"ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஆணையம் செல்லலாம்' மனித உரிமை கள ஆய்வுப் பயிற்சியில் அறிவுரை
ஊட்டி : "மனித உரிமை பிரச்னைகளை ஆணையத்திடம் கொண்டு செல்ல, அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், மதுரை மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம், மனித உரிமை கல்வி நிறுவனம் சார்பில், ஊட்டி பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சமுதாயக் கூடத்தில், மனித உரிமை கள ஆய்வுப் பயிற்சி நடத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய வட்டார பொறுப்பாளர் முருகன் வரவேற்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""மனித உரிமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. மனித உரிமை ஆணையத்துக்கும், மனித உரிமைகளின் அமைப்புகளுக்கும் உள்ள வித்தியாசம் பலருக்கு தெரிவதில்லை; மனித உரிமை பிரச்னைகளை ஆணையத்திடம் கொண்டு செல்ல, அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.
மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் பேசுகையில், ""மனித உரிமை அமைப்புகள் பல, பெயரளவில் மட்டுமே உள்ளன. இவைகள், மனித உரிமைப் பிரச்னைக்காக, போராட்டம் மட்டுமே நடத்தி வருகின்றன. உண்மை சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்,'' என்றார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் வித்யாசாகர், அடிப்படை உரிமைகள், சட்டத்தில் உள்ள உரிமைகள், கோட்பாடுகள் குறித்து பேசினார். மனித கள ஆய்வுகள் மேற்கொள்வது, மனித உரிமையின் நோக்கம், சட்டம், மக்களின் பிரச்னைகள், குற்றங்கள், பிரச்னை ஏற்பட்டால் முறையிடும் முறை, தீர்வுகளை எப்படி பெறுவது, மனித உரிமை பிரச்னைகளை கையாளுதல், பிரச்னைக்குரிய உண்மையான சம்பவ பின்னணி குறித்து ஆய்வு செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் சென்றடையும் வழிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
போதைப் பொருட்கள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்கள், இளைஞர் மன்றங்களை சேர்ந்தவர்கள், அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக