உதட்டு மேலே சிவப்பு சாயமா கொஞ்சம் உஷாரா இருங்க:நிபுணர்கள் எச்சரிக்கை
பெண்கள் தங்களது அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில், உதட்டில் பூசும் லிப்ஸ்டிக்களில் விஷப்பொருட்கள் அதிக அளவில் உள்ளதால், அதனை தொடர்ந்து பயன்படுத்தும் பட்சத்தில், குழந்தைபேறு கிடைப்பதில் சிக்கலும், கருச்சிதைவும் ஏற்படும் அபாயமும் உள்ளதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதிலும் குறிப்பாக விலை உயர்ந்த லிப்ஸ்டிக்களில்தான் அதிகப்படியான விஷத்தன்மை உள்ளதாக ஆமதாபாத் நகரை சேர்ந்த நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, புழக்கத்திலுள்ள வெவ்வேறு விதமான 49 வகை லிப்ஸ்டிக்குகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில், விலை குறைந்த வகைகளை விட, அதிகவிலை வைத்து விற்கப்படும் லிப்ஸ்டிக்குகளில் தான் விஷத்தன்மை அதிகமாக கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதிலும் குறிப்பாக சிவப்பு நிறத்திலுள்ள லிப்ஸ்டிக்குகளை காட்டிலும், பிரவுன் நிறத்திலுள்ள லிப்ஸ்டிக்குகளில் தான் அதிகப்படியான விஷத்தன்மை கலந்திருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.பத்து ரூபாய்க்கு விற்கப்படும் லிப்ஸ்டிக்சில், 2 முதல் 17 பி.பி.எம்., அளவில் விஷத்தன்மை உள்ளது. அதுவே நூறு ரூபாய்க்கு விற்கப்படும் லிப்ஸ்டிக்கில் இதன் அளவீடுகள் முறையே 11 முதல் 23 பி.பி.எம்., ஆகவும் இருக்கின்றன.பிரவுன் நிறத்திலான லிப்ஸ்டிக்கில், 25 பி.பி.எம்., சிவப்பு நிறத்தில் 23 பி.பி.எம்., என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இந்திய தர நிர்ணயத்தினரால் அனுமதிக்கப்பட்ட 20 பி.பி.எம்., என்பதை விட சற்று அதிகமாகும்.இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிக விஷத்தன்மை கொண்ட லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த விஷப்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கேட்கும் திறன், மொழி மற்றும் நடத்தையில் திடீர் மாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
மிக முக்கியமாக மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. கருவுற்றுள்ள பெண்களுக்கு கருச்சிதைவு கூட ஏற்படலாம் என அதிர்ச்சித் தகவலும் வெளியாகி யுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது கருவுற்றுள்ள தாய்மார்களும், குழந்தைகளும் தான் என்பது தான் அந்த ஆய்வறிக்கையின் ஹைலைட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக