ஊரகப் பகுதிகளில், பாலியல் குற்றங்கள் மற்றும் போதைக்கு அடிமையாதல்
ஆகியவற்றை தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 4,170 இளம்
தூதுவர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான, பணிகள்
புதுவாழ்வு திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
உலக வங்கி நிதியுதவியுடன், தமிழகத்தின், 26 மாவட்டங்களில் உள்ள, 120 பின் தங்கிய வட்டாரங்களில், புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பகுதிகளில், எய்ட்ஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள், மது மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ளனர். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிக எண்ணிக்கையில், நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில், இப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, புதுவாழ்வுத் திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொளளப்படுகின்றன. இதற்கு, இப்பகுதிகளில் உள்ள இளைஞர்களைப் பயன்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு ஊதியத்துடன் வேலை அளிக்கும் அதே வேளையில், எய்ட்ஸ் மற்றும் போதைக்கு அடிமையாதல், பாலியல் குற்றங்கள் ஆகியவற்றைத் தடுக்க, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இளைஞர்களின் வறுமையை ஒழிக்கவும் இத்திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து, புதுவாழ்வுத் திட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராம அளவில் உள்ள வேலைவாய்ப்பு மையங்களின் கீழ், வறுமை ஒழிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம், 2 லட்சம் இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, 1.66 லட்சம் இளைஞர்கள் பல்வேறு வேலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பு மையங்களில், கிராமங்களில் உள்ள இளைஞர்களின் புள்ளி விவரங்கள் உள்ளன. இவற்றிலிருந்து, புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் 4,170 கிராம ஊராட்சிகளுக்கு, 4,170 இளம் தூதுவர்களாக, இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவர்களுக்கு எய்ட்ஸ், போதை தடுப்பு, பாலியல் குற்றங்கள் தடுப்பு ஆகியவை குறித்து, பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். இப்பயிற்சிக்கு, சுகாதாரத் துறையின் பயிற்சி முறைகள் பின்பற்றப்படும். மேலும், தமிழக இளைஞர் நல துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மனித வள மையம், திறன் மேம்பாட்டு மையம் போன்ற துறைகளும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும். பயிற்சி பெற்ற இளைஞர்கள், மேலும், 1.50 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பர். இவர்கள், புதுவாழ்வுத் திட்ட கிராமங்களில், பாலியல் குற்றங்களைத் தடுத்தல், எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவர். இப்பயிற்சிக்கு, 2.25 கோடி ரூபாய் செலவிடப்படும். இளைஞர்களை குழுக்களாகப் பிரித்து பயிற்சி அளிப்பது குறித்து, அரசின் அனுமதிக்குக் காத்திருக்கிறோம், விரைவில், பயிற்சி துவங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்
மக்கள் மையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக