வகுத்த வழியை பின்பற்றினால் கிடைக்கும் நிம்மதி! சுற்றுச்சூழல் கருத்தரங்கில் அறிவுரை
"வீடு கட்ட, சுற்றுச்சூழலை பாதுகாக்க வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால், வரும் காலங்களில் நிம்மதியாக இருக்கலாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோத்தகிரியில், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், சர்வதேச சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு நடத்தப்பட்டது.
நிர்வாகி துரைராஜ் வரவேற்றார்.
"உலக நாடுகளில் சுற்றுச்சூழல் தான் முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது; காலநிலை மாற்றமே இதற்கு சாட்சியாக உள்ளது. மரங்கள் அழிக்கப்பட்டதால் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தற்போது தான் அதிகளவு ஏற்பட்டுள்ளது. ஆனால், செயல்பாடில் போதிய கவனம் செலுத்தாததால், மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்ற நீலகிரியில், இயற்கை தொடர்பாக சமீபகாலங்களாக அரங்கேறி வரும் அசம்பாவிதங்கள், மக்களிடையே நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; நவம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, ஆறாத வடுவாக உள்ளது.
தற்போது சிறு மழை பெய்தாலும் கூட, நவம்பர் மாதம் தான் நினைவுக்கு வருகிறது. மாவட்டத்தில் உள்ள வனங்கள், தொடர்ந்து அழிக்கப்படுவது, விதிமீறி கட்டடம் கட்டப்படுவது, நீராதாரங்கள் சுரண்டப்படுவது போன்ற காரணங்களால், இயற்கையின் தன்மை மெல்ல, மெல்ல மாறுகிறது. இதற்கு அதிகாரிகளை மட்டும் குறை சொல்லி விட முடியாது; மக்களுக்கும் இதில் பங்கு உண்டு. வீடு கட்ட, சுற்றுச்சூழலை பாதுகாக்க வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால், வரும் காலங்களில் நிம்மதியாக இருக்கலாம்; எதிர்கால சந்ததிகளுக்கு, இயற்கையை விட்டுச் செல்ல வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பத்தை தடுக்க, நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது; பசுமைக்குடில்களில் மலர் உற்பத்தி திட்டம் என்ற பெயரில், கொய்மலர் சாகுபடி செய்வதால், ஓடைகள் வறண்டு வருவதுடன், மண்ணின் உயிர் தன்மை இழக்கிறது; மருந்துகளால், பணி புரியும் விவசாயிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, ஓடைகள் மற்றும் மண்ணின் உயிர் தன்மையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்;
சுற்றுச்சூழல் மாணவர் குழுக்களை ஏற்படுத்தி, அந்தந்தப் பகுதி வனத்துறையுடன் இணைந்து, மாதந்தோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது; மரபணு மாற்று காய்கறிகள், விதைகள் போன்றவற்றை தடுத்து காய்கறிகளுக்கு இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீலகிரி மாவட்டத்தில் அழிந்து வரும் ஈட்டி, தேக்கு, சந்தனம், கருவாகை மற்றும் நாவல் மரங்களை வெட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; வன உயிரினங்களை பாதுகாத்து, வனத்தீயை தடுக்கவும், தற்காலிக வன ஊழியர்களை நிரந்தரமாக்கி, வனப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்து, நிலத்தடி நீர் உறிஞ்சும் மோட்டார்களை தடை செய்ய வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் சங்கப்பிள்ளை, தம்பிராஜா, ரத்தினம், ஜெகதீஸ்வரன், சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர்.
இயற்கை ஆர்வலர்கள் சீனிவாசன், ஜவஹர் ஆறுமுகம், பிரான்சிஸ், ஆனந்தராஜா, சாஸ்திரி சுந்தரம்பாள், பழனியம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
மகேஸ்வரன் நன்றி கூறினா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக