'இ-மாவட்டம்' திட்டம் 5 மாவட்டங்களில் அமல் :
கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
சென்னை : கோவை, திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில், "இ- மாவட்ட திட்டத்தை' முன்னோடி திட்டமாக செயல்படுத்த, மாநில திட்டக் குழு, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இருப்பிடச் சான்று, குடியிருப்புச் சான்று, ஜாதிச் சான்று, திருமணச் சான்று, வருமானச் சான்று, வேலைவாய்ப்பு போன்ற அனைத்து சான்றிதழ்களையும், மின் ஆளுமை முறையில் வழங்கவும், சமூக நல ஓய்வூதியங்கள், வருவாய் கோர்ட் வழக்குகள், அரசு கடன் மற்றும் மீட்பு, பொது வினியோக திட்டம், தகவல் உரிமைச் சட்ட சேவைகள் போன்ற அனைத்தையும் இணையதளம் மூலம் மின் ஆளுமை முறையில் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தமிழகத்தில் முன்னோடியாக, ஐந்து மாவட்டங்களில் "இ- மாவட்ட திட்டத்தை' செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. கோவை, திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இத்திட் டம் முன்னோடியாக செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்காக மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி, திட்டத்தை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்தவும், கொள்கைகள் வகுக்கவும் முழு அதிகாரம் கொண்ட மாநில திட்டக் குழுவை அமைக்க வேண்டும். இக்குழு, மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகள், மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, திட்டம் சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாநில திட்ட அமலாக்கக் குழுவுடன், மாவட்ட அமலாக்கக் குழுவையும் அமைத்து, அடிக்கடி இக்குழுக்கள் கூட்டம் நடத்தி, திட்டத்தின் முன்னேற்றம் பற்றி விவாதிக்க வேண்டும். இதற்கான குழுக் களை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மாநில திட்டக் குழுவில், வருவாய் துறைச் செயலர் இணை தலைவராகவும், வருவாய் நிர்வாக கமிஷனர், நில நிர்வாக கமிஷனர், நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நிலவரித் துறை கமிஷனர், நில அளவைத் துறை கமிஷனர், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறை கமிஷனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பர்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரி இதன் உறுப்பினர் செயலராகவும், எல்காட் நிறுவன மேலா ண்மை இயக்குனர் உறுப்பினராகவும் செயல்படுவர். மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), நேர்முக உதவியாளர் (வேளாண்மை), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர், மாவட்ட வழங்கல் அதிகாரி, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, நில அளவைத் துறை உதவி இயக்குனர், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மண்டல போக்குவரத்து தலைமையிட அதிகாரி, போக்குவரத்து துணை கமிஷனர் நியமிக்கும் மண்டல போக்குவரத்து அதிகாரி, தேசிய தகவல் மையத்தின் மாவட்ட தகவல் அதிகாரி, எல்காட் நிறுவன கிளை மேலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக