்துறை இயக்குநர் பணி என்பது, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பதிப்பாளர்களிடம் அச்சிட்ட நூல்களின் மாதிரிப்படிகளைப் பெற்று அதில் தேர்ந்தெடுத்து (எந்த வகையில்?) ஆறு மாதம் கழித்து, மாவட்ட நூலகங்களுக்கு நூல்களை வழங்க ஆணையிட்டு, அதன்பின் நான்கு மாதம் கழித்து அதற்குரிய தொகையை அனுப்ப ஏற்பாடு செய்வதுதான் தங்கள் தலையாய, வசதியான பணி என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். அந்தப் பணிகூட சென்ற இரண்டு, ஆண்டுகளாக நடைபெறவில்லை!÷இந்திய நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் முழு உழைப்பின் பலனாக ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் நேரடியாக நூலகவரி வசூல் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாக வசூல் ஆகிறது. ஆனால் அந்தத் தொகை நூலகங்கள் செம்மையாகச் செயல்பட செலவழிக்கப்படுகிறதா?÷நூலகத்துறை ஜனநாயக முறைப்படி இயங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டுமென, பொது நூலகச் சட்டம் கூறுகிறது. அதன்படி செயல்பட்டதால்தான் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில், மாவட்ட மைய நூலகங்கள் நகரின் மையப் பகுதிகளில் சொந்தக் கட்டடங்களில், செயல்பட்டு வருகின்றன.÷ஆனால், இன்று சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஜனநாயக முறைப்படி, சட்ட விதிகளின்படி மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவில்லை.சென்ற 20 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து வந்து செயல்பட்ட பொது நூலகத்துறை இயக்குநர்களின் நிர்வாகச் சாதனை, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, நூலக மேம்பாட்டுக்குச் செலவிடாமல் சேமித்து வைத்து வட்டிக்குவிட்டு சேர்த்து வைத்திருந்த தொகை ரூ.80 கோடிக்கும் மேலாகும். அந்தத் தொகை முழுவதும் தற்போது கோட்டூர்புரத்தில் உருவாகிவரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப் பயன்படுத்தப்படுகிறது. நல்லகாரியம்! இந்த வகையிலாவது நமது நூலக வரிப்பணம் பயன்படுகிறது என்பதுவரை மகிழ்ச்சி.÷இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வசூல் செய்த நூலகவரி ரூ.35 கோடிக்கு மேலாகும். ஆனால் நகரில் இயங்கும் 134 கிளை நூலகங்களில் 60-க்கும் மேற்பட்ட நூலகங்களில் நூலகர்கள் நியமிக்கப்படவில்லை. வாய்ப்புக் கிடைத்தால், தியாகராயநகர் கிளை நூலகம், குப்பை வண்டிகள் சூழ, அஸ்பெஸ்டாஸ் ஓட்டுக் கூரை, தகரக்கதவுடன் செயல்படுவதைக் கண்டு வாருங்கள்! நகரின் முக்கிய பகுதி கிளை நூலகத்தின் நிலை இது!÷பொது நூலகத்துறையின் கீழ் பணியாற்றும் 5000-க்கும் மேற்பட்ட பலநிலை நூலகர்களுக்குச் சென்ற 15 ஆண்டுகளாகப் பதவி உயர்வே தரப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் நூலகவியலில் பி.எல்.ஐ.எஸ், எம்.எல்.ஐ.எஸ், எம்.பில். மற்றும் சில பேர் முனைவர் பட்டம் கூட பெற்றிருக்கிறார்கள்.÷ஆண்டுதோறும் பொதுமக்கள் கோடிக்கணக்காக நூலக வரி செலுத்தினாலும், ஆயிரக்கணக்கான மூன்றாம் நிலை நூலகர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டவோ, தேவைப்படும் மேஜை, நாற்காலிகள் வாங்கிப் போடவோ ஏற்பாடு செய்யப்படவில்லை.÷தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் தவிர மற்ற 29 மாவட்டங்களில் நூலக ஆணைக்குழுவுக்குத் தலைவர்களோ, உறுப்பினர்களோ நியமனம் செய்யப்படவில்லை.÷ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட நூலக அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது 30 மாவட்டங்களுக்கும், ஆறு மாவட்ட நூலக அலுவலர்கள் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மாவட்ட நூலக நிர்வாகம் எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!÷பதிப்பாளர்கள் 2007-ல் அனுப்பிய நூல்களுக்கு இன்னும் முழுமையாகப் பணம் வந்து சேரவில்லை. 2008-ல் கொடுக்கப்பட்ட மாதிரி நூல்களுக்கு இன்னும் நூல்கள் வழங்க உத்தரவு வரவில்லை. 2009-ல் பதிப்பிக்கப்பட்ட நூல்களை மாதிரிக்குத்தர இன்னும் அனுமதிக்கப்படவில்லை.÷கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான நூலகம் கட்டினால் ஆயிற்றா? முதலில், நூலகத்துறை முறையாகச் செயல்படாமல், நூலகவியல் படித்தவர்கள் நூலகத்துறையை நிர்வாகம் செய்யாமல் உலகத்தரம் எவ்வாறு உறுதி செய்யப்படும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக