அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

குழந்தைகள் பாதுகாப்பு

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூறிய புகழ்பெற்ற வாசகத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், "மனிதகுலம் உய்வதற்கான ஒரே நம்பிக்கை என்னைப் பொறுத்தவரையில் ஆசிரியர் பணியில்தான் அடங்கியிருக்கிறது" இந்திய மரபு ஆசிரியர்களைக் கடவுளுக்கு இணையாகப் போற்றிவருகிறது.

எந்த ஒரு ஆசிரியரும், தனிப்பட்ட நபரின் வாழ்வில் மிகப் பெரும் பங்காற்றுகிறார். இளம் மாணவர்களின் மனங்களில் மரியாதைக்குரிய இடம், ஆசிரியர்களுக்கு இருக்கிறது. பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, ஆசிரியர்தான், குழந்தையின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சிறுவர் சிறுமிகளின் ஆளுமையை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகிறார்.

உங்கள் அனைவருக்கும் தெரியும்; ஒவ்வொரு சமூகத்திலும் குழந்தைகள், அவர்கள் அறியாமலேயே, தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். வன்முறை, சுரண்டல்கள் ஆகியவற்றிற்கு உள்ளாகிறார்கள். உங்களைச் சுற்றி நீங்கள் கவனித்தாலே போதும், இவையெல்லாம் நிகழ்ந்துகொண்டிருப்பது தெரியவரும் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலான சிறுவர்கள் அடிமைகளைப் போல வேலை செய்கிறார்கள். குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்கள். வகுப்பறைகளில், ஆசிரியர்களால் வதைபடும் குழந்தைகள் அல்லது அவர்களது சாதி, மதம் ஆகியவற்றின் காரணமாக, பாரபட்சத்துடன் நடத்தப்படுவது, பெண் குழந்தைகள் பிறக்கக்கூட அனுமதிக்கப்படாமல் இருப்பது., அப்படியே பிறந்தாலும், உடனடியாகக் கொல்லப்படுவது அல்லது அவர்கள் பெண்களாக இருப்பதால், குடும்பத்திலும், சமூகத்திலும் பாரபட்சத்துடன் நடத்தப்படுவது சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுவது, கற்பழிப்பு, தகாத முறையில் குடும்பத்தினராலேயே பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுதல் போன்றவை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆம்! இதுதான் பல குழந்தைகளின் வாழ்வின் உண்மை நிலை. இவர்களில் சிலர், உங்களுடைய வகுப்பிலோ அல்லது நீங்கள் பணிபுரியும் பள்ளியிலோ இருப்பார்கள்.

எந்த ஒரு குழந்தையாவது, தவறாகப் பயன்படுத்தப்படுவது, கொடுமைக்குள்ளாவது போன்றவற்றிற்கு ஆளாவது தெரியவந்தால், ஆசிரியர் என்ற முறையில் என்ன செய்வீர்கள்?

• விதியின் மிது பழிபோடுவீர்களா?
• ஏறக்குறைய அத்தனை பேரும் இம்மாதிரியான சூழ்நிலையில் இருந்து வளர்ந்து வந்தவர்கள்தானே, இதில் என்ன தவறு என்று வாதம் செய்வீர்களா?
• நடப்பவை அவரவர் சமூகத்தின் பழக்க வழக்கம், நடைமுறை, ஆகவே, அதுபற்றி எதுவும் செய்ய இயலாது என்று வாதம் செய்வீர்களா?
• வறுமைதான் இவற்றிற்கெல்லாம் காரணம் என்பீர்களா?
• லஞ்ச லாவண்யம்தான் காரணம் என்று பழிபோடுவீர்களா?
• சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்மீது பழிபோட்டுவிட்டுச் சும்மா இருந்து விடுவீர்களா?

ஒருவேளை, சம்பந்தப்பட்ட குழந்தை உங்களது மாணவராக இல்லாவிட்டால், நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று நினைப்பீர்களா?

• பாதிக்கப்பட்ட குழந்தைக்குப் பாதுகாப்பு தேவை என்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்ய முயற்சிப்பீர்களா?
• செயல்படுவதற்குத் தகுந்த வகையில் ஆதாரங்கள் கிடைக்கும் வரை காத்திருப்பீர்களா?

அல்லது, உடனடியாகச் செயல்பட்டு

• பாதிக்கப்பட்ட குழந்தை, பாதுகாப்பான சூழ்நிலையில் வைக்கப்படுவதை உறுதிசெய்வீர்களா?
• அந்தக் குழந்தையிடம் பேசுவீர்களா?
• குழந்தையின் குடும்பத்தாருடன் இது பற்றிப் பேசுவீர்களா? ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதற்கான உரிமை இருப்பதை எடுத்துக் கூறுவீர்களா?
• குழந்தைகளைக் கவனமாகப் பொறுப்புணர்வுடன் பார்த்துக்கொள்வதுதான் பெற்றோர்களின் முதல் கடமை என்று அறிவுறுத்துவீர்களா?
• தேவைப்பட்டால் அந்தக் குழந்தைக்கோ அல்லது அதன் குடும்பத்தினருக்கோ உதவி செய்வீர்களா?
• குழந்தையின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துபவை எவை என்பதைக் கண்டறிவீர்களா?
• குழந்தையிடம் குரரூரமாக நடந்துகொள்பவர்கள் அல்லது யாரிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமோ, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா? நிலமை மோசமாகி, சட்டபூர்வமான நடவடிக்கை அல்லது சட்டபூர்வ பாதுகாப்பு தேவை என்ற நிலையில் என்ன செய்வீர்கள்?
• காவல்துறையையோ இதுபோன்ற குற்றங்களைத் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்ணையோ தொடர்புகொண்டு உதவி கேட்பீர்களா?

நீங்கள் எந்த வகையில் செயல்படுபவர் என்பது, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

உங்களைப் பொறுத்தவரை நீங்கள் யார்? வெறும் ஆசிரியர் மட்டும்தானா?

அல்லது பொது விஷயங்களில் பொறுப்புடன் தலைமையேற்றுச் செயல்படுபவரா?

இரண்டாம் வகை நபர்கள் மற்றவர்களைப் பாதுகாத்து கவனித்துக்கொள்வதில் அக்கறை கொண்டவர்கள். சமூக மாற்றங்களுக்குக் காரணமாக இருப்பவர்கள்.

ஆசிரியர்களாகிய நீங்கள் சமூகத்தில் மிகவும் முக்கியமானவர்கள்; ஏனெனில், • நீங்கள்தாம் குழந்தைகளின் சமூகம் மற்றும் சுற்றுப்புறச் சூழலில் இன்றியமையாத பகுதியாக இருக்கிறீர்கள். ஆகவே, அவர்களது உரிமைகளைப் பாதுகாத்துக் காப்பாற்றுவது உங்களது கடமை என்று கூறலாம்.
• நீங்கள்தாம் அவர்களுக்கு முன்மாதிரி. வழிகாட்டி.
• உங்கள் மாணவர்களின், வளர்ச்சி, முன்னேற்றம், நலன், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு நீங்கள்தாம் பொறுப்பாளர்.
• உங்களது இந்த நிலை காரணமாகவே உங்களுக்கு அதிகாரமும், பொறுப்பும் அளிக்கப்பட்டு இருக்கின்றன.
• கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக மட்டுமின்றி, உங்களால் சமூக மாற்றம் ஏற்படுத்தும் காரணியாக ஆக முடியும்.

இந்தச் சிறிய கையேடு, உங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது.. இதன் மூலம், குழந்தைகளுக்கு உதவி செய்து, அவர்கள் கொடுமைக்குள்ளாவது, சுரண்டப்படுவது ஆகியவற்றிலிருந்துக் காப்பாற்ற முடியும். இவற்றில் அடங்கியுள்ள சட்டங்களைப் பற்றி சுருக்கமாக இங்கே விவாதிக்கப்பட்டு இருந்தாலும், பிரச்சினை என்று வரும்போது, ஒரு வழக்கறிஞரிடம், முறையான சட்ட ஆலோசனை பெறுவது மிகவும் சிறந்தது.

1. குழந்தைகளுக்கான உரிமைகளைப் புரிந்துகொள்வது      

(1:1) குழந்தை என்று யாரைக் குறிப்பிடலாம்?       

சர்வதேசச் சட்டத்தின்படி, 18 வயதுக்குக் கீழுள்ள ஒவ்வொரு மனிதனும் குழந்தை என்று கருதப்படுவார். உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் இது. ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் குழந்தைகளுக்கான உரிமைகள் வரையறுக்கப்பட்டது. அவற்றின்படியும் இந்தக் கருத்தே பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (யு என்ஸிஆர்ஸி) இந்த வரையறைகள் பலநாடுகளில் சட்டத் திருத்தங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சட்டபூர்வமான உரிமைகளும் பாதுகாப்பும் பெற்ற, தனிப் பிரிவினராகவே கருதப்படுகின்றனர். இதனால்தான், 18 வயதானவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை, வண்டி ஓட்ட உரிமம் பெறும் தகுதி, சட்டபூர்வமான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் உரிமை ஆகியவை வழங்கப்படுகின்றன. 18 வயதுக்குக் குறைந்த பெண்ணும் 21 வயதுக்குக் குறைந்த ஆணும் திருமணம் செய்துகொள்வது 1929இல் குழந்தைத் திருமணத் தடை சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி யு.என்.ஸி.ஆர்.ஸி.யின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி இந்தியாவில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆதரவும் பாதுகாப்பும் தேவைப்படும் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு அதை அளிக்க வேண்டிய பொறுப்பு அரசைச் சார்ந்தது; அதைப் பெறும் உரிமை 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு உண்டு என்பது இந்தச் சட்டத் திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டது.

குழந்தை என்றால் யார் என்பதைப் பற்றி பல்வேறு கோணங்களில் விளக்கும் பிற சட்டங்கள், யுஎன்ஸிஆர்ஸியின் வழிகாட்டு நெறிகளுடன் முழுவதும் ஒத்துப் போகாத வண்ணம் இருக்கின்றன. ஆனாலும் கூட, முன்பே குறிப்பிட்டது போல, சட்டபூர்வமாகப் பெண்களின் பருவமுதிர்வு வயது 18 என்றும், பையன்களுக்கு 21 வயது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயமாக இருக்கிறது.

இப்படிப் பார்த்தால், கிராமம், சிறு நகரம், நகரம் ஆகிய பகுதிகளில் உள்ள 18வயதுக்குக் கீழே உள்ள அனைவரும் குழந்தைகளாகவே கருதப்பட்டு நடத்தப்பட வேண்டியவர்கள். உங்களது உதவியும் ஆதரவும் அவர்களுக்குத் தேவை.

குழந்தை என்பதைத் தீர்மானிக்கும் விஷயம் அந்த நபரின் வயது மட்டும்தான். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் திருமணம் ஆகியிருந்து, குழந்தைகள் இருந்தாலும்கூட, குழந்தையாகவே அங்கீகரிக்கப்படுவார்கள்.

முக்கிய அம்சங்கள்:

• 18 வயதுக்குக் கீழ் இருக்கும் அனைத்து நபர்களும் குழந்தைகள்தாம்.
• குழந்தைப் பருவம் என்பது ஒவ்வொரு மனிதரும் கடந்தே ஆக வேண்டிய ஒரு பருவம்.
• குழந்தைகள், தங்களது குழந்தைப் பருவக் காலத்தில் பல்வேறு விதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள்.
• அனைத்துக் குழந்தைகளும், கொடுமைக்கு உள்ளாவது, தவறாகப் பயன்படுத்தப்படுவது ஆகியற்றிலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்கள்தாம்.

குழந்தைகளுக்கு எதனால் சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது?

• தாங்கள் வாழும் சூழ்நிலைகளால், பெரியவர்களை விட அதிகமாக பாதிக்கப்படக்கூடிய பலவீனமான நிலையில் குழந்தைகள் இருக்கிறார்கள்.
• ஆகவே, மற்றெந்தப் பிரிவினரையும் விட, அவர்கள் சார்ந்த சமூகம் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளாலும் நடவடிக்கையின்மையினாலும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
• நமது சமூகத்தையும் சேர்த்து, பல்வேறு சமூகங்களில் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோரின் சொத்துக்களாகக் கருதப்படுக்கிறார்கள். அவர்கள் இன்று பெரியவர்கள் அல்ல என்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அவர்களுக்குப் பங்கு இல்லை என்றும் கருதப்படுகிறார்கள்.
• குழந்தைகள், தங்களுக்கு என்று மனமும், புத்தியும் கொண்டவர்கள் என்றோ தனிக்கருத்தை உடையவர்கள் என்பதாகவோ, தனக்கு வேண்டியது பற்றித் தேர்ந்தெடுக்கும் திறன் உள்ளவர்கள் எந்த விஷயத்தைக் குறித்தும் முடிவு செய்யும் திறமை உள்ளவர்கள் என்றோ பெரியவர்கள் கருதுவதில்லை.
• பெரியவர்கள், குழந்தைகளை வழிநடத்துவதற்குப் பதிலாக அவர்களது வாழ்க்கை குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள்.
• குழந்தைகளுக்கு ஓட்டுரிமை கிடையாது. அதே போல அரசியல் பலமும் கிடையாது. பொருளாதாரத்திலும் பலவீனமாகவே இருக்கிறார்கள். இதனாலேயே அவர்களது குரலும் கோரிக்கைகளும் பெரும்பாலும் எடுபடுவதில்லை.
• குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, குரூரமாக நடத்தப்படுவது போன்ற அவலங்களுக்கு உள்ளாகக் கூடிய பலவீனமான நிலையில் உள்ளார்கள்.

(1:2) குழந்தைகளுக்கான உரிமைகள் என்ன?         

18 வயதிற்குள் இருப்பவர்கள் சட்ட ரீதியான உரிமைகள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஆகியவற்றைப் பெறத் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள். இவை தவிர சர்வதேச சட்டங்களில் நாம் ஏற்றுக் கொண்டவை மூலமாகக் கிடைக்கும் உரிமைகளுக்கும் உரியவர்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம், அனைத்துக் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட உரிமைகளை அளித்திருக்கிறது. இவற்றை இந்தக் காரணத்திற்காகவே சட்ட அமைப்பில் சேர்த்துள்ளார்கள் அவை:

• 6-14 வயது பிரிவினர் அனைவருக்கும் கட்டாயமாக ஆரம்பக் கல்வி இலவசமாகப் பெறுவதற்கான உரிமை (சட்டப்பிரிவு 21எ)
• 14 வயது பூர்த்தியாகும் வரை தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையில் வேலை செய்யத் தடை என்கிற பாதுகாப்பு உரிமை (சட்டப் பிரிவு 24)
• பொருளாதார நிலை காரணமாக வேறு வழியின்றி அவர்களது வயது அல்லது வலிமையை மீறிய பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது, கொடுமைக்குள்ளாவது ஆகியவற்றுக்குத் தடை என்ற பாதுகாப்பு உரிமை (சட்டப் பிரிவு 39) (இ)
• ஆரோக்கியமான முறையில் வாழ்வில் முன்னேற சம வாய்ப்பு வசதிகள், ஆகியவற்றிற்கான உரிமை, சுதந்திரம், சுய கௌரவம் போன்றவற்றைப் பொறுத்தவரையில், குழந்தைப் பருவத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவர் என்ற உரிமை; பொருள், சொத்துகள் போன்றவற்றைத் தராமல் தவிக்கவிடுதல்; அவர்களை ஒதுக்கிவைத்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு (சட்டப்பிரிவு 39 (எஃப்)

இவற்றைத் தவிர, இந்தியாவிலுள்ள பிற குழந்தைப் பருவ வயதைக் கடந்த ஆண்/பெண் ஆகியோருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும், குழந்தைகளுக்கும் இருக்கிறது.

• சமான உரிமை (சட்டப்பிரிவு 14)
• பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான உரிமை (சட்டப்பிரிவு-15)
• தனிப்பட்ட சுதந்திரத்திற்கும், சட்டபூர்வமான செயல்பாடுகளுக்குமான உரிமை (சட்டப்பிரிவு 21)
• இழிதொழில் வணிகத்திலிருந்து பாதுகாக்கப்படவும், வலுக்கட்டாயமாகக் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படவும் உரிமை (சட்டப்பிரிவு - 23)
• சமுதாயத்தில் பலவீனமாக இருக்கும் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சமூக அநீதிகளால் பாதிக்கப்படுவதிலிருந்தும் அனைத்து வகையானச் சுரண்டல்களிலிருந்துப் பாதுகாக்கப்பட உரிமை (சட்டப்பிரிவு 46)

எந்த அரசாங்கமாக இருந்தாலும், அதற்கென்று சில கடமைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

• பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சிறப்பான சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் (சட்டப் பிரிவு 15) (3)
• மக்களில் பலவீனமான பிரிவினருக்குக் கல்வி மேம்பாட்டுக்கான வழிவகை செய்தல் (சட்டப் பிரிவு 46)
• சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல் (சட்டப் பிரிவு-29)
• தனது மக்களுடைய உணவின் தரம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் தொடர் முன்னேற்றத்துக்கான செயல்களில் ஈடுபடல் (சட்டப் பிரிவு - 47)

அரசியலமைப்புச் சட்டத்தைத் தவிர குழந்தைகளின் நலனுக்காகவே குறிப்பிட்ட வகையில் பல சட்டங்கள் இருக்கின்றன. பொறுப்புணர்வு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் குடிமகன்களாக இருக்கும் நீங்கள் இவற்றைப் பற்றியும், இவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இவை, இந்தக் கையேட்டில் பல பகுதிகளில் விவரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை எப்படிப்பட்ட விஷயங்களைக் கையாள்வதற்காக என்பவை பற்றியும் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.

குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாட்டுத் தீர்மானங்கள்

குழந்தைகளுக்கு எந்த விதமான சட்டரீதியிலான உரிமைகள் இருக்க வேண்டும் என்பதைப்பற்றி ஐக்கிய நாடுகள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள், சர்வதேசச் சட்டங்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை பொதுவாக சிஆர்ஸி என்று அறியப்படுகின்றன.

குழந்தைகளின் உரிமை குறித்து ஐ.நா.வின் மாநாட்டுத் தீர்மானங்களின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

• இந்தத் தீர்மானங்கள் 18 வயது வரையுள்ள பெண்கள் மற்றும் பையன்கள் ஆகிய இருபாலருக்கும் பொதுவானது. இந்த வயதில் இவர்களுக்குத் திருமணம் ஆகி இவர்களுக்கே குழந்தைகள் இருந்தாலும் இவை பொருந்தும்.
• குழந்தையின் அதிகபட்ச நலன் பாரபட்சமற்ற நிலை மற்றும் 'குழந்தையின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பு அளிப்பது' போன்ற வழிகாட்டு நெறிகளின்படியே இருந்தது.
• குடும்பம் என்ற அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்த மாநாடு, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
• சமுதாயத்தில் குழந்தைகளுக்கான நியாயமான மற்றும் சம அளவிலான உரிமைகளைப் பெறுவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய வேண்டும்;இது அரசாங்கத்தின் கடமை என்று மாநாடு தெரிவித்தது.
• குழந்தைகளுக்குச் சம அளவிலான சிவில், அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு உரிமைகள் இருக்க வேண்டும் என்பதை மாநாடு அறிவுறுத்தியது

• இந்த உரிமைகள்:

o உயிர் வாழும் உரிமை
o பாதுகாப்பு
o வளர்ச்சி
o பங்கேற்பு

உயிர் வாழும் உரிமை என்பதில் கீழ்க்கண்டவை அடங்கும்:

 வாழ்வதற்கான உரிமை
 சிறந்த தரமான ஆரோக்கியத்தைப் பெற உரிமை
 சத்துணவு
 போதிய அளவு தரமான வாழ்க்கை
 அடையாளத்திற்கான ஒரு பெயர் மற்றும் தேசிய அடையாளம்

வளர்ச்சி காண்பதற்கான உரிமை என்பதில் கீழ்க்கண்டவை அடங்கும்:

 கல்வி கற்பதற்கான உரிமை
 ஆரம்ப கட்டக் குழந்தைப் பருவத்தில் பராமரிப்பும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல்
 சமூகப் பாதுகாப்பு
 ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை

பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை என்பது,

• சுரண்டல்கள்
• கொடுமைகள்
• மனிதத் தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துதல்
• உதாசீனம் செய்தல் அல்லது புறக்கணித்தல்
• ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு.
• மேலும் நெருக்கடி காலம், போர், உடல் ஊனமுற்ற நிலை ஆகிய சமயங்களில் சிறப்புப் பாதுகாப்பு

பங்கேற்பு உரிமை என்பது,

• குழந்தைகளின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பு அளிப்பது.
• எதையும் வெளிப்படுத்த உரிமை
• தகவல்கள் கோரிப் பெறும் உரிமை
• கருத்தில், எண்ணத்தில், மதநம்பிக்கைகளில் தேர்ந்தெடுக்க, பின்பற்ற சுதந்திரம்.

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வகையான உரிமைகளும் ஒன்றையொன்று சார்ந்தவை. அதனாலேயே பிரிக்க முடியாதவை. என்றாலும் அவற்றின் தன்மைகளின் அடிப்படையில் அவை பிரிக்கப்பட்டுள்ளன.

உடனடி உரிமைகள் (சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்) பாரபட்சமான நிலை, தண்டனைகள், கிரிமினல் வழக்குகளில் நியாயமான விசாரணை, இளம் குற்றவாளிகளுக்களுக்கான தனியான நீதி முறை, வாழும் உரிமை, குறிப்பிட்ட தேசத்தைச் சேர்ந்த அடையாள உரிமை, தனது குடும்பத்துடன் மீண்டும் சேர உரிமை போன்றவை அடங்கும். பெரும்பாலான பாதுகாப்பு உரிமைகள், உடனடி உரிமைகள் பட்டியலில் சேர்வதால் உடனடியான கவனக்குவிப்பையும் தலையீட்டையும் கோருபவையாக உள்ளன.

முன்னேற்றத்திற்கான உரிமைகள் (பொருளாதார, சமூக மற்றும் காலச்சார உரிமைகள்) : இவற்றில் ஆரோக்கியம், கல்வி போன்ற முதல் பிரிவில் சேர்க்கப்படாத உரிமைகள் இடம்பெற்று இருக்கின்றன. இவை, சிஆர்சி சட்டப் பிரிவு 4ல் குறிப்பிட்டப்பட்டுள்ளன.

‘பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளைப் பொறுத்தவரை அரசுத் துறைகள் அவர்களிடத்தில் உள்ள அதிகபட்சமான வள ஆதாரங்களைத் தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் சமயங்களில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடன் உபயோகப்படுத்தி மேற்படி உரிமைகளை கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’.

இந்தச் சிறு நூலில், குழந்தைகளுக்கு உள்ள பாதுகாப்பு உரிமைகள் பற்றிக் குறிப்பாக விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் ஆசிரியர்களும், பள்ளிகளும் எந்த வகையில் இணைந்து பணியாற்ற முடியும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளன.

குறிப்பு: குழந்தைகள் வயதாக ஆக-ஆக பல்வேறு நிலைகளிலும் முதிர்ச்சி அடைகின்றனர். இதன் அர்த்தம் அவர்களுக்கு 15 அல்லது 16 வயதை அடைந்தால் அவர்களுக்குப் பாதுகாப்புத் தேவையில்லை என்பதல்ல. உதாரணமாக நமது நாட்டில் 18 வயதிற்குப்பட்டவர்கள், திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்; பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட பருவத்தைக் கடந்து முதிர் நிலை அடைந்து விட்டார்கள் என்று சமூகம் கருதுவதால் அவர்களுக்குக் குறைவான பாதுகாப்பு அளிக்கப்பட்டால் போதும் என்று கூற முடியாது. அவர்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இவற்றுடன்,சிறந்த வாய்ப்புகளும் உதவிகளும் அளித்து அவர்களுக்குச் சிறந்த வாழ்க்கை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

(2) பாதுகாப்பிற்கான உரிமை            

(2:1) குழந்தைகளைப் பாதுகாப்பது என்றால், ஆசிரியர்களாக இருக்கும் நீங்கள், உங்கள் பள்ளியியில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளும் கீழ்க்காணும் அனைத்து வகையான பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.           

 தவறாகப் பயன்படுத்தல்
 கொடுமையாக நடத்தப்படுவது
 அலட்சியப்படுத்தப்படுவது

அனைத்துக் குழந்தைகளுக்கும் அவர்களது சமூகம், பொருளாதார நிலை அல்லது வசிக்கும் பகுதி ஆகியவற்றின் காரணமாகப் பாதுகாப்புத் தேவைப்படுபவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் சில குழந்தைகள் மற்றவர்களைவிடப் பல விதங்களில் பலவீனமாக இருப்பதால், அவர்களுக்கு சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது. இவ்வகைக் குழந்தைகள்:

 வீடில்லாச் சிறுவர்கள் (நடைபாதைகளில் வசிப்பவர்கள் இடம்பெயர்ந்தவர்கள்/தங்கள் இடத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள்/அகதிகள்... போன்றவர்கள்)
 புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகள்
 அனாதைகளாகிவிட்ட மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள்
 வேலை செய்யும் குழந்தைகள்
 பிச்சைக்காரக் குழந்தைகள்
 விலைமாதர்களின் குழந்தைகள்
 விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள்
 சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அல்லது சிறைகளில் இருக்கும் குழந்தைகள்.
 சிறைக் கைதிகளின் குழந்தைகள்
 பெரும் பிரச்சினைகளால் பாதிக்கபட்ட குழந்தைகள்
 இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள்
 எச்ஐவி/எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
 உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
 உடல் ஊனமுற்ற குழந்தைகள்
 ஷெட்யூல்ட் மற்றும் பழங்குடி இனங்களைச் சேர்ந்த குழந்தைகள்

(2:2) கற்பனைகளும் உண்மைகளும்: குழந்தைகள் பாதுகாப்பு             

குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுதல், கொடுமைக்கு உள்ளாதல் என்பன பற்றி பொதுமக்கள் மத்தியில் இருக்கும் சில கற்பனைகள்

கற்பனை- 1 குழந்தைகள் எக்காலத்திலும் கொடுமைக்கு உள்ளானதில்லை, தவறாகப் பயன்படுத்தப்பட்டதில்லை. சமூகம் தனது குழந்தைகளை மிகவும் நேசிக்கிறது.

உண்மை நிலை: நாம் நமது குழந்தைகளை நேசிக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், நிச்சயமாக ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில்தான் உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதேபோல மிக அதிகமான குழந்தைகள் செக்ஸ் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். 0-6 வயது பிரிவினரில் 'ஆணுக்குப் பெண்' விகிதாச்சாரம் மிகக் குறைவாக உள்ளது. உலகத்திலேயே மிகக் குறைவான அளவு இது. பெண் குழந்தைகள் உயிரோடு இருப்பது அரிதாகிக்கொண்டேவருகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. பிறந்து சில மாதங்களே ஆகியிருக்கும் கைக்குழந்தைகள்கூட, பணத்திற்காகத் தத்துக்கொடுக்கப்படுவது, அல்லது அநியாயமான முறைகளில் கொல்லப்படுவது நடக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, கவலை எற்படுத்துகிறது. அரசு வெளியிட்ட ஆவணங்களின்படியே, குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் 2002-2003 ஆண்டுக் காலத்தில், அதற்கு முந்தைய ஆண்டுக் காலத்தைவிட 11.1 சதவீகிதம் அதிகரித்துள்ளன. மேலும் பல குற்றங்கள் அரசுக்குத் தெரியவருவதே இல்லை.

கற்பனை: 2 வீடுதான் மிகப் பாதுகாப்பான இடம்

உண்மை நிலை: குழந்தைகள், தத்தமது வீடுகளில் அனுபவிக்கும் கொடுமைகள் இந்த நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளன. குழந்தைகள் பெற்றோர்களின் உரிமைப் பொருள்களாகவே கருதப்படுகிறார்கள். அவர்களைத் தங்களது விருப்பத்தின்படி உபயோகப்படுத்தலாம் (அதாவது கொடுமைப்படுத்தலாம்) என்ற நிலைதான் இருக்கிறது. தந்தைமார்கள், தங்களது சொந்த மகள்களையே தெரிந்தவர்கள் மற்றும் அயலாரிடத்தில் விற்றுவிடுவது ஏறக்குறைய தினமும் நடக்கிறது. செக்ஸ் கொடுமைகளைப் பொறுத்தவரை சகோதர உறவினர், பெற்றவர் போன்றவர்களால் பெண்கள் செக்ஸ் கொடுமைகளுக்கு உள்ளாவதுதான் அதிகமாக உள்ளது. தான் பெற்ற மகளைத் தந்தையே கற்பழிப்பது போன்ற சம்பவங்கள், அடிக்கடி ஊடகங்களின் மூலம் தெரிவது மட்டுமின்றி பல சம்பவங்கள் நீதிமன்றங்களில் நிரூபணம் ஆகியும் உள்ளன.

பெண் சிசுக்களைக் கொல்வது, மூடநம்பிக்கைகள் காரணமாகக் குழந்தைகளை நர பலி கொடுப்பது, பெண் குழந்தைகளை ஆண் அல்லது பெண் கடவுளர்களுக்கு 'ஜோகினி' அல்லது தேவதாசி என்ற பெயரில் சமர்ப்பணம் செய்துவிடுவது போன்றவை, இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. இவையெல்லாம் குடும்பத்தினரால் குழந்தைகள் மீது ஏவப்படும் வன்முறைகள்தாம்.

பால்ய விவாகங்களின் மூலம் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது அவர்கள் மீதுள்ள அக்கறையில் அல்ல. மாறாக, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தங்களது பொறுப்புகளிலிருந்து விடுபடத்தான். இதனால், குழந்தைகளின் உடல்நலன் மற்றும் மனநலன் ஆகியன பாதிக்கப்பட்டாலும், யாரும் அது பற்றிக் கவலைப்படுவதில்லை.

இவையெல்லாம் ஆங்காங்கே நிகழும் சம்பவங்கள்தாம் என்று எடுத்துக்கொண்டாலும் குழந்தைகளை முரட்டுத்தனமாக அடிப்பது என்பது ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் நடக்கிறது. ஏழைகள் மற்றும் பணக்காரக் குடும்பங்களில் குழந்தைகள் கவனிக்கப்படாமல், உதாசீனப்படுத்தப்படுவது சாதாரணமாக நடக்கிறது. இதனால், குழந்தைகளின் நடத்தையில் பல்வேறு வகையான பிரச்சினைகள், குறிப்பாக மனஅழுத்தம் போன்றவை, பரவலாக இருக்கின்றன.

கற்பனை-3 ஆண் குழந்தையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆண் குழந்தைக்குப் பாதுகாப்புத் தேவையில்லை.

உண்மை: பெண் குழந்தை எந்த அளவுக்கு உடல் மற்றும் உணர்வு ரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறதோ, அதே அளவில் ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன. பெண் குழந்தை, சமுதாயத்தில் குறைவான அந்தஸ்தைப் பெற்றிருப்பதால் அவர்கள்தாம் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். பையன்கள் பள்ளிகளில், வீடுகளில், உடல் ரீதியான தண்டனை பெறுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலபேர், சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது, விற்கப்படுவது போன்றவை நடக்கின்றன. இவர்களில் பலர் செக்ஸ் அத்துமீறல்களுக்கு உள்ளாகிறார்கள்.

கற்பனை-4 இது போன்ற விஷயங்கள் எங்களது பள்ளியில்/ கிராமத்தில் நடக்கவில்லை அல்லது நடக்காது.

உண்மை: நம்மில் பெரும்பாலோர், குழந்தைகள் கொடுமைக்குள்ளாக்கப்படுவது. வேறு எங்காவதுதான் நடக்குமே தவிர, நமது வீடுகளில் நமது பள்ளியில் நமது கிராமத்தில் அல்லது சமூகத்தில் நடக்காது என்று நம்புகிறோம். இது போன்ற கொடுமைகள், ஏழைகள், உழைக்கும் வர்க்கத்தினர், வேலையின்றிக் கஷ்டப்படும் குடும்பங்கள் அல்லது படிப்பறிவற்ற குடும்பங்கள் ஆகிய இடங்களில் தான் நடக்கும், மத்திய தரக் குடும்பத்தில் இவ்வாறு நடப்பதில்லை. நகரங்களில்தான் இவை நடக்கும், கிராமப் பகுதிகளில் நடப்பதில்லை என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மை நிலை நேர்மாறானது. மேற்கண்ட அனைத்து இடங்களிலும் சூழ்நிலைகளிலும் குழந்தைகள் துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு நமது உதவியும் துணையும் தேவைப்படுகின்றன.

கற்பனை: 5 துன்புறுத்துகிறவர்கள் அனைவரும், மனநோயாளிகள் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

உண்மை நிலை: குழந்தைகளைக் கொடுமைப்படுத்துபவர்கள் மனநோயாளிகள் அல்ல. இவர்கள் இயல்பான தன்மைகளுடன் வித்தியாசமாஅன சில சுபாவங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளை செக்ஸ் ரீதியாகத் துன்புறுத்துபவர்கள் பிடிபட்டால் தங்களது செயலை நியாயப்படுத்த இதுபோன்ற காரணங்களைச் சொல்லித் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். குழந்தைகளைக் கடத்துபவர்கள் பெரும்பாலும், சம்பந்தப்பட்ட குழந்தையின் உறவினராகவோ அல்லது அறிமுகமானவராகவோதான் இருப்பார். தங்கள்மீது அந்தக் குடும்பம் வைத்திருக்கும் நம்பிக்கையை, அவர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி, அவர்களுடைய குழந்தையைக் கடத்தி விற்றுவிடுகிறார்கள்.

2:3 குழந்தைகளைப் பாதுகாப்பதில் உள்ள பிரச்சினைகள் - ஒவ்வொரு ஆசிரியரும் தெரிந்துகொள்ள வேண்டியவை      

குழந்தைகள் துன்புறுத்தப்படுவது, சமூக-பொருளாதார-மத-கலாச்சார-இன-மற்றும் மரபு சார்ந்த குழுக்கள் ஆகிய அனைத்து மட்டங்களிலும் நடக்கிறது. ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், அரசும் சிவில் உரிமைக்குப் பாடுபடும் தனியார் குழுக்களும் தலையிட்டுத் தெரிந்துகொண்டவை, சரிசெய்தவை போன்ற விவரங்களின் அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பில் உள்ள பிரச்சினைகள் மற்றும் சிறப்புப் பாதுகாப்புத் தேவைப்படும் குழந்தைகள் ஆகிய விவரங்கள் கீழே தரப்படுகின்றன,

 ஆண் - பெண் என்னும் அடிப்படையில் பாரபட்சம்
 சாதியின் அடிப்படையில் பாரபட்சம்
 உடல் ஊனமுற்றோர்
 பெண் கருக்கொலை
 பெண் சிசுக்கொலை
 வீடுகளில் நிகழும் வன்முறை
 குழந்தைகள் செக்ஸ் ரீதியாகத் துன்புறுத்தப்படுதல்
 குழந்தைத் திருமணம்
 குழந்தைத் தொழிலாளர்
 குழந்தைகளை வைத்து விபச்சாரம்
 குழந்தைகளைக் கடத்தி விற்பது
 குழந்தைகளை நரபலி கொடுப்பது
 பள்ளிகளில் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தல்  தேர்வுகளால் ஏற்படும் மனநெருக்கடி, மாணவர்கள் தற்கொலை
 இயற்கைச் சீற்றத்தால் நிகழும் பேரிடர்கள்
 போர்களும், ஆயுதம் ஏந்திய போராட்டங்களும்
 எச்ஐவி/எய்ட்ஸ்

2:4:ஆண்-பெண் பாரபட்சம்: கற்பனையும் உண்மை நிலையும்                      

கற்பனைகள், கற்பனைகள், மேலும் கற்பனைகள் - உண்மை நிலை உங்களுக்குத் தெரியவந்தால், உங்களால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

1கற்பனை: எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு ஆண் குழந்தைதான் அதை எப்படியும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். அப்படி இருக்கும்போது அதற்குமுன் எதற்காக 4-5 பெண் குழந்தைகள்?

பெண் குழந்தையை வளர்ப்பது என்பது, பக்கத்து வீட்டுக்காரரின் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பதைப் போல. அவர்களை வளர்க்கிறோம். பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்கிறோம். அவர்களுடையத் திருமணத்திற்குத் தர வேண்டிய வரதட்சணைக்கு என்று பலவிதத் திட்டங்களைப் போடுகிறோம் கடைசியில் அவர்களும் குடும்பத்தை விட்டு வெளியே போகிறார்கள். ஆண் பிள்ளைகள் அப்படி அல்ல அவர்களால் பரம்பரை வளர்கிறது. தங்களது பெற்றோரைப் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் இறந்தபின் இறுதிக் கடன்களைச் செய்கிறார்கள். பெண் குழந்தைகளைப் படிக்க வைத்தால் எந்தப் பலனும் இல்லை. அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதையெல்லாம் செய்ய அனுமதித்துவிட்டு, அவர்கள் திருமணம் செய்துகொண்டு போகும்வரை, கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இதனால் குடும்பத்தின் பாரம்தான் கூடுகிறது.

உண்மை நிலை: இம்மாதிரியான வாதங்கள் நம்பிக்கைகள் ஆகியவை ஆணாதிக்கம் கொண்ட சமூகத்திலிருந்து எழுபவை. இவற்றைச் எதிர்கொண்டு பதில் கூறியே ஆக வேண்டும். பொதுவாக எந்தக் குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் அவர்களுடைய பெண்ணுக்குத் திருமணத்தின்போது எவ்வளவு செலவழிக்கிறார்களோ, அதே அளவுக்கு பையனின் கல்யாணத்திற்கும் செலவழிக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் உண்மை. புத்திசாலித்தனமாகச் செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு நாம் செய்யும் இன்னொரு விஷயம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுப்பது. இதன் மூலம் நாம் அந்தப் பெண்ணுக்கு மறைமுகமாக உணர்த்துவது என்னவெனில் "உனக்கு சேர வேண்டியதைக் கொடுத்தாகிவிட்டது. இனி சொத்தில் பங்கு கேட்காதே" என்பதுதான்.

ஆனால் எப்போதும் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது நல்லது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அதேபோல பெற்றோர்களின் சொத்தில், பெண்களுக்குப் பங்கில்லை என்று தட்டிக் கழிப்பதும் சட்டத்தை மீறுவதாகும். எது எப்படி இருந்தாலும் வாழ்க்கையின் உண்மைகளை ஏற்றுக்கொள்ள நாம் பழக வேண்டும். வயதானவர்கள் வாழும் விடுதிகளில் ஏதாவது ஒன்றிற்குச் சென்று பார்த்தாலே போதும், நமது மகன்கள், எப்படித் தங்களது பெற்றோர்களைக் கவனித்துக்கொள்கிறார்கள் என்பது தெரியவரும். இன்னும் சொல்லப் போனால், இவ்வாறு மகன்களால் தவிக்கவிடப்பட்ட வயதான பெற்றோர்களை, அவர்களுடைய பெண்கள் பொறுப்புடன் பார்த்துக்கொள்வதற்குப் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

உயிர் வாழ்வதற்கு, முன்னேற்றம் காண்பதற்கு, சமூகத்தில் ஒன்றிணைந்து இருப்பதற்கு, பாதுகாக்கப்படுவதற்குப் பையன்களுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்குப் பெண்களுக்கும் இருக்கிறது. இம்மாதிரியான உரிமைகள் எதையாவது பெண்களுக்குத் தர மறுப்பது, ஆண்-பெண் பாரபட்ச நிலைமை நீட்டிப்பதற்கும் வறுமை நிலை உண்டாவதற்கும் வழிவகுக்கும்.

பல நூற்றாண்டுகளாக பெண்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பாலினப் பாரபட்சத்தை அனுபவித்துவருகிறார்கள். இதில் கல்வி ஒரு அம்சம். தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறியிருப்பதை நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம். "ஒரு ஆணுக்குக் கல்வியளித்தால் நீங்கள் ஒரு நபருக்கு கல்வி அறிவு புகட்டுகிறீர்கள் ஆனால் ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு அளிப்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கே கல்வி அளிப்பதற்குச் சமம்."

தங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதைப் புரிந்துகொண்டு பகுத்து ஆராய்ந்து முடிவெடுக்கக்கூடிய விதத்தில் பெண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இப்படிச் செய்தால், 'அதிக சுதந்திரம் ஆபத்து' என்ற பயத்திற்குத் தானாகவே தீர்வு கிடைக்கும். பெண் குழந்தையும், மற்ற மனிதர்களைப் போல மனித உரிமைகள் உள்ளவள்தான் என்ற உறுதிப்பாடு இருந்தால் மட்டுமே இது நடக்கும். பெண்களின் பாதுகாப்பு என்பது தேசத்தின் கவலை என்றால் பெண்கள் அதிகாரத்தில் பங்குபெறும் சூழலை உருவாக்காவிட்டால், அவர்களுடைய நிலை மேலும் பலவீனமாகத்தான் இருக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது.

2005ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களில் 3 மில்லியன் குழந்தைகள் தங்களுடைய 15 வயது கடக்கும்வரை உயிருடன் இருப்பதில்லை. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் அவர்கள் பிறந்து ஒரு வருடத்திற்குள் நிகழ்கிறது. இத்தகைய மரணங்களில் ஆறில் ஒரு மரணம், பாலினப் பாரபட்சத்தின் விளைவாக நிகழ்கிறது. 2001ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 933 பெண்கள் இருக்கிறார்கள். 1991லிருந்து குழந்தைகள் விஷயத்தில் இந்த வித்தியாசம் மேலும் அதிகம். 1991இல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 945 பெண் குழந்தைகள் என்று இருந்தது. 2001இல் இது 927 பெண்களாகக் குறைந்தது. இந்தச் சூழ்நிலை அபாயகரமான நிலையை எட்டியிருக்கும் மாநிலங்கள், பஞ்சாப் (798) ஹரியானா (819) இமாச்சலப் பிரதேசம் (896) தில்லியில், ஒவ்வொரு 1000 பையன்களுக்கும் 900-த்திற்கும் குறைவான பெண்கள்தாம் இருக்கிறார்கள். இந்த மாநிலங்களிலுள்ள பையன்கள், திருமணத்திற்கு, பிற மாநிலங்களில் இருந்து பெண்களைத் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

2:5 கற்பனையும் & உண்மை நிலையும்: பால்ய விவாகம்             

கற்பனை: பால்ய விவாகம் என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. திருமணம் ஆகாத பெண்கள் கற்பழிப்பு, செக்ஸ் ரீதியிலான துன்புறுத்தல்கள் ஆகியவற்றிற்கு ஆளாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, சீக்கிரமாகத் திருமணம் முடித்துவிடுவது நல்லது. பெண்ணுக்கு வயதாக ஆக அவளுக்குக் கொடுக்க வேண்டிய வரதட்சணை அதிகரிக்கிறது. அதே போல நல்ல மணமகன் கிடைப்பதும் கஷ்டமாக இருக்கிறது.

உண்மை நிலை: எந்த விதமான தவறான நடைமுறைகளையும் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளையும் கலாச்சாரத்தின் பெயரால் நியாயப்படுத்தக் கூடாது. பால்ய விவாகம் என்பது நமது கலாச்சாரம் என்றால், அடிமைத்தனமாக நடத்துவது சாதிமுறைகள், வரதட்சணை மற்றும் சதி என்கிற உடன்கட்டை ஏறுவதும் நமது கலாச்சாரத்தின் பகுதிகளாகவே இருந்துவந்தன. தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற பழக்கங்களைத் தடை செய்யும் சட்டங்கள் இப்போது இருக்கின்றன. இந்தச் சட்டங்கள் அனைத்தும் சமூகத்தில் அவை தேவை என்று கருதப்பட்டபோது உருவாக்கப்பட்டவைதான். கலாச்சாரம் என்பது தேங்கி நிற்கும் குட்டை போன்றது அல்ல.

எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் பல்வேறு கலாச்சார பின்னணியைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். ஆகவே, இந்தியாவின் கலாச்சாரம் என்பது, பல்வேறு விதமான கலாச்சாரத்தின் கலவைதான். அதனாலேயே பன்னெடுங்காலமாக இக்கலாச்சாரத்தில் மிகப்பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

குழந்தைகள் காப்பாற்றப்பட, பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று நாம் அனைவரும் நினைத்தால், நமது கலாச்சாரம் இந்த உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும். உண்மையாகச் சொல்லப்போனால், சமூகம் குழந்தைகளை விரும்புதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அப்படிப்பட்ட சமூகமாகவே நம் சமூகம் கலாச்சார ரீதியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

பால்ய விவாகம் என்பது பல உரிமை மீறல்களின் தொடக்கம். பால்ய விவாகம் என்பது சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி. இதனால், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அவர்களது வயதையும் திறனையும் மீறிய குடும்பப் பொறுப்புகள் சுமத்தப்படுகின்றன. இதில் பெண் குழந்தைகளின் நிலைதான் மிகவும் மோசம். சந்தேகம் இல்லை.

சிறு வயதில் திருமணம் செய்துகொண்ட பெண்களில் பலர் நிறைய குழந்தைகளுடன், விதவைகளாகவே காலம் கழிக்க வேண்டியிருக்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?

 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 15வயதுக்கு உட்பட்ட சுமார் 3 லட்சம் சிறுமிகள் குறைந்தபட்சம் ஒரு குழந்தையையாவது பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
 20-24 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரசவ காலத்தில் இறப்பதைவிட, ஐந்து மடங்கு அதிகமாக 10-14 வயதிற்கு உட்பட்டவர்கள், பிரசவ காலங்களில் இறந்துபோகிறார்கள்
 மிகச் சிறிய வயதில் கர்ப்பம் அடைவதும், அதிகமான கருச்சிதைவுகளுக்குக் காரணம்.
 விடலைப் பருவத்துத் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கிறார்கள்.
 குறைந்த வயதுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஒரு வயது கடப்பதற்குள் இறந்துபோவது அதிகமாக உள்ளது.

ஆதாரம்: இளம் பெண்களின் நிலை (www.un.org/esa/socdev/unyin/documents/ch09.pd)

2:6 குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்தல்       

உள்நாட்டிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் உள்ள வயதான ஆண்களுக்குத் திருமணம் என்ற பெயரால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இவர்கள் விபச்சாரம் உள்படப் பல விதங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

திருமணம் என்பது, இளம்பெண்களைக் கடுமையான பணிகளைச் செய்யவைப்பதற்கும் விபச்சாரத்தில் தள்ளுவதற்கும் ஒரு வழிமுறையாகப் பயன்படுகிறது.

சிறு வயதுத் திருமணங்கள் என்பது பெண்களைக் காப்பதற்கும், கொடுமைப்படுத்தப்படுவதில் இருந்து தடுப்பதற்கும் உதவுகிறது என்பது தவறு. உண்மை என்னவென்றால், அந்தச் சிறுமியின் மேல் அனைத்து விதமான வன்முறை நிகழ்த்தப்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. அதுவும் அவளுடைய குடும்பத்தினர், மற்றும் தெரிந்தவர்கள் அனைவரும் தொடர்ந்து கூறுவது என்னவெனில் புகுந்த வீட்டாரை நம்பு, கீழ்ப்படிந்து நட என்பதுதான். பால்யத் திருமணத்தின் மற்றொரு விளைவு குழந்தைக் கற்பழிப்பு. ஏனெனில், குழந்தைகளுக்குத் தங்களது செயல் அல்லது செயலின்மை ஆகிய இரண்டிற்கும் காரணம் தெரிந்துகொள்ளும் முதிர்ச்சி கிடையாது.

திருமணம் ஆனவரானாலும், ஆகாதவராக இருந்தாலும், எந்தப் பெண்ணுக்கும், வெளியாட்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பது நிச்சயம் இல்லை. திருமணம் ஆனவர்கள், தனியாக இருப்பவர்கள், இளம்வயதினர், வயதானவர்கள், முகத்திரை அணிந்தவர்கள், முகத்திரை அணியாதவர்கள் என்று எந்த வகைப் பெண்களாக இருந்தாலும் அவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படாமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலை இதை நிரூபிக்கிறது.

நமது கிராமங்களில், முகத்திரை அணிந்தவர்கள் மற்றும் திருமணம் ஆன படிப்பறிவற்ற பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இம்மாதிரி நடப்பதற்குக் காரணம் அவர்கள் கல்வி அறிவு அற்றவர்கள் என்பதால் அல்ல. அவர்கள் குறிப்பிட்ட சாதி, இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதாலோ, குழுக்களிடையே ஏற்படும் தகராறுகளுக்குப் பழி தீர்க்கும் விதமாகவோ இவை நிகழ்கின்றன.

கடைசியாக, பால்ய விவாகம், வரதட்சணைக் கொடுமைக்கு முடிவு கட்டும் என்று நினைப்பது தவறானது. பாரம்பரியமாக ஆணாதிக்கம் கொண்ட நமது சமூகத்தில் உள்ள மணமகனின் குடும்பத்தினர் எப்போதுமே மணமகளின் குடும்பத்தினரைக் காட்டிலும் மேலான நிலையிலேயே இருக்கிறார்கள். ஆகவே, பெண்ணின் குடும்பத்தினர் பையனின் குடும்பத்தினரின் கோரிக்கை என்னவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திருமணத்தின்போது, வரதட்சணை என்று எதுவும் பெறப்படாவிட்டால், அதன் பிறகு பல்வேறு விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

2:7 கற்பனைகளும் உண்மைகளும்: குழந்தைத் தொழிலாளர்            

கற்பனை: குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு ஏதும் இல்லை. வறுமையில் இருக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்குப் பதிலாக, வேலை செய்ய அனுப்பி அதன் மூலம் வருமானம் ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்க்கும் நிலையில் உள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு வேலை செய்வதைத் தவிர வேறு வழி கிடையாது. அப்படி இல்லையென்றால், அவர்களுடைய குடும்பங்கள் பட்டினி கிடக்கும். மேலும், சிறு வயதில் ஏதாவது தொழில் கற்றுக்கொண்டால் அவர்கள் எதிர்காலத்திற்கே நல்லது.

உண்மை நிலை: இப்படிப்பட்ட வாதங்களைக் கேட்கும்போது ஒரே ஒரு விஷயத்தை நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது. ஒரே மாதிரியான வறுமை நிலையில் இருக்கும் பலரில், ஒரு சிலர் மட்டும் என்ன வந்தாலும் என் மகனைப் படிக்கவைப்பேன் என்ற உறுதிப்பாட்டோடு எப்படி படிக்க வைக்க முடிகிறது? உண்மை என்னவென்றால் வறுமை என்பது ஒரு சாக்குதான். இப்படிப்பட்டவர்கள், தொடர்ந்து வேலைக்கு அனுப்புவதற்குக் குழந்தைகள் வேண்டும் என்று நினைப்பவர்கள். சமூகக் காரணங்களும் குழந்தைத் தொழிலாளர் முறை தொடரக் காரணிகளாக இருக்கின்றன. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், சமூகப் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சமூகத்தின் வள ஆதாரங்களில் பெரும்பாலனவை இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்களது குடும்பத்தில் குழந்தைகள் உட்பட அனைவரும் வேலை செய்தாலும் பட்டினி என்பது தீராது. ஏனென்றால் பட்டினிக்குக் காரணம் நியாயமற்ற சமூக, பொருளாதார நிலவரம்தான்.

அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வியாவது இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கல்வியறிவற்ற பெற்றோர்களுக்குப் பள்ளிகளில் சேர்க்கும் முறைகள் பெரும் சிக்கலாகத் தோன்றுகின்றன. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள், குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்குப் பெரும் தடைகளாக இருக்கின்றன. குழந்தைகளுக்குப் பாடத்திட்டம் புரிந்துகொள்ளக் கடினமானவையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இவ்வாறு படிக்க வரும் குழந்தைகள், அவர்கள் தலைமுறையிலேயே கல்வி பயிலும் முதல் தலைமுறையினராக இருந்தால், அவர்கள் பெற்றோர்களால் வீட்டில் தேவைப்படும் உதவிகளை செய்ய முடிவதில்லை.

உடல் ரீதியிலான தண்டனை, ஜாதியின் அடிப்படையில் பாரபட்சம், அடிப்படைத் தேவைகளான கழிப்பிட வசதி, குடிநீர் போன்றவைகூட பள்ளிகளில் இல்லாதது குழந்தைகள் பள்ளிகளை விட்டு விலகி நிற்பதற்கு முக்கியமான பிற காரணங்கள்.

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களது உடன் பிறந்தவர்களைக் கவனித்துக்கொள்வதே அவர்களது முக்கியமான பணியாக இருக்கிறது. குழந்தைகள் காப்பகம் போன்ற வசதிகள் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இந்த இரண்டு இடங்களிலும் ஆண்-பெண் அடிப்படையில் வேறுபாடுகள் பார்ப்பது வேரூன்றிப்போயிருக்கிறது.

பள்ளிகளுக்கும் போகாமல், வேலை மட்டும் செய்து கொண்டிருக்கும் குழந்தைகள், தங்களது வாழ்நாள் முழுவதும், எந்தத் திறனையும் கற்றுக்கொள்ளாமலும் படிப்பறிவற்றும் இருக்கின்றனர். இது எதனால் என்றால் குழந்தைகள் எப்போதுமே தற்காலிக ஊழியர்களாகத்தான் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி உடலுக்குத் தீங்கை விளைவிக்கும் வேதியியல் மற்றும் பிற பொருள்களுடன் அவர்கள் புழங்குகிறார்கள். நீண்ட நேர வேலை, வேலை செய்யும்போது உட்காரும் அல்லது நிற்கும் விதம் போன்றவையும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன. உடல் வளர்ச்சியை மட்டுப்படுத்துகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு21-ஏ) கூறியுள்ள படி, 5-14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரம்பக் கல்வியை உறுதிசெய்ய வேண்டும் என்கிறது. குழந்தைப் பணியாளர் முறை இந்தச் சட்டத்திற்கு விரோதமானதாக இருக்கிறது.

இதில் குறிப்பிட்ட வேண்டிய விஷயம் என்னவெனில் ஒரு குழந்தைத் தொழிலாளி பணியிலிருந்து விலகினால், அந்த இடத்தில் ஒரு பெரிய ஆளுக்கு வேலை கிடைக்கும். இந்தியாவில் வேலைவாய்ப்பில்லாத மக்கள் தொகை, அதுவும் வாலிபப் பருவத்தினர். அதிகமாக உள்ளனர். அவர்கள் இந்தக் குழந்தைகளின் இடத்தை இட்டு நிரப்ப முடியும். இந்தக் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க முடியும்.

உலகத்திலேயே இந்தியாவில்தான் மிக அதிக எண்ணிக்கையில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 2001இல் எடுத்த புள்ளிவிவரக் கணக்கின்படி, 5-14வயது வரையிலான, 1.25 கோடிக் குழந்தைகள் பல்வேறு பணிகளில் தொழிலாளிகளாகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும்கூட அரசு சாராத் தொண்டு அமைப்பினர் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகவே இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளனர். ஏனெனில், முறைப்படுத்தப்படாத தொழில்துறையிலும், வீடுகள் அளவுக்கு இயங்கும் சிறு தொழில்களும், அதில் வேலை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கையும், கணக்கெடுக்கப்படுவதே கிடையாது.

ஒவ்வொரு நாளும் குழந்தைகள், கூலித் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காகப் பண்டங்களைப் போல வாங்கி விற்கப்படுகிறார்கள். மோசடிப் பேர்வழிகளும், இடைத்தரகர்களும், கிராமங்களுக்குச் சென்று மிக நல்ல விதமாகப் பேசி அங்கிருக்கும் குழந்தைகளை நாட்டில் பல பகுதிகளுக்கு வேலை செய்ய அனுப்பிவைத்துவிடுகின்றனர். பீகார், வங்காளம் போன்ற இடங்களிலிருந்து குழந்தைகள், கர்நாடகா, டெல்லி அல்லது மும்பையில் இருக்கும் கைப்பின்னல் தொழிலகங்களுக்கும் பணியில் அமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே இனிப்புகள் தயாரிக்கும் தொழிலில் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இதேபோல சூரத் நகரில் உள்ள விலையுயர்ந்த கற்கள் மற்றும் வைரங்கள் ஆகியவற்றைப் பட்டை தீட்டும் பணியில் அமர்ந்தப்படுகின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள், மத்திய தர மக்களின் வீடுகளில், வீட்டு வேலைகள் செய்ய அமர்த்தப்படுகின்றனர்.

(2.8)  குழந்தைகள் செக்ஸ் கொடுமைகளுக்கு உள்ளாக்குதல்          

கற்பனை: நமது நாட்டில் குழந்தைகளை செக்ஸ் கொடுமைகளுக்கு உள்ளாக்குவது அரிதாகவே நடக்கிறது. இது சம்பந்தமான விஷயங்கள் ஊடகங்களில் வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்படுகின்றன. இதனால் நன்மையை விட தீமையே விளைகிறது. குழந்தைகள் அல்லது விடலைப் பருவத்தினர் வெறும் கற்பனை உலகில் வாழ ஆரம்பித்துவிட்டார்கள். தாங்கள் செக்ஸ் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கதைகட்டுகிறார்கள். பொய் கூறுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் இவ்வாறு நிகழ்வது, கெட்ட நடத்தையுடைய பெண்களுக்குத்தானே தவிர, வேறு யாருக்கும் இல்லை.

உண்மை நிலை: பிறந்து மிகச் சில மாதங்கள், ஏன், ஓரிரு நாட்கள் மட்டுமே ஆன குழந்தைகள்கூடப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது தெரியவந்திருக்கின்றது. பெண்கள் இம்மாதிரியான கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் என்று பொதுவாக நம்பப்பட்டாலும் பையன்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே!

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள், அவர்கள் இருக்கும் பலவீனமான நிலையால், இவ்வகையான கொடுமைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது என்பது, பாலினம், சமூகநிலை, இனம் ஆகிய அனைத்து நிலைகளிலும் இருந்துவருகிறது. நகரங்கள், கிராமப் பகுதிகள் என்ற எல்லா இடங்களிலும் நடக்கிறது.

ஒரு குழந்தையும், பின்வரும் முறைகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகக்கூடும்.

 பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் ஆணுறுப்பை நுழைத்துக் கட்டாய உடலுறவு கொள்வது, அதாவது கற்பழித்தல். அல்லது உடலின் பிற பகுதிகளைப் பயன்படுத்துதல்.
 உடலுறவுக் காட்சிகளைக் குழந்தைகளுக்கும் காண்பிப்பது அவர்களை அதுபோன்ற திரைப்படங்களை உருவாக்கப் பயன்படுத்துவது.
 நேரடியான மற்றும் மறைமுக வழிகளில் குழந்தையின் உடலின் பகுதிகளை, தனது காம இச்சையைத் தீர்த்துக்கொள்ளத் தொடுவது.
 காம இச்சையுடன் தன் அந்தரங்கப் பகுதிகளை வேண்டுமென்றே குழந்தைகளுக்குக் காட்டுவது.
 உடலுறவுக் காட்சிகளைக் குழந்தைகள் பார்க்கும்படியான சூழ்நிலையை ஏற்படுத்துவது; அல்லது இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை அவ்வாறான காரியங்களில் ஈடுபடும்படி செய்வது.
 பேசும்போது வேண்டுமென்றே பாலுணர்வைத் தூண்டக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது அல்லது குழந்தைகளைத் திட்டும்போது மட்டமான வார்த்தைகளக் கூறி திட்டுவது; அல்லது சைகைகள் மூலம் அவமானப்படுத்துவது.

கோயம்புத்தூர்: மதுக்கரை என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயதுப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார், தலைமை ஆசிரியரைக் கைது செய்து அவர் மேல் பாலியல் வன்கொடுமைக்குக் குழந்தைகளை ஆளாக்க முயற்சி செய்த குற்றத்தையும் சேர்த்துப் பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர், குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டு, அவற்றை வெளியே சொன்னால், மாணவிகள் மோசமான விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று மிரட்டினாராம்.

ஆதாரம் - பிடிஐ, 2005, மார்ச் 25

இவ்வகையான குற்றங்களைச் செய்பவர், குழந்தைகளிடத்தில் மிகுந்த அன்புடன், அக்கறையுடன் இருப்பது போலப் பேசி, அவர்களைத் தன் வயப்படுத்துவதுதான், இந்த விஷயத்தில் மிகப் பெரிய பிரச்சினையாகும். இவ்வகையான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மீண்ட குழந்தைகள், பின்னாளில் குற்ற உணர்வு, தன்னையே நொந்துகொள்ளுதல், நம்பாது இருத்தல் யார்மேலும் நம்பிக்கை வைக்காதிருத்தல் போன்றவற்றால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

எந்த ஒரு ஆண்/பெண் குழந்தையும் தனக்கு மிகவும் தெரிந்தவர் அல்லது அயலார் ஆகியவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக முடியும்.

இம்மாதிரியான 90% குற்றங்களில், குற்றவாளி குழந்தைகளுக்குத் தெரிந்தவராகவும் நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருக்கிறார். இவ்வகையான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர். குழந்தை அவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் பயன்படுத்துகிறார். மிகப்பல சமயங்களில், இவ்வாறான வன் கொடுமையாளர் குழந்தையின் அப்பா, அண்ணன், ஒன்றுவிட்ட சகோதரர்கள், மாமன்மார்கள் அல்லது நன்றாகப் பழகும் பக்கத்து வீட்டுக்காரர் போன்றவர்களாக இருக்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமைகள், சமூகம் தோன்றியதிலிருந்தே இருந்து வருபவைதான். பெண் குழந்தைகளை விபச்சாரத்திற்கோ அல்லது 'தேவதாசி' 'ஜோகின்' போன்ற மதரீதியிலான முறைகளில் ஈடுபடுத்துவது போன்றவை இதற்குச் சிறந்த உதாரணங்கள். அதே சமயத்தில், சமீப காலங்களில் இம்மாதிரியான நிகழ்வுகள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன. பலர் நினைப்பதுபோல, இது பத்திரிகைகாரர்களால் பெரிதுபடுத்தப்படவில்லை. வயது அதிகமான பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்தது என்னவெனில், அவர்களில் 75% பேர் தங்களது குழந்தைப் பருவத்தில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதுதான். இவர்களில் பெரும்பாலோர், குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிக்கைகள்தாம் இவ்வாறான செய்திகளை முதன்மைப்படுத்தி வெளியிடுகின்றன என்று கூறுவதெல்லாம், சங்கடப்படுத்தக்கூடிய உண்மைகளை ஒப்புக்கொள்ளாமல் மறுப்பதற்குதான் பயன்படும்.

குழந்தைகளைப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கும் ஆண்கள், தங்களது மனைவி அல்லது சம வயதுள்ளவருடன் உறவு வைத்துக்கொண்டு, கூடுதலாக, குழந்தைகளுடனும் வன் புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொதுவாக அனைவரும் நினைக்கிறாற்போல மனநோயாளிகள் அல்ல. இவர்கள் இயல்பான தன்மையுயும் வித்தியாசமான சில அம்சங்களையும் கொண்டவர்கள். குழந்தைகளைப் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கும் ஆண்கள், தங்களது செய்கைகளைப் பல வழிகளில் நியாயப்படுத்துகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் மனநிலை சரியில்லை என்பது. பிடிபட்ட ஆண்களில் யாருமே தாங்கள் இவ்வாறான காரியங்களில் ஈடுபடும்போது, பிறர் பார்க்கும்படி வைத்துக்கொள்வதில்லை.

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும்போதோ, அல்லது உடலுறவுக் காட்சிகளைப் பார்க்க வைக்கப்படுவதால் ஏற்படும் சங்கடத்தையோ வெளியே கூறுவதற்குப் பயப்படுகின்றனர். பாதிக்கப்படுபவர் வயது எதுவாக இருந்தாலும் சரி, வன்கொடுமையாளர் அவர்களை விட அதிக பலமுள்ளவராகவே இருக்கிறார். வன்கொடுமையாளர் மிகுந்தத் தந்திரத்துடன் இதில் ஈடுபடுவதால் பாதிக்கப்படும் ஆணோ பெண்ணோ நடப்பதைத் தடுக்கச் சக்தியற்றுப் போகின்றனர். நடந்தவற்றை மற்றவர்களிடத்தில் சொல்லக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதுவும் வன்கொடுமையாளர், அவர்களுடைய குடும்ப அங்கத்தினராகவே இருக்கும்போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நடப்பதை அறிந்து வைத்திருக்கும் குழந்தைகளின் தாய்மார்கள், இவற்றைத் தடுப்பதற்கு வலுவின்றித் தவிக்கின்றனர். குடும்பம் உடைந்துவிடுமோ என்ற பயமும் சொன்னாலும் தன்னை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற நிலைமையும் அவர்களை வாயடைக்கச் செய்துவிடுகின்றன. இதன் விளைவாக, பெற்றோர்கள், குடும்பத்திலுள்ள பெரியவர்கள் சொல்லப்போனால், சமூகம் முழுமையுமே, தங்களது உறுத்தல்கள், சங்கடங்களைப் புறந்தள்ளி விட்டு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அல்லது அந்தக் கொடுமையே நடக்கவில்லை என்று மறுக்கிறார்கள்.

தாங்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் பற்றிக் குழந்தைகள் கூறுவதில் பெரும்பாலானவை உண்மைதான் என்று கண்டறியப்பட்டுள்ளன. வெறுமனே கற்பனை செய்துகொள்கிறார்கள் என்று கூறுவது, முறையற்ற உறவுகள்/குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல்/குழந்தைகளைக் கடத்தி விற்பது/அல்லது வேறு மாதிரியான வன்கொடுமைகள் ஆகியவற்றை மறுப்பது போன்றவற்றால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மீது பழி போடுவதற்குத்தான் பயன்படுமே தவிர பிரச்சிகைளைத் தீர்க்க உதவாது.

குழந்தைகள் அப்பாவிகள். பலவீனமான நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்குப் பாலியல் உறவு பற்றியோ பெரியவர்களின் பாலியல் தன்மைகளைப் பற்றியோ எதுவும் தெரியாது. எனவே பெரியவர்களின் தவறான நடத்தைக்குக் குழந்தைகளை எந்த வகையிலும் பொறுப்பாக்க முடியாது. குழந்தைகள் பாலியல் உறவுகளைப் பற்றி ஒருவேளை அறிந்திருந்தாலும் அவர்கள் மேல் பழிபோடுவதையும் எதிர்மறையாக முத்திரை குத்தப்படுவதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

விலை மாதரைக்கூட வன்புணர்ச்சி செய்யவோ, இழிவுபடுத்தவோ செய்தால் சட்டம் அவரது துணைக்கு வரும். ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மேல் பழிபோடுவது, குற்றம் இழைத்தவரை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீது பொறுப்பைச் சுமத்துவதாகும்.

ஒரு குழந்தை 'சம்மதத்துடன்' உறவில் ஈடுபட்டது என்று யாரும் சொல்ல முடியாது. சட்டத்தின்படி 16 வயதுக்குக் கீழுள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்வது கற்பழிப்புக்குச் சமம்.

குழந்தைகள், தங்களது பாதிப்புகளை வெளியில் கூறினால், அவர்களது நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. பிறர் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மறுபடியும் சிதறடிக்கப்படுகிறது. நடத்ததைப் பற்றி குழந்தையிடம் இருக்கும் குற்ற உணர்வைப் பிறர் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தவறு நடந்ததற்கு குழந்தை நடந்து கொண்ட முறையில் ஏதேனும் தவறு இருக்கலாம் என்று அந்தக் குழந்தையை நம்ப வைக்க முடியும்.

ஆதாரம்: குழந்தைகள் உரிமைகள் குறித்து 2005இல் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான துணைக்குழு என்னும் அரசு சாராத் தொண்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.

பாலியல் வன்கொடுமைகள் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள்:

பாலியல் வன்கொடுமையின் தாக்கம் குறைவான காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ இருக்கலாம்.

(1) உடல் மீது ஏற்படும் காயங்களான கீறல்கள், கடித்ததால் காயங்கள், போன்றவைகளும், அந்தரங்கப் பகுதியில் ரத்தப்போக்கு அல்லது வேறு ஏதாவது வகையில் உடலில் காயம், பாதிப்பு ஏற்படுவது

குழந்தைகள் நடந்த/தொடரும் சம்பவத்தினால், பயம், குற்ற உணர்வு மற்றும் பாலியல் உறவுக் குறைபாடுகள் போன்றவைகளே வெளிப்படுத்தலாம். குடும்பத்திலிருந்து மெதுவாக பின்னணிக்குச் செல்வது, ஒதுங்கி இருப்பது போன்றவை நிகழலாம்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பலர், பெரியவர்களான பின்னரும், சரியான உறவுமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாமலும், பாலியல் உறவுகளைச் சீரான முறையில் தொடரமுடியாலும் அவதிப்படுவார்கள்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள், அவை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி, அவர்களது நம்பிக்கை பாழானது பற்றி மிகவும் மனபாதிப்பு ஏற்பட்டு, நெடு நாளைக்கு அதே நிலையில் இருக்கக் கூடும். சில சமயம், அவர்களது வாழ்வுநாள் முழுமையும் இந்தப் பாதிப்புகள் தொடரும். இதனாலேயே நீண்ட கால உறவு முறைகள் பாதிக்கப்படும். அவர்களுக்கு மனோதத்துவ ரீதியாக சிகிச்சை அளிக்காவிட்டால் இம்மாதிரியான நிலை ஏற்படும்.

(2:9) பள்ளிக் கல்வி முறைகளுக்குள் இருக்கும் உரிமை மீறல்கள்:                

(ஏ) உடல் ரீதியான தண்டனை

கற்பனை: சில சமயங்களில், குழந்தைகளை ஒழுங்குமுறைப்படுத்தத் தண்டனை கொடுப்பது அவசியமாகிறது. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்கள் கவனிப்பில் இருக்கும் குழந்தைகளைத் தண்டித்து ஒழுங்கு படுத்த உரிமை உண்டு.

உண்மை நிலை: பெரும்பாலான பெரியவர்கள், அடித்து வளர்க்காத குழந்தைகள் கெட்டுப்போய்விடும் என்பது போன்ற பேச்சுகளௌயெல்லாம் கேட்டு வளர்ந்திருப்பார்கள். அவற்றை நம்பவும் செய்வார்கள். குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் தண்டனைகளுக்கு உள்ளான பெரியவர்கள். தங்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், தாங்கள் தண்டனைக்கு உள்ளானபோது பட்ட வேதனையையும் வலியையும் மறந்துபோய்விடுகிறார்கள்.

உடல் ரீதியிலான தண்டனை குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள், தங்கள் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் போன்றோரிடமிருந்து தண்டனை பெறக்கூடிய நிலையில் உள்ளார்கள். ஏறக்குறைய அனைத்துப் பள்ளிகளும், பலவேறு காரணங்களுக்காக, மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகளை அளிக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள்.

ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவற்றின் பெயரால் குழந்தைகளின் எலும்புகள் உடைக்கப்படுகின்றன. பற்கள் உடைக்கப்படுன்றன. தலை முடி பிய்த்து இழுக்கப்படுகிறது. அவமானப்படக்கூடிய செயல்களைச் செய்யும்படி குழந்தைகள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

(2:10) உடல் ரீதியிலான தண்டனை என்பது, குழந்தைகளைக் காயப்படுத்துவதற்காக அல்லாமல் ஒழுங்குபடுத்துவதற்காக, அவர்களுக்கு வலி ஏற்படுத்தும் நோக்கத்துடன் உடல் பலத்தைப் பயன்படுத்துதல்;           மேலே

உடல் ரீதியிலான தண்டனைகளின் வகைகள்

உடலளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை

1) சுவரில் மாட்டிய நாற்காலிபோல குழந்தையை நிற்க வைத்தல்
2) அவர்களது புத்தகப் பைகளைத் தலையில் வைத்து நிற்க வைத்தல்
3) ஒரு நாள் முழுதும் வெய்யிலில் நிற்க வைத்தல்
4) குழந்தையை முட்டி போடவைத்துப் பாடங்களைப் படிக்க, கவனிக்க வைத்தல்
5) பெஞ்சின் மேல் நிற்க வைத்தல்
6) கைகளை மேலே தூக்கிக்கொண்டு நிற்கச் செய்தல்
7) பென்சிலைப் பற்களுக்கிடையில் கடித்துக்கொண்டு நிற்க வைத்தல்
8) கால்களுக்கு அடியிலிருந்து கைகளைக் கொண்டுவந்து காதுகளைப் பிடித்துக்கொள்ளச் செய்தல்.
9) கைகளைக் கட்டுதல்
10) தோப்புக்கரணம் போடவைத்தல்
11) பிரம்பால் அடித்தல், கிள்ளுதல்
12) காதுகளை முறுக்குதல்

மன ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் தண்டனைகள்

1) பையனாக இருந்தால் பெண்னணையும் பெண்ணாக இருந்தால் பையனையும் விட்டு அறையச் சொல்லுதல்.
2) திட்டுதல், அவமானப்படுத்தல்
3) சிறுவர்களின் நடத்தைக்கு ஏற்ப ஏதாவது பெயரை எழுதி ஒட்டி, அப்படியே பள்ளியைச் சுற்றி வரச் செய்தல்
4) வகுப்பில் பின்னால் நின்றுகொண்டு, படிக்கவோ எழுதவோ சொல்லுதல்.
5) சில நாட்களுக்குப் பள்ளியை விட்டு வெளியேற்றுதல்
6) 'நான் ஒரு முட்டாள்' 'நான் ஒரு கழுதை' என்றெல்லாம் எழுதி, அவர்கள் முதுகில் ஒட்டுதல்
7) தான் போகும் வகுப்புக்கெல்லாம் அழைத்துச் சென்று அவமானப்படுத்துவது.
8) பையன்களின் சட்டையை எல்லோருக்கும் முன்னால் கழற்ற வைப்பது.

பயமுறுத்துதல்:

1) இடைவெளி நேரங்களில் வெளியே விடாமல் வகுப்பிலேயே இருக்கச் சொல்வது.
2) இருட்டறையில் வைத்துப் பூட்டுவது.
3) பெற்றோர்களை அழைத்துப் புகார் செய்வது, தங்கள் நடத்தைக்கான விளக்கக் கடிதத்தைப் பெற்றோரிடமிருந்து வாங்கி வருமாறு குழந்தைகளிடம் வலியுத்துவது.
4) பள்ளி நேரத்தின்போது குழந்தைகளை வீட்டுக்கு அனுப்புவது, பள்ளியின் வாசல் கதவுகளுக்கு அப்பால் நிறுத்தி வைப்பது.
5) வகுப்பில் தரையில் அமரச் சொல்வது.
6) வகுப்பறை மற்றும் சுற்றுப்புறத்தைக் குழந்தையை விட்டுச் சுத்தம் செய்யச் சொல்வது.
7) பள்ளிக் கட்டிடத்தையோ விளையாட்டு மைதானத்தையோ சுற்றிக் குழந்தையை ஓடிவர வைப்பது.
8) தலைமை ஆசிரியரிடம் குழந்தைகளை அனுப்புவது
9) குழந்தையைப் பாடம் எடுக்க வைப்பது.
10) டீச்சர் வரும்வரை குழந்தையை நிற்க வைப்பது.
11) குழந்தைகளை மிரட்டுவது, அவர்கள் கையேடு அல்லது நாட்காட்டியில் குறைகளைக் குறிப்பிட்டு எழுதுவது.
12) பள்ளியிலிருந்து வெளியேற்றிவிடுவதாக மிரட்டுவது.
13) குழந்தைகள், விளையாட்டு அல்லது பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் செல்வதைக் தடுத்தல்
14) மதிப்பெண்களை வேண்டுமென்றே குறைத்தல்
15) மூன்று தடவைகள் தாமதமாக வந்தால் அதை ஒரு நாள் விடுமுறையாகக் கருதுதல்.
16) எக்கச்சக்கமாகத் திரும்பத் திரும்ப எழுதவைப்பது.
17) அபராதம் செலுத்த வைத்தல்
18) வகுப்பிற்குள் அனுமதிக்க மறுப்பது
19) ஒரு நாளோ ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ தரையில் அமர வைத்தல்
20) மாணவர்களின் நன்னடத்தை கார்டில் குறைகளை எழுதுதல்

ஆதாரம்: பள்ளிகளில் அளிக்கப்படும் உடல் ரீதியிலான தண்டனைகள் குழந்தைகளுக்கான உரிமைகளை மீறுவதற்கு சமம்: ஆசிரியர்: முனைவர் மாதாபூஷி ஸ்ரீதர்: நல்சார் சட்டப் பல்கலைக்கழகம் – ஐதராபாத்

(2:11) உடல் ரீதியிலான தண்டனையால் குழந்தை எவ்விதங்களில் பாதிக்கப்படுகிறது?       

• இளம் மனங்களில், இந்தத் தண்டனைகள், எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால், வெறுப்பும் பீதியும் இளம் மனதில் படியும்.
• இம்மாதிரியான தண்டனைகள், கோபத்தையும் கசப்பையும் உண்டாக்கும். தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கவைக்கும்.
• பரிதவிப்பு, அவமானம் ஆகியவை உண்டாகி சுய மரியாதை மங்கிவிடும். குழந்தை தனக்குள்ளே ஒடுங்கிப்போகும் அல்லது அதிகமான முரட்டுத்தனத்துடன் நடந்துகொள்ளும்.
• இத்தகைய தண்டனைகள் குழந்தைகளுக்கு வன்முறையையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் கற்றுத்தருகின்றன.
• பெரியவர்கள் செய்வதையே குழந்தைகளும் செய்யக்கூடும். வன்முறையைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று குழந்தைகள் நம்பத் தொடங்கிவிடும். குழந்தைகள், தங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பதிலுக்குத் தாக்கவும் கூடும். குழந்தைப் பருவத்தில் இவ்வாறு தண்டனை பெற்றவர்கள், பெரியவர்களான பிறகு தங்கள் குழந்தைகளையும் மனைவியையும் அடிப்பற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
• குழந்தைகளை ஒழுங்குபடுத்த உடல் ரீதியான தண்டனைதான் கொஞ்சமும் பலனளிக்காத முறை என்று கூறலாம். ஏனெனில் இது யாரையும், ஊக்கமூட்டி நல்வழிப்படுத்தாது. குழந்தைக்கு இதில் நன்மையைவிடத் தீமையே அதிகம்.
• தண்டனை அளிப்பதால், குறிப்பிட்ட செயலை மறுபடியும் செய்யாதபடி ஓரளவிற்குக் குழந்தையைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் இதனால், ஒரு மாணவன் அல்லது மாணவிக்குப் புரியாத பாடத்தைப் புரியவைக்கவோ புத்திசாலியாக்கவோ முடியாது.
• உண்மையில் பார்க்கப்போனால், இத்தகைய தண்டனைகள் பல எதிர்மறை விளைவுகளைக் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துகின்றன.
• தெருவோரச் சிறுவர்கள், மற்றும் வேலை செய்யும் சிறுவர்கள் தங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்ட தண்டனைகள்தாம் படிப்பை விட்டுவிட்டு விட்டை விட்டு ஓடிவருவதற்குக் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
• குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் உரிமைகளைப் பயன்படுத்துவதால், குழந்தைகளின் முன்னேறுவதற்கான உரிமைகள், பங்கேற்பதற்கான உரிமைகள் ஆகியவற்றை முடக்கி விடக்கூடாது. பார்க்கப்போனால், பொது விஷயங்களில் பங்கேற்பதற்கான உரிமையே ஒழுங்குமுறைக்கான அடிப்படையை உருவாக்கும். எது எப்படி இருந்தாலும் உடல் ரீதியாகத் தண்டிப்பதற்கு எந்த மதமும் எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. தன்னால் சூழ்நிலையை வேறு எப்படியும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்காகக் குழந்தைகளை உடல் ரீதியாகத் தண்டிப்பதற்குச் சட்ட ரீதியாகவோ தார்மீக ரீதியாகவோ யாருக்கும் உரிமை இல்லை. இந்த வழியைத் தேர்ந்தெடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
• கட்டுப்பாடு எந்தக் காலத்திலும் சொல்லிக் கொடுக்க முடியாது. அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
• கட்டுப்பாடு என்பது ஒரு மனோபாவம், சுபாவம், பொறுப்பு அல்லது உறுதிப்பாடு.
• கட்டுப்பாடு என்பது மனம் சார்ந்த விஷயம். அதைத் திணிக்க வேண்டும் என்ற முயற்சி வெளியிலிருந்து செய்யப்படுவதாகும்.

(2:12) பரீட்சை நெருக்கடிகளும் மாணவர்களின் தற்கொலைகளும்         

கற்பனை; இந்தியாவின் கல்விமுறையானது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாய் பல இந்தியக் கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மேற்கத்திய நாடுகளில் வெற்றிகரமாகப் பணிபுரிந்து அங்கேயே தங்கியிருக்கிறார்கள். அதே போல நம் நாட்டிலும் பலர் இக்கல்வி முறையால் பயன்பெற்றுள்ளார்கள். இங்கே உள்ள கடுமையான கட்டுப்பாடு, போட்டி மனப்பான்மையுடன் கூடிய தேர்வு முறை ஆகியவைதான் இந்த வெற்றிக்குக் காரணம். எல்லாப் பெற்றோரும் அதிக சதவிகித மாணவர்கள் வெற்றி பெறும் பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்புகிறார்கள்.

உண்மை நிலை; இந்தியா உலகத்தின் தலைசிறந்த அறிவாளிகள் பலரை உருவாக்குகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இப்போது உள்ள பள்ளிகள் இயங்கும் முறையில் கல்வி முறையில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தன என்று கூற முடியுமா? குடும்பத்தின் மற்றும் சமூகத்தின் நெருக்குதல்கள் காரணமாக, பிரச்சினைகளுக்கு மத்தியில் எப்படியும் சாதிப்பேன் என்று பிடிவாதமாகச் சதமடித்துத் தேறிய மாணவர்களுக்குத்தானே இந்தப் பெருமை சேர வேண்டும்? மிகக் கடுமையான போட்டி நிலவும் நிலை, நமது குழந்தைகள் மற்றும் மாணவர்களிடையே வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள், பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவில் நல்ல விழுக்காடுகள் பெற்று மாணவர்கள் தேற வேண்டும் அப்போதுதான் பள்ளியின் நற்பெயருக்குக் களங்கம் வராமல் இருக்கும் என்று பள்ளிகள் நினைத்துச் செயல்படும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு நல்ல முறையில் கற்றுக்கொடுக்க முடியாமல், இத்தனை நெருக்குதல்களுக்கு இடையில் திணறும் ஆசிரியர்கள் ஆகிய அத்தனை விஷயங்களும் சேர்ந்து மாணவர்களுக்கு பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையில் பல அறிவாளிகள் இளமையிலேயே இறந்துகொண்டிருக்கிறார்கள். நாம் விரைவில் விழித்துக்கொள்ளாவிட்டால் வெகு விரைவில் நமது இளம் சமுதாயத்தினரில் பலரை நாம் இழக்க வேண்டிவரும்.

சில மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு அப்பால் வாழ்க்கை என்பதே இல்லை

சிபிஎஸ்இ தேர்வு ஆணையம் X மற்றும் XII தேர்வுகளின் முடிவுகளை அறிவித்த ஐந்து நாட்களுக்குள் நமது தலைநகரான தில்லியில் அரை டஜன் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது மேலும் பல மாணவர்கள், தாங்கள் தேர்வில் தேறவில்லை என்ற காரணத்தினால் உயிரை மாய்த்துக் கொள்ளலாமா என்று யோசித்துச்கொண்டிருப்பார்கள். மாணவர்களிடையே தற்கொலை அதிகரித்திருப்பது, ஆழமாக வேரூன்றியுள்ள ஏதோ ஒரு ஆபத்தையே அடையாளம் காட்டுகிறது. "இதற்கு முன்னால், மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகள், விடலைப் பருவத்தினரோடு தொடர்புபடுத்தி யாரும் பேசியதில்லை. இப்போதுதான் இந்த விஷயத்தைப் பலரும் உணர ஆரம்பித்துள்ளனர்" என்று கூறுகிறார் ஜி.பி. பந்த் மற்றும் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் உளவியல் துறைத் தலைவருமான டாக்டர் ஆர்.சி. ஜிலோஹா. இந்த வயதில் அறிவு முதிர்ச்சியும் இருக்காது, தோல்வியைத் தாங்கிக்கொள்வதற்கான அனுபவமும் இருக்காது.

"மனநல ஆலோசனை பெறுவது எந்த அளவுக்கு முக்கியம் என்பதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்வது மிகவும் முக்கியம்” என்று, தொலைக்காட்சியில் மனநல ஆலோசனை வழங்கும் திருமதி ஷர்மா கூறுகிறார்.

தேர்வுகளின் முடிவுகள் வாழ்வின் முடிவு அல்ல. தேர்வுகளுக்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது - நீங்கள் தேர்வுகள் ஒழுங்காக எழுதாவிட்டாலும்கூட. இதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறார் ஷர்மா.

ஆதாரம்: ஸ்மிருதி காக், த ட்ரிப்யூன், சண்டீகர், இந்தியா, வெள்ளிக்கிழமை, மே 31, 2002.

நல்ல முறையில் தேர்வு முடிவுகள் இருக்கும் பள்ளகளில்தான் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்பிப் படிக்க வைக்க விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதற்கான விலையாக தங்களது குழந்தைகளின் உடல்நலம் அல்லது சில சமயங்களில் அவர்களது உயிரையும் தர வேண்டியிருக்கும் என்றால் பரவாயில்லையா என்று யாராவது பெற்றோர்களைக் கேட்டிருக்கிறார்களா? எந்தப் பெற்றோரும் தங்களது குழந்தையை இழக்க விரும்பமாட்டார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், பெற்றோர்களுக்கும் மனநல ஆலோசனை தேவைப்படுகிறது என்பதுதான்.

பள்ளிகளில் கடும் நெருக்குதல்கள் உள்ளன, பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் தங்களது குழந்தைகள் எந்த அளவுக்கு நன்றாகப் படிக்கிறார்கள் என்பதை மட்டும் பகிர்ந்துகொள்ளும் இடங்களாகச் செயல்படுகின்றன. ஆசிரியர்கள், ஒரு குழந்தையுடன் மற்றொரு குழந்தையை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் இதனால் மாணவர்களின் மனநிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இவையெல்லாம் தொடர்ந்தால் என்ன செய்தாலும் நிலைமை மாறப்பொவதில்லை. பள்ளிகள்தான் இந்த விஷயத்தில் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். முதலில் குழந்தைகளந்தன் பெரியவர்களுக்கும் மனநல ஆலோசனை பெற ஏற்பாடு செய்யத் தொடங்கலாம்.

(2:13) கற்பனைகளும் உண்மை நிலையும்            

தெருவோரச் சிறுவர்கள் மற்றும் வீட்டை விட்டு ஓடிவந்த குழந்தைகள்

கற்பனை: ஏழைகளின் வீடுகளில் இருந்துதான் குழந்தைகள் வெளியேறி ஓடி வந்து தெருவோரச் சிறுவர்களாக மாறுகிறார்கள். தெருக்களில் வசிக்கும் குழந்தைகள் கெட்ட வழக்கங்களைக் கொண்டிருப்பவர்கள்.

உண்மை: சரியான முறையில் கவனிக்கப்படாத எந்தக் குழந்தையும் ஓடிப் போகக்கூடிய வாய்ப்பு உள்ள குழந்தைதான். ஒவ்வொரு குழந்தைக்கும் கௌரவத்துடன் வாழ உரிமை உண்டு. இந்த உரிமையை மதிக்காமல் அல்லது மறுத்து நடந்துகொள்ளும் பெற்றோர்/ குடும்பம்/ பள்ளி/ கிராமம்/ சமூகம் ஆகியவர்கள் தங்களது குழந்தைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். தெருவோரக் குழந்தைகளில் பெரும்பாலோர், வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்தாம். தங்களது வீடுகளை விட்டு நல்ல வாய்ப்புகள், நகரப் பகுதியின் மீதுள்ள கவர்ச்சி, நண்பர்களின் யோசனையைக் கேட்டு நடப்பது, அல்லது அவர்களுக்குப் பிடிக்காதபோதும் பெற்றோர்கள், கடுமையான கல்வி முறை உள்ள பள்ளியில் வலியுறுத்தி சேர்த்தது பிடிக்காமை அல்லது தங்களது வீட்டில் நிலவும் கொடுமைகளைத் தாங்க முடியாமல் நகரத்திற்கு ஓடிவருவது. வந்த இடத்திலும் மிகப் பரிதாபமான நிலைகளில் வாழ்க்கையை நடத்துவது போன்றவை நிகழ்கின்றன.

தெருவோரச் சிறுவர்கள் மோசமானவர்கள் அல்ல; அவர்கள் இருக்கும் சூழ்நிலைகள்தாம் மோசமானவை. இநதக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளைகூட முழுமையான உணவு கிடைப்பதில்லை. ஆகவே, மற்றவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள். எப்போது தெரு வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டார்களோ, அப்போதே, தவறாகப் பயன்படுத்தப்படுவது, அதையொட்டிய பிரச்சினைகள், அந்தப் பிரச்சினைகளால் மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்படுவது என்ற சூழலுக்குள் வந்துவிடுகிறார்கள். வயதில் குறைந்த குழந்தைகள், தங்களை விட வயதில் பெரிய குழந்தைகளின் தொடர்பு வரும்போது, அவர்களும் மற்றவர்களைப் போல, குப்பைகளைப் பொறுக்கும் தொழிலுக்கோ, அதே போன்று எளிதில் செய்யக்கூடிய தொழிலுக்கோ வந்து விடுகிறார்கள் இவைதவிர, சிறு திருட்டுக்கள், பிச்சை எடுப்பது, போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.

குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
* இருப்பதை விட நல்ல வாழ்க்கையைத் தேடும் முயற்சி
* நகரப்புறங்களின் கவர்ச்சி
* நண்பர்களால் ஏற்படும் நெருக்கடி
* ஆரோக்கியமற்ற குடும்ப உறவுகள்
* பெற்றோர்களால் கைவிடப்படும் நிலை.
* பெற்றோர்களாலோ, ஆசிரியர்களாலோ அடிக்கப்படுவோமோ என்ற பயம்.
* பாலியல் வன்கொடுமைகள்
* சாதியப் பாகுபாடுகள்
* பாலின அடிப்படையில் பாரபட்சம்.
* உடல் ஊனமுற்ற நிலை.
* எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டதால் பாரபட்சமாக நடத்தப்படும் நிலை.

"கண்காணிப்பு இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட தெருவோரச் சிறுவர்களின் பாலியல் வன்கொடுமை அனுபவங்கள்" பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை மேற்கொண்டவர்கள், ஜி.எஸ். மீனா, ஆர்.சி. ஜிலோஹா, மற்றும் எம்.எம்.சிங் ஆகியோர். இவர்கள் இந்தியக் குழந்தைகள் மருத்துவ மையம் மற்றும் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் சமூக மருந்தியல் மற்றும் உளவியல் துறை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். 2003 - 2004ஆம் ஆண்டில், டெல்லியிலுள்ள கண்காணிப்பு இல்லம் ஒன்றில் தங்கியிருந்த ஆண்களிடம், ஆய்வு நடத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமை எந்த அளவுக்கு இருக்கிறது, எந்த முறையில் உள்ளது என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த இல்லத்திலுள்ள பெரும்பாலான சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். இவர்களில் 38.1% பேர் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்ததில் 61.1% பேரிடம் பாலியல் ரீதியான கொடுமை நடந்ததற்கான உடல் ரீதியிலான அடையாளங்கள் இருந்தன. 40.2% பேரிடம் அவர்கள் நடத்தையில் அதற்கான அடையாளங்கள் தெரிந்தன. 44.4% பேர் வன்புணர்ச்சிக்கு ஆளானவர்கள். 25% பேருக்குப் பாலுறவு நோய்களுக்கான அறிகுறிகள் இருந்தன. அறிமுகம் இல்லாத அந்நியர்கள்தாம் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு இவர்களுக்கு ஆளாக்கியவர்கள் என்பதும் தெரியவந்தது.

(2.14) கற்பனைகளும் உண்மை நிலையும்              

எச்ஐவி/எய்ட்ஸ்

கற்பனை: எச்ஐவி/எய்ட்ஸ் என்பது பெரியவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. குழந்தைகளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எச்ஐவி/எய்ட்ஸ் பற்றியும் இனப்பெருக்க ஆரோக்கியம், பாலுணர்வு, போன்ற விஷயங்கள் அவர்களது மனதைக் கெடுக்கவே செய்யும். எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து முடிந்தவரையில் விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் எச்ஐவி/எய்ட்ஸ் பரவாமல் தடுக்கலாம்.

உண்மை நிலை: வயது, தோலின் நிறம், சாதி, பிரிவு, மதம், வசிக்கும் இடம், கீழ்த்தரமான ஒழுக்க நெறி உடையவர்கள், நல்ல அல்லது தீய செயல்களைச் செய்பவர்கள் போன்ற எந்த விதமான வித்தியாசமும் இந்த நோய்க்கு இல்லை. எல்லா மனிதர்களும் எச்ஐவி-யால் பாதிக்கப்படக்கூடியவர்களே.

எச்.ஐ.வி (உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள செல்கள் குறைவதற்கான அறிகுறி) நோயை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் எய்ட்ஸை உண்டாக்குகின்றன. இந்த நோய் எச்ஐவி பாஸிடிவ் பாதிப்புள்ள நபரின் உடலில் இருந்து வெளியேறும் விந்து போன்ற திரவப் பொருட்களால் பரவும். பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறும் திரவங்கள், இரத்தம் அல்லது மார்பில் சுரக்கும் பால் போன்றவை மூலமாக எச்ஐவி பரவும். இது மட்டுமின்றி, எச்ஐவி பாதிப்புள்ள இரத்தம் இருக்கும் ஊசியை உபயோகிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் செலுத்திய ஊசியைப் பயன்படுத்துவது, அவர்களுக்குப் பச்சை குத்திய ஊசியின் மூலம் பச்சை குத்திக் கொள்வது, போன்றவற்றாலும் பரவும்.

இன்றைய தேதியில் பல லட்சக்கணக்கான குழந்தைகள், எச்ஐவி/எய்ட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் பெருமளவில் அனாதைகளாகிவருகின்றன. அதனால் பெற்றோர்களின் கவனிப்பையும் பாதுகாப்பையும் இழந்துவருகின்றன. பொதுவாக, இதுவரையில் எச்ஐவி/எய்ட்ஸ் அன்னையிடமிருந்துதான் குழந்தைகளுக்குப் பரவிவந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதினாலும் பலர் இந்த நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கமும் இந்த நோய் ஏற்படுவதற்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளன. நிலைமை இவ்வாறு இருக்கும்போது, எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய தகவல்களைக் குழந்தைகளுக்குக் கூறாமல் மறுப்பது நியாயமல்ல. நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதை அறிவதற்கான அவர்களது உரிமையை மறுப்பதும் நியாயம் அல்ல.

ஆசியாவிலேயே, இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடம் சீனாவிற்கு. யுஎன் எய்ட்ஸ் அமைப்பின்படி இந்தியாவில் 0.16 மில்லியன் குழந்தைகள், அதுவும் 0-14 வயதுக்கு உட்பட்டவர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கேரளாவில் பரப்பனான்கடி என்ற இடத்தில், அரசு உதவி பெற்று இயங்கும் ஆரம்பப் பள்ளி உள்ளது. இதில், பரிதா ராஜ் என்ற ஆறுவயதுக் குழந்தையை சேர்க்க மறுத்துள்ளனர். அவளுடைய தந்தை எய்ட்ஸ் நோயினால் இறந்தவர் என்பதே இதற்குக் காரணம். இதை அறிந்த உள்ளூர் சமூக அமைப்புகள், அரசு அதிகாரிகள் தலையிட்டு, அந்தப் பெண்ணைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அந்தப் பெண்ணுக்கு எச்ஐவி இல்லை என்று மருத்துவச் சான்றிதழ்கூடப் பெற்றுத் தந்தனர். ஆனாலும் பலன் இல்லை. உள்ளூரிலுள்ள அரசுப் பள்ளிகூட அந்தப் பெண்ணைச் சேர்த்துக்கொள்ள முன்வரவில்லை. 
ஆதாரம்: Future Forsaken, Human Rights Watch, pg. 73, 2004

நோய் தொற்றியுள்ள குழந்தையைத் தொடுவதாலோ பக்கத்தில் உட்காருவதாலோ கட்டியணைத்துக் கொள்வதாலோ முத்தம் கொடுப்பதாலோ விளையாடுவதாலோ இந்த நோய் பிறருக்குப் பரவாது.

குழந்தைக்கான தகவல் உரிமை என்பது, குழந்தையின் நலனை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆகவே, குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன், அவர்களுக்குப் பாலுணர்வு, இனப்பெருக்க ஆரோக்கியம் என்பன பற்றி விளக்கும்போது, எச்ஐவி/எய்ட்ஸ் ஆகியவற்றையும் வயதிற்குத் தகுந்தாற்போல சொல்வது அவசியம். ஆனால், நமது குழந்தைகள் மனதில் இருக்கக் கூடிய கேள்விகள் குறித்துக்கூட அவர்களுடன் கலந்து பேச நாம் தயாராக இல்லை. இதனால், இது பற்றிய பேச்சையே நாம் தவிர்த்துவிடுகிறோம். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியான இதைப் பற்றிக் குழந்தைகளுக்கு போதிக்க நாம் தயாராக வேண்டியது அவசியம். மாணவர்களுக்கும் எச்ஐவி/எய்ட்ஸ் ஆகியன பற்றிக் கற்பிக்க வேண்டியதற்குப் பதிலாக, கடந்த காலங்களில் பல பள்ளிகளில் எச்ஐவி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தினால், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்காமலும், சேர்ந்து படிக்கும் குழந்தைகளை வெளியேற்றியும் இருக்கின்றனர். இது போன்ற அடிப்படைச் சேவைகள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைக்கூட அவர்களுக்குக் கிடைக்காமல் செய்வது, நிச்சயமாக பாரபட்சமாக நடந்துகொள்ளுவதற்கு சமம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம் மற்றும் பாரபட்சமின்மையை உறுதிசெய்கிறது. சமத்துவத்திற்கு எதிராக செயல்படுவர்கள், பாரபட்சமாக நடந்துகொள்கிறவர்கள் ஆகியோர் தண்டனைக்குரியவர்களாவர்.

எச்ஐவி - பாசிடிவ் யாருக்காவது இருக்கிறது என்ற தகவல், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கச் செய்ய உதவுவதற்கோ பாதிக்கப்பட்டவர் மற்றவர்களுக்கு அதைப் பரப்பாமல் எப்படி நடந்துகொள்வது என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கோதான் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோய் வரக்கூடிய வாய்ப்புகள்/சூழ்நிலை இருக்கக் கூடியக் குழந்தைகளை அப்படி நேராமல் தடுக்கப் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை வெளியேற்றினால், அவர்கள் எளிதில் இந்த நோயினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கவே செய்யும். அதிகரித்துவரும் இந்த அபாயத்தைப் பாரபட்சம் காட்டுவதன் மூலம் போக்கிவிட முடியாது.

(2:15) கற்பனைகளும் உண்மைகளும் - சாதிய அடிப்படையில் பாரபட்சம்         

கற்பனை: தீண்டாமை, சாதியப் பாகுபாடுகள் எல்லாம் இப்போது பழங்கதை. தலித் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள்/பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள், எந்த விதத்திலும் பாகுபாடுகளை, எதிர்கொள்வதில்லை. இடஒதுக்கீடு அவர்களது வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மை: இது உண்மை அல்ல. இந்த இனங்களைச் சார்ந்த நபர் சாதியப் பாகுபாட்டை மிகச் சிறு வயதிலிருந்தே அனுபவிக்க ஆரம்பிக்கிறார். அவள்/அவன் என்று யாராக இருந்தாலும் பாகுபாட்டைப் பள்ளியில், விளையாட்டு மைதானங்களில், மருத்துவமனைகளில் என்று எல்லா இடங்களிலும் பாரபட்சத்தை அனுபவிக்கிறார்கள். இந்தப் பட்டியல் முடிவின்றி நீண்டுகொண்டே போகிறது. சமூகத்தில் வறுமையிலும் வாழ்க்கைத் தரத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள, தாழ்த்தப்பட்டவர்கள்/பழங்குடியினர் போன்றவர்களுக்குப் பல நடவடிக்கைகள் மூலம் உதவலாம். அவர்களது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை அவர்கள் அனுபவிப்பதை உறுதி செய்வதன் மூலம், இந்தப் பாகுபாடு பிரச்சினையைச் சமாளிக்கலாம். குறிப்பாக, கல்வி கற்க உரிமை மற்றும் வாய்ப்புகள், ஆரோக்கியத்தை மேம்படுத்த மருந்து வசதிகள், சமூகப் பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றை அவர்கள் தடையின்றிப் பெறுமாறு செய்யலாம். குழந்தைத் தொழிலாளர்களுக்கு, வாழ்வில் மலர்ச்சி ஏற்படத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தல் மனிதக் கழிவுகளை மனிதனே எடுக்கும் நிலையை ஒழிப்பது போன்றவற்றின் மூலம் மாறுதல்களை ஏற்படுத்த முடியும்.

(2:16) கற்பனைகளும் உண்மையும்: உடல் ஊனமுற்ற நிலை   
கற்பனை: உடல் ஊனம் என்பது சாபம். உடல் ஊனமுற்ற குழந்தையால் எந்தப் பயனும் இல்லை. இவ்வகையான குழந்தைகள் குடும்பத்திற்குப் பாரம்தான். அவர்கள் பொருளாதார ரீதியில் எவ்விதப் பங்களிப்பையும் செய்ய முடியாதவர்கள். அவர்களுக்கு கல்வி கற்பிப்பதால் எவ்விதப் பலனும் இல்லை. உண்மையில் பெரும்பாலான உடல் ஊனக் குறைபாடுகளுக்குத் தீர்வோ மருந்துகளோ இல்லை.

உண்மை நிலை: உடல் ஊனம் என்பது சாபம் அல்ல. கர்ப்ப காலத்தில் தாய் ஒழுங்கான முறையில் கவனிக்கப்படாமல் இருப்பதால் ஏற்படுவது இது. மிகச் சில சமயங்களில், பரம்பரை நோயாக ஏதேனும் ஒரு ஊனம் ஏற்பட்டுவிடுகிறது. குழந்தைக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போது கிடைக்காமல் இருப்பது, சரியான முறையில் சரியான நேரத்தில் தடுப்பூசி போடாமல் இருப்பது, விபத்து, காயம் பட்டு, அது பெரிதாக ஆவது போன்றவைதான் உடல் ஊனமாவதற்கான பிற காரணங்கள் என்று கூறலாம்.

மனநிலை பாதிக்கப்பட்டிருப்பவர் மற்றும் உடல் ஊனமுற்றவர் ஆகியவர்களைப் பொதுவாக மற்றவர்கள் பரிதாபத்துடனே நடத்துகின்றனர். ஆனால் ஊனமுற்றவர்கள் தனிநபர் என்ற விதத்தில், நம்மைப் போலவே அனைத்து உரிமைகளும் கொண்டவர்கள் என்பதை நாம் நாம் மறந்துவிட்டோம். பரிதாபம்/கருணை என்பதை விட, அவர்களது நிலையைச் சரியான விதத்தில் அறிந்துகொள்வதுதான் அவர்களுக்கு வேண்டியது.

ஊனத்தை நாம் ஒரு களங்கமாகக் கருதுகிறோம். மனநிலை சரியில்லாதவர் ஒரு குடும்பத்தில் இருந்தால், அந்தக் குடும்பம் சமூகத்தால் இழிவான முறையில்பார்க்கப்படுகிறது. எந்தக் குழந்தையாக இருந்தாலும், எந்த வகையிலான ஊனத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது அவசியம். ஏனெனில் இதன் மூலம்தான் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவ முடியும்.

ஊனமுற்ற குழந்தைகளுக்குச் சிறப்புத் தேவைகள் இருக்கின்றன. அவற்றை நாம் கவனிக்க வேண்டும். சரியான முறையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்களால் தங்களது வாழ்க்கையை நடத்திக்கொள்ளத் தேவையான திறமைகளைக் கற்றுக்கொள்ள முடியும். அவர்களது வாழ்க்கையை நடத்தத் தேவையான உதவிகள், வாய்ப்புகளை நாம் வழங்காமல் அலட்சியப்படுத்தும்போதுதான் ஊனமுற்ற நிலை பரிதாபத்திற்குரிய நிலையாக மாறுகிறது.

2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 0-19 வயதுள்ளவர்களில், 1.67 சதவிகிதம் பேர் ஊனமுற்றவர்களாக இருக்கின்றனர். மத்திய அரசின் திட்டக் கமிஷன் தயாரித்த பத்தாம் ஐந்து ஆண்டுதிட்ட விளக்க ஆவணத்தின்படி, நாட்டில் 0.5-1.0 சதவிகிதக் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குன்றியிருக்கிறது.

இப்போது இருக்கும் கல்வித் திட்ட முறையில் ஊனமுற்ற குழந்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் தடைகள்:

உடல் ஊனம்/மனநிலை பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு என்று தேவையான வசதிகளுடன் கூடிய சிறப்புப் பள்ளிகள் ஏதும் இல்லை.

ஊனம் உள்ள குழந்தைகள் பொதுவாக, விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இம்மாதிரியான குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து அதற்கேற்றாற்போல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளிகளில் இல்லை.

இத்தகைய குழந்தைகளுடன் பழகும் மற்ற குழந்தைகள், இவர்களது பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது. பொதுவாகவே, உடல் ஊனமுற்ற குழந்தைகள், மனநிலை பாதிப்புள்ள குழந்தைகள் ஆகியோர் பாடங்களைப் புரிந்துகொள்வதற்கு மற்றவர்களை விட அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இதைப் பிற மாணவர்கள் கிண்டல் செய்வது; உடல் ஊனமுற்றால், அதைக் குறித்துக் கேலி செய்வது போன்றவை நடக்கின்றன.

பொது இடங்களில் உடல் ஊனமுற்றவர்கள் நடமாவதற்குத் தோதான வகையில் எந்தச் சிறப்பு ஏற்பாடுகளும் இல்லை. உதாரணமாக, ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சரிவு மேடைகள், சிறப்பாக வடிவமைத்த நாற்காலிகள் பொது இடங்களில் இல்லாத நிலை, உடல் ஊனமுற்றவர் உபயோகிக்கும்படியான கழிவறை அமைப்புகள் போன்றவை இல்லை.

உடல் ஊனமுற்ற குழந்தைக்குச் சரியான விதத்தில் சில திறன்களைக் கற்றுக் கொடுப்பதன் மூலம், பயிற்சி அளிப்பதன் மூலம், அவனுக்கோ அவருக்கோ சுயமாகச் சம்பாதிக்கும் நிலையை ஏற்படுத்தித்தர முடியும்.

இது மட்டுமின்றி, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் பெரும்பாலான உடல் ஊனங்கள், 'நிரந்தரமாகச் சரி செய்ய முடியாது' என்ற நிலையை எட்டாமல் பார்த்துக்கொள்ள முடியும். குறிப்பாக, மனநிலை பாதிப்புகளில் பெரும்பாலானவை சரியான நேரத்தில், ஒழுங்கான முறையிலான சிகிச்சை அளிப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட நபர் மனநோயாளியாக மாறாமல் காப்பாற்ற முடியும்.

மோதல்கள், மனிதனால் உருவாக்கப்படும் பேரிடர்கள் ஆகியவற்றின்போது என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும், பெரும் தகராறுகள், சமூகப் பிரச்சினைகள், அரசியல் தகராறுகள், போர் மற்றும் இயற்கைச் சீற்றத்தால் பேரழிவுகள் ஆகியன ஏற்படும்போது சிறப்பான கவனித்துடன் செயல்பட வேண்டும். இம்மாதிரியான சூழ்நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்படும். இதை அவர்கள் சார்ந்த சமூகம் உணர்ந்தால்தான், இத்தகைய சிறப்பான பாதுகாப்பினைக் குழந்தைகளுக்குத் தந்து, அவர்களைக் காக்க முடியும்.

(3) குழந்தைகள் பாதுகாப்பும் அது குறித்த சட்டங்களும்             

எல்லா விதமான கொடுமைகள் மற்றும் அபாயங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை குழந்தைகளுக்கு உண்டு என்பதை இதுவரை விவாதித்தோம். ஆசிரியர்களாக இருக்கும் நீங்கள் இந்தப் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு தெரிந்துகொள்ள வேண்டுமானால், குழந்தைகள் எதிர்கொள்ளும், உண்மையான பிரச்சினைகள் அபாயங்கள் போன்றவற்றைப் பற்றியும் அவற்றைத் தீர்ப்பதற்கான சட்டபூர்வமான வழிமுறைகள், சட்டங்கள், கொள்கைள் ஆகியவற்றைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒரு குழந்தைக்கு சட்டத்தின் உதவியும் பாதுகாப்பும் தேவைப்படலாம். நாம் அனைவரும் செய்யும் தவறு என்னவென்றால் ஒரு குழந்தைக்குத் சட்டபூர்வமான நடவடிக்கை தேவைப்படும்போது அது நடக்கவிடாமல் தடுத்துவிடுகிறோம்.

(3:1) இந்தக் கேள்வியை நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:  
சம்பந்தப்பட்ட குடும்பம்/ அவர்களின் சமூகம்/ பொதுவான சமூகம்/ பலம் பொருந்திய குழுக்கள் போன்றவர்களின் அதிருப்திக்கு ஆளாவது, அச்சுறுத்தலுக்கு ஆளாவது போன்றவற்றைப் பற்றிய பயம், நிலைநிறுத்த வேண்டிய சமூக நீதியை விட பெரியதா, முக்கியமானதா?

2003ஆம் ஆண்டில் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சட்டபூர்வமான வயதை அடையாமல் இருந்த இரண்டு பேருக்குத் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்தன. அதே கிராமத்தில் இருந்த ஐந்து பெண்கள், இது நடைபெறாமல் தடுத்து நிறுத்தினர். திருமணம் என்ற பெயரால் நடக்கும் இந்த மறைமுக வியாபாரத்தைத் தடுக்க வேண்டும் என்ற உறுதி அவர்களுக்கு ஏற்பட்ட பிறகு அவர்களுடைய ஆசிரியர் இதற்கு முழுவதும் பக்கபலமாக இருந்து ஆதரவு தெரிவித்தார். இவர்களது முயற்சிக்கு மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கிராமத்திலுள்ள பெரியவர்கள் அவர்கள் சார்ந்த சமூகம் போன்றவர்கள் எதிர்த்தனர். ஐந்து பெண்களின் குடும்பங்களும் எதற்கு வம்பு என்று பயந்தனர். இவர்களையும், இதில் ஈடுபட வேண்டாம் என்று வற்புறுத்தினர். பள்ளி ஆசிரியர், சட்டத்தின் உதவியை நாடுமாறு ஆலோசனைகள் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளுக்கு உதவியாக இருந்தார்.

நடக்க இருந்தத் திருமணம் பால்ய விவாகம் என்று உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் புகாரைப் பதிவு செய்ய மறுத்தனர். அனைத்து நடவடிக்கைகளும் பலன் அளிக்காமல் போகவே மறுபடியும் ஆசிரியரின் யோசனைப்படி, உள்ளூரில் செயல்பட்டு வந்த ஊடகங்களின் உதவியை நாடினர். இதன் பிறகுதான் காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். பால்ய விவாகம் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஐந்து பெண்களும், அவர்களது அசாத்திய தைரியம், செயல்திறன் ஆகியவற்றிற்காக அசாத்திய துணிச்சலுடன் காரியமாற்றும் நபர்களுக்கான தேசிய விருதைப் பெற்றனர்.

நடந்த சம்பவத்தில் ஆசிரியரின் பங்க மிக முக்கியமானதாக இருந்தது. இவரது உதவி இல்லாமல் இந்த ஐந்து பெண்களும், தாங்கள் சார்ந்தச் சமூகத்தை எதிர்த்துப் போராடியிருக்க முடியாது. உண்மையில் சொல்லப்போனால், இந்த ஆசிரியத் தொழிலை இழக்கும் அபாயம் மட்டுமின்றி. அவரது உயிருக்கே ஆபத்து நேரும் என்ற நிலை எழுந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆபத்து இருந்தாலும் நீதி கிடைக்க வேண்டும் என்ற பெரும் ஆவல். குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிப்பாடு. ஆகியவைதான் அவரைச் செயல்பட வைத்தன.

(3:2) சட்ட பூர்வ நடவடிக்கைகளில் இறங்கும் வழிகள்   

* முதலில் குழந்தைகளுக்கான உதவித் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது காவல் துறைக்குத் தகவல் தெரிவியுங்கள்.
* குழந்தைகளுக்கான உதவித் தொலைபேசித் தொடர்பின் மூலம் அவர்களுக்கானஆலோசனை, சட்ட உதவி ஆகியவற்றைத் தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
* சமூகத்தின் ஆதரவைத் திரட்டுங்கள்.
* தேவைப்பட்டால் மட்டும், கடைசித் தீர்வாகப் பத்திரிகைகளைத் தொடர்புகொள்ளுங்கள்.
* சட்டங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடிப்படைச் சட்டங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். அவை மூலம் எந்த வகையிலான உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்பதையும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உரிமைகளைப் பற்றியும், அவற்றைப் பாதுகாக்கும் சட்டங்களைப் பற்றியும் தெரிந்து இருந்தால்தான், பிரச்சினையில் சிக்கியுள்ள குழந்தையையோ பெற்றோர்/பாதுகாவலர்/சமூகம் போன்றவர்களையோ சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் எடுத்துக் கூறி ஒப்புக்கொள்ள வைக்க முடியும். சில சமயங்களில் காவல்துறையினர் / அரசுநிர்வாக அதிகாரிகள் ஆகியோரும்கூடப் பிரச்சினைக்கு உதவ மறுக்கும் நிலை எழலாம். சட்டங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல், இவர்களையும் வலியுறுத்தவும், வாதாடி ஒப்புக்கொள்ள வைக்கவும் பெரும் உதவிகரமாக இருக்கும்.

(3:3) பாரபட்சமான கருச்சிதைவு, பெண் குழந்தை என்றால் கருவைக் கலைப்பது மற்றும் பெண் சிசுக்கொலை  

பாலினம் பற்றித் தெரிந்து கருக்கலைப்பு செய்யும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர உதவும் சட்டம் இருக்கிறது:

பிரசவத்திற்கு முன்பு கருவை அறியும் முறை குறித்த (தவறான பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் 1994.

கரு ஆணா பெண்ணா என அறிந்துகொள்ளும் முறைகள் பற்றி விளம்பரம் செய்வதையும், அந்த முறையைத் தவறாகப் பயன்படுத்துவதையும் இச்சட்டம் தடை செய்கிறது.

கர்ப்ப காலத்தில் கருவைப் பற்றி அறிவதற்குக் குறிப்பிட்ட சில காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வளரும் கருவில் பரம்பரை வியாதி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும், சுத்தமான உடல் வளர்ச்சி, மூளைக் கோளாறுகள் ஏதாவது இருக்கிறதா, அதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் இச்சோதனையை மேற்கொள்ளலாம். ஆனால் முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஆய்வுக்கூடங்களில்தான் இந்தச் சோதனை நடத்தப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் உத்தரவுகளை மீறுபவர்களுக்கான தண்டனையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி புகார் செய்ய வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், முப்பது நாட்கள் கால அவகாசம் அளித்துப் புகார் செய்ய வேண்டும். அதன் பின் நீதிமன்றத்திற்குச் செல்ல இருக்கும் முடிவையும் அதில் குறிப்பிட வேண்டும்.

இந்தச் சட்டத்தைத் தவிர, 1860 ஆண்டின் இந்தியக் குற்றவியல் சட்டத்தில் இருக்கும் பிரிவுகளும் முக்கியமானவை.

* ஒரு நபரால் மரணம் நிகழும்போது (பிரிவு 294 மற்றும் பிரிவு 300)
* குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் பெண்ணின் கருவை வேண்டுமென்றே கலையும்படி செய்வது. (பிரிவு 312)
* குழந்தை உயிருடன் பிறக்க முடியாத அளவில் வேண்டுமென்றே எடுக்கப்படும் எந்த நடிவடிக்கையும், பிறந்தவுடன் இறந்துபோகும்படிச் செய்வது (பிரிவு 315)
* குழந்தையைக் கருவிலேயே இறக்கும்படி செய்வது (பிரிவு - 316)
* 12 வயதுக்குக் கீழுள்ள குழந்தையை அபாயகரமான சூழ்நிலையில் இருக்கச் செய்வது, அக்குழந்தையைக் கைவிடுவது. (பிரிவு - 317)
* குழந்தை பிறந்ததையே வெளியில் தெரியாமல் செய்ய, அக்குழந்தையின் உடலை மறைத்தல் (பிரிவு - 318) இத்தகைய குற்றங்களுக்குத் தண்டனை, 2 வருட சிறைத் தண்டனை முதல், ஆயுள் தண்டனைவரை அல்லது அபராதம்; அல்லது அபராதம், சிறைத் தண்டனை என இரண்டும் சேர்த்தே விதிக்கப்படலாம்.

(3:4) குழந்தைத் திருமணம்  

குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் 1929. இதன்படி 21 வயதிற்குக் குறைவான ஆண் 18 வயதுக்கும் குறைவான பெண் (பிரிவு 2 (a)) ஆகியோருக்கு இடையில் நடக்கும் திருமணம் குழந்தைத் திருமணமாகும்.

இந்தச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பலர், கீழ்க்காணும் செயல்கள் நடக்க அனுமதித்தால் தண்டிக்கப்படுவார்கள். குழந்தைத் திருமணத்தை செய்து தருகிறேன் என்று ஒப்புக்கொண்டு நடத்தித்தரும் ஒப்பந்தக்காரர், இந்தத் திருமணத்தை நடத்தித் தருவது அல்லது இதில் சம்பந்தப்படுவது, போன்றவை குற்றமாகும். இதில் தொடர்புடையவர்கள்:

* 18 வயதுக்கு மேலும், 21 வயதிற்குக் கீழும் உள்ள ஆண் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டு அதில் ஈடுபட்டால், அவருக்குச் சாதாரண சிறைத் தண்டனை 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீட்டிப்பு மற்றும் ரூ 1000/- வரை அபராதம் (அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் சேர்ந்தே விதிக்கப்படலாம்) (பிரிவு - 3)
* குழந்தைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் ஆண் 21 வயதிற்கு மேற்பட்டிருந்தால், அவருக்கு 3 மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் (பிரிவு - 4).
* இத்தகைய குழந்தைத் திருமணத்தைத் தனக்குத் தெரியாமலே நடத்தி வைத்ததாக நிரூபிக்க முடியாமல் போகும் நபருக்கு, 3 மாத சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் (பிரிவு - 4).
* இந்தத் திருமணத்தை நடக்க அனுமதித்த, அல்லது நடப்பது குறித்து உதாசீனம் செய்து அலட்சியமாக இருந்த, அல்லது குழந்தைத் திருமணம் நடத்த எந்த வகையிலாவது உதவி புரிந்த பெற்றோர் மற்றும் பாதுகாவலர் சிறைத் தண்டனையும், அபராதமும் பெறுவார் (பிரிவு - 6)

குழந்தைத் திருமணம் நடைபெறுவதைத் தடுக்க முடியுமா?

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 1929-ன் படி, குழந்தைத் திருமணம் நடக்க இருக்கிறது என்று யாராவது காவல்துறைக்குப் புகார் தெரிவித்தால், இந்தத் திருமணம் நடைபெறாமல் தடுக்க முடியும். புகாரைப் பெற்றுக்கொண்டவுடன். காவல் துறையினர் விசாரித்து, அதன் பின் இந்த விஷயத்தை மாஜிஸ்டிரேட்டிடம் எடுத்துச் செல்வார்கள். நீதிபதி, இதைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்தத் தடை மூலம் இந்தத் திருமணத்தைத் தடுக்க முடியும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை, ரூ 1000 அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்க முடியும்.

குழந்தைத் திருமணம் பின்னாளில் அதிகாரபூர்வமான திருமணமாக மாற்றப்படுவதற்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பை மீறி நடத்தப்படும் திருமணங்கள் தாமாகவே செல்லாதவையாகிவிடும் என்று சட்டம் சொல்லவில்லை. எனவே முயற்சி எடுத்து இந்தத் திருமணங்களை நிறுத்தி, அவை அங்கீகாரம் பெறுவதைத் தடுக்க வேண்டும்.

(3:5) குழந்தைத் தொழிலாளர் முறை      
குழந்தையைத் தொழிலாளியாக அடமானம் வைக்கும் தொழிலாளர் சட்டம் 1993 :
பெற்றோர் அல்லது பாதுகாவலர் என யாராக இருந்தாலும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தையைத் தொழிலாளியாக வேலை செய்யவதற்காக அடமான ஒப்பந்தம் செய்வது, என்பது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் செல்லாதது இவ்வாறான ஒப்பந்தத்தில் ஈடுபடும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அக்குழந்தையை வேலைக்கு வைத்துக்கொள்பவர்கள் பொறுப்பாளர் ஆகியோர் தண்டனை பெறுவார்கள்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 :
கொடுத்த கடன் தொகைக்கு ஈடாகக் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. கொத்தடிமையாவதற்குக் காரணமாக இருந்த எல்லா விதமான கடன் ஒப்பந்தங்கள் மற்றும் பிற ஒப்புதல் விவரங்கள் போன்றவை இந்தச் சட்டத்தின்படி செல்லாததாகக் கருதப்படும். கொத்தடிமை முறையில் வேலை செய்யும்படி யாரையும் வற்புறுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இம்மாதிரியாகத் தங்களது குழந்தைகளை பிற குடும்ப உறுப்பினர்களைக் கொத்தடிமை முறைக்கு உட்படுத்தும் பெற்றோர்களும் தண்டனைக்கு உரியவர்கள்தாம்.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டம் 1986 :
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் சூழல்களில் 14 வயதுக்கு உட்பட்டவர்களை வேலைக்கு வைப்பது சட்டப்படி தண்டனைக்கு உரியது. தீங்கு விளைவிக்காத இடங்களில் வேலை செய்வது முறைப்படுத்தவும் சட்டம் இருக்கிறது.
இளம் சிறுவருக்கான நீதி முறை (குழந்தைகளைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த) சட்டம் -2000 :
இந்தச் சட்டத்தின் 24-வது பிரிவில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இடங்களில் குழந்தைகளை வேலை செய்ய வைப்பது, கொத்தடிமை முறையில் வேலை வாங்குவது, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தைப் பிடித்து வைத்துக்கொள்வது போன்றவை தண்டனைக்கு உரியவை.
கீழே குறிப்பிட்டுள்ள சட்டங்கள், குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடைசெய்வது, மற்றும்/அல்லது அவர்கள் பணி புரியும் சூழலை ஒழுங்குபடுத்துவது, முதலாளிகளைத் தண்டிப்பது ஆகியவற்றுக்கான சட்டப் பிரிவுகள்:
தொழிற்சாலைகள் சட்டம் 1948
தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951
சுரங்கங்களுக்கான சட்டம் 1952
வாணிகக் கப்பல் போக்குவரத்துச் சட்டம்
பயிற்சிப் பணியாளர் சட்டம் 1961
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961
பீடி மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் (வேலை இடங்களின் நிலவரம் குறித்த) சட்டம் 1966
டபுள்யு.பி. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1963
கற்பழிப்புக்கான அதிகபட்சத் தண்டனை ஏழு வருடங்கள். ஆனால், கற்பழிக்கப்பட்ட பெண் 12 வயதிற்குள் இருந்தாலோ, கற்பழித்தவர் அதிகாரப் பதவிகளில் இருப்பவராக இருந்தாலோ (மருத்துவமனைகளில், குழந்தைகள் காப்பகத்தில், காவல் நிலையம்) இந்தத் தண்டனை மேலும் அதிகமாக இருக்கும்.
சிறுவனுடன் பலவந்தமாகப் பாலியல் உறவு, கற்பழிப்புக்கு இணையான செயல் என்றாலும், கற்பழிப்புச் சட்டத்தில் இது சேர்க்கப்படவில்லை. சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆட்படுத்துவது போன்றவற்றைக் கவனிக்கும் அல்லது தண்டிக்கும் சிறப்பான சட்டங்கள் ஏதும் இல்லை என்றாலும், இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 377ஆம் பிரிவு, இயற்கைக்குப் புறம்பான குற்றச் செயல்கள் என்ற விதத்தில் இவற்றைக் கையாள்கிறது.
(3:6) குழந்தைகளைக் கடத்தி விற்பது    
குழந்தைகள் கடத்தல், திருட்டு, விற்பனை போன்ற குற்றங்களைத் தண்டிக்கத் தேவையான சட்டங்கள் பின்வருமாறு:
இந்தியக் குற்றவியல் சட்டம் 1860
இந்தச் சட்டத்தின்படி, குழந்தைகளை ஏமாற்றுவது, மோசடி செய்வது, ஆள் கடத்தல், தவறாக அடைத்துவைத்தல் குற்றத்திற்கு நிகரான அச்சுறுத்தல், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திருடுவது, இம்மாதிரியான வயதுள்ளவர்களை விற்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான நீதிமுறை (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000
இந்தச் சட்டம் கடத்தப்பட்ட அல்லது வணிகப்பொருளாகப் பயன்படுத்தப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்களை மீட்டவுடன் அவர்களுடைய குடும்பங்கள் அல்லது சமூகத்தவருடன் மறுபடியும் ஒன்று சேர்க்க உதவுகிறது.
கடத்தி விற்பது போன்ற குற்றங்களைத் தண்டிப்பதற்கு உபயோகப்படும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள்.
ஆந்திரப் பிரதேச தேவதாசி (பெண்களை நேர்ந்து கொடுக்கும் முறை ஒழிப்பு) சட்டம் 1988 அல்லது கர்நாடகா தேவதாசி (நேர்ந்து கொடுக்கும் முறை ஒழிப்பு) சட்டம் - 1982
பம்பாய் பிச்சையெடுப்பைத் தடுக்கும் சட்டம் 1959
கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் -1976
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தச் சட்டம் 1986
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் -1929
குழந்தைப் பராமரிப்பாளர் மற்றும் குழந்தைகள் சட்டம்-1890
இந்துக்கள் தத்து எடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம்-1956
குழந்தைகளை விற்பனை செய்தல் (தடுப்பு) சட்டம்-1986
தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சட்டம்-2000
சட்டத்திற்குப் புறம்பான போதை மருந்துகள் கடத்தல், விற்பனை மற்றும் உளவியல் சார்ந்த போதைப் பொருட்கள் உபயோகம் பற்றிய சட்டம்-1988
(3:7) எச்ஐவி /எய்ட்ஸ் 
எச்ஐவி பாஸிடிவ் நிலையில் உள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க என்று தனியான சட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம், அனைத்துக் குடிமக்களுக்கும் சில அடிப்படை உரிமைகலைத் தர உத்தரவாதமளிக்கிறது. இதில் எச்ஐவி பாஸிடிவ் உள்ளவர்களும் அடங்குவார்கள். இந்த உரிமைகள்:
- விவரம் அறிந்து ஒப்புதல் தரும் உரிமை
- ரகசியம் காப்பதற்கான உரிமை
- பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிம
விவரம் அறிந்து ஒப்புதல் தரும் உரிமை
எந்த ஒப்புதலும் சுதந்திரமான நிலையில் அளிக்க/ பெறப்பட வேண்டும். நெருக்குதல் தருவதன் மூலமோ தவறுதலாகவோ மோசடி செய்தோ நியாயமற்ற தாக்கம் மூலமாகவோ ஆள்மாறாட்டம் செய்தோ எதற்காகவும் ஒப்புதலைப் பெறக் கூடாது.
இந்த ஒப்புதல் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த நிலை, மருத்துவர், நோயாளி ஆகியோரிடையில் இருப்பது மிகவும் முக்கியம். மருத்துவருக்கு நோயாளியைப் பற்றி அவரை விடவும் அதிகமான விவரங்கள் தெரியும். ஆகவே, எந்த விதமான மருத்துவச் சிகிச்சைக்கு முன்னரும் அதில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் பற்றியும், அந்த மருத்துவ முறைக்கு, மாற்று இருந்தால், அதைப் பற்றியும் மருத்துவர் நோயாளிக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம், நோயாளி, தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அறிவுபூர்வமாக யோசித்து முடிவு செய்யும் வாய்ப்பினைப் பெறுகிறார்.
எச்ஐவி நோயின் விளைவுகள், அதனால், ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்ற நோய்களைக் காட்டிலும் வேறுபட்டவை. அதனால்தான் எச்ஐவி பரிசோதனை செய்யும் முன்னர், சம்பந்தப்பட்டவருக்குத் தகவலைக் கூறி, அவரது அனுமதி பெற்ற பின்தான் பரிசோதனை செய்யப்பட வேண்டும். பிற சோதனைகளுக்காக நோயாளியிடமிருந்து பெறும் அனுமதியை எச்ஐவி பரிசோதனைக்கும் சேர்த்துத்தான் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. முறையான தகவல்களைத் தெரிவித்து அவற்றின் அடிப்படையில் ஒப்புதல் பெறாமல் ஒருவருக்கு எச்ஐவி பரிசோதனை செய்யப்பட்டால் பரிசோதனை செய்தவர்கள் மீது வழக்குத் தொடர அவருக்கு உரிமை இருக்கிறது.
தகவல்களை ரகசியமாக வைத்திருக்கும் உரிமை
தான் நம்பும் ஒருவரிடம், குறிப்பிட்ட விஷயத்தை நம்பிக்கையின் அடிப்படையில் கூறினால் அந்த விஷயம் ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட வேண்டியதாகும். இந்த விஷயத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால், அந்தச் செயல் நம்பிக்கையை மீறிய செயலாகும்.
தனது நோயாளிகளின் உடல்நலம் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருப்பது ஒரு மருத்துவரின் முக்கியமான கடமை. ஒரு நபரின் மருத்துவ ரகசியங்கள் வெளியிடப்படக்கூடும் என்ற நிலை எழுந்தாலோ அல்லது வெளியிடப்பட்டாலோ அந்த நபருக்கு அதை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்லும் உரிமை உண்டு.
எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய்களின் பாதிப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், தங்களது நிலை அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால் நீதிமன்றத்திற்குச் செல்ல அஞ்சுகிறார்கள். ஆனால் அடையாளத்தை மறைத்து புனைபெயரில் வழக்கைப் பதிவு செய்யலாம் என்ற சட்டபூர்வமான உரிமை இருக்கிறது. இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதால், மேற்குறிப்பிட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்படுவோமோ பாரபட்சமாக நடத்தப்படுவோமோ போன்ற அச்சங்கள் இன்றி நீதியைப் பெற முடியும்.
பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான உரிமை
சமமாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அடிப்படை உரிமை. சட்டத்தின்படி, யாரும் அவர்களது பாலினம், மதம், சாதி, இனம், பரம்பரை அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சமாக நடத்தப்படக் கூடாது. அரசுத் துறையின் நடத்தும் அல்லது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள் யாரிடமும் சமூக ரீதியிலோ தொழில்முறையிலோ பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது.
பொதுமக்களின் சுகாதாரமும் ஓர் அடிப்படை உரிமைதான். அரசு இதை அனைத்துக் குடிமக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காகவோ மருத்துவமனையில் சேரவோ அணுகினால் எந்த மருந்துவமைனயும் அவரை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று நிராகரிக்க முடியாது.
அவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டால் சட்டத்தின் மூலம் அவர்கள் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.
அதேபோல எச்ஐவி உள்ளவரை எந்தப் பணியிலும் பாரபட்சத்துடன் நடத்தக் கூடாது. இந்த நிலைக்காக அவரை வேலையை விட்டு நீக்கினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல அவருக்கு உரிமை உண்டு.
எச்ஐவி பாஸிடிவ் நிலையில் இருந்தாலும் அவரால் தான் செய்துகொண்டிருந்த பணியை எவ்விதப் பிரச்சினையில்லாமல் செய்ய முடியும்; அதனால் யாருக்கும் எந்த வித அபாயமும் ஏற்படாது என்ற நிலை இருக்கும் பட்சத்தில் அவரை வேலையிலிருந்து நீக்க முடியாது. இது, 1997மே மாதத்தில் நடந்த வழக்கில் பம்பாய் நீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதிசெய்யப்பட்டது.
1992ஆம் ஆண்டு, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் எல்லா மாநில அரசுகளுக்கும் ஒரு நிர்வாக சுற்றறிக்கை அனுப்பியது. அதில் எச்ஐவி/எய்ட்ஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களைச் சேர்ந்த சுகாதார மையங்களில் சிகிச்சை மற்றும் கவனிப்பைப் பாரபட்சமின்றிப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
ஆதாரம்: எச்ஐவி/எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சினைகள்:

3:8 உடல் ரீதியிலான தண்டனை                                    
இந்தியாவில் மந்திய அரசு சார்பில் பள்ளிகளில் உடல் ரீதியிலான தண்டனைகளைத் தடைசெய்யச் சட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. ஆனால், பல்வேறு மாநிலங்கள், இவ்வகையான தண்டனைகளைச் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலமாகத் தடை செய்திருக்கின்றன.
மத்திய அரசாங்கம் இப்போது குழந்தைகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்க ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உடல் ரீதியாகத் தண்டனை கொடுப்பது குழந்தைக்கு எதிராக இழைக்கப்படும் குற்றமாகக் கருதப்படும். இந்தச் சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்வரை இம்மாதிரியான செயல்களைத் தடுக்க எந்தச் சட்டங்கள் இருக்கின்றனவோ அவை பயன்படுத்தப்படும்.
உடல்ரீதியான தண்டனைக்கான சட்டம் இயற்றிய மாநிலங்கள்
மாநிலங்கள் உடல் ரீதியிலான தண்டனைகள் (தடை அல்லது ஆதரவு) சட்டம்/கொள்கை
தமிழ்நாடு தடை செய்யப்பட்டது 2003 ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் கல்விச் சட்டங்களில் 51வது பிரிவைத் திருத்தி, உடல் ரீதியிலான தண்டனை தடை செய்யப்பட்டது. 'திருத்துவதற்காக' என்று மனதளவில் அல்லது உடலளவில் வலி ஏற்படும அளவுக்குத் தண்டனைகளைத் தருவது தடை செய்யப்பட்டுள்ளது.
கோவா தடை செய்யப்பட்டது கோவாவின் குழந்தைகள் சட்டம் 2003ன்படி உடல் ரீதியான தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்காளம் தடை செய்யப்பட்டது பள்ளிகளில் குழந்தைகளைக் குச்சியால் அடிப்பது சட்டத்திற்கு விரோதமானது என்று 2004 பிப்ரவரியில் கல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது குறித்து பொதுநல வழக்கு ஒன்றும் தபஸ் பாஞ்சா என்பவரால் (வழக்கறிஞர்) கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திரப் பிரதேசம் தடை செய்யப்பட்டது ஆந்திராவில் 1966 ஆண்டின் அரசு ஆணை எண் 1188 ன்படி, உடல்ரீதியிலான தண்டனை பற்றிய பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், தடை செய்யப்படவில்லை. 2002 பிப்ரவரி 18ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் ஜ. சுப்பாராவ் மேற்படி ஆணையைத் திருத்தி புது ஆணையை (எண் 16) வெளியிட்டார். இதன்படி ஆந்திரப் பிரதேச அரசு எல்லாக் கல்வி நிலையங்களிலும் உடல் ரீதியிலான தண்டனையைத் தடை செய்தது. இதை மீறுபவர்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி தடை செய்யப்பட்டது தில்லி பள்ளிக் கல்விச் சட்டம் (1973) உடல் ரீதியிலான தண்டனைகளைத் தருவதற்கு வழிவகை செய்தது. இதை எதிர்த்து "அர்த்தமுள்ள கல்விக்கான பெற்றோர்கள் அமைப்பு" நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம் மேற்படி சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. அந்தச் சட்டத்தில் மாணவர்களுக்கு எப்போது தண்டனை தரலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிற ஷரத்துக்கள், மனிதத்தன்மை அற்றவை, குழந்தைகளின் தன்மான உணர்வை மழுங்கடிக்கக் கூடியவை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. இந்தத் தீர்ப்பு டிசம்பர் 2000ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
சண்டிகர் தடை செய்யப்பட்டது 1990களில் சண்டிகர் மாநிலத்தில், உடல் ரீதியிலான தண்டனைகள் தடை செய்யப்பட்டன.
இமாச்சலப் பிரதேசம் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது உடல் ரீதியிலான தண்டனை பெற்றதால் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏற்பட்டது என்ற செய்தி வெளிவந்ததை அடுத்து இம்மாநில அரசு பள்ளிகளில் உடல் ரீதியிலான தண்டனையைத் தடை செய்யத் தீர்மானித்துள்ளது.

(3:9) வீடுகளில் நிகழும் வன்முறை                             மேலே
வீடுகளில் நிகழும் வன்முறை குறித்து எந்தச் சட்டமும் இந்நாட்டில் இல்லை. ஆனால் 2000ஆம் ஆண்டில் இளம் குற்றவாளிகள் நீதிமுறைச் சட்டம் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) இயற்றப்பட்டது. இதன்படி குழந்தைகளுக்கு எதிராகக் குரூரமான முறையில் நடந்துகொள்வது, அதுவும் இந்தக் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நபர்கள் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் இவ்வாறு செய்தால் அது மோசமான குற்றம் என்று கருதப்படும். இந்தச் சட்டத்தில் உள்ள பிரிவு 23 -ன்படி குழந்தையைக் குரூரமாக நடத்தினால் தண்டனை உண்டு. இந்தக் கொடுமைகளில், குழந்தையைத் தாக்குவது, அடிப்பது அநாதரவாக விட்டு விடுவது, ஆபத்தான இடங்களில், சூழ்நிலைகளில் விடுவது, குழந்தைக்கு மனோ ரீதியாக அல்லது உடல் ரீதியாகத் துன்பம் ஏற்படும் வகையில் அலட்சியம் செய்வது ஆகியன அடங்கும்.
(3.10) சாதி அடிப்படையில் பாரபட்சம்                    
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உறுதிப்பாடு:
சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம், நாட்டில் உள்ள அனைவருக்கும் சமமான முறையில் சட்டத்தின் பாதுகாப்பு (சட்டப்பிரிவு 14)
இனம், சாதி, பாலினம், பரம்பரை, பிறந்த இடம் மற்றும் வீடு இருக்கும் இடம் ஆகியவற்றை வைத்துப் பாகுபாடு காட்டப்படுதல் தடை செய்யப்படுகிறது (சட்டப் பிரிவு -15)
இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசுத்துறைகளில் பணி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாரபட்சம் காட்டக் கூடாது (சட்டப் பிரிவு-16)
தீண்டாமை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. எந்த வகையில் 'தீண்டாமை'யைக் கடைபிடித்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் (சட்டப் பரிவு -17)
தீண்டாமையை எந்த வகையிலாவது தொடர்ந்தால், அதற்குத் தண்டனை உண்டு என்ற சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955இல் பிறப்பிக்கப்பட்டது. ஷெட்யூல்ட் வகுப்பைச் சேர்ந்தவர்களை அவர்கள் சாதியின் பேரைச் சொல்லி அழைப்பதுகூடச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
1989இல் இந்திய அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தை இயற்றியது. ஷெட்யூல்ட் சாதியினர் மற்றும் ஷெட்யூல்ட் பழங்குடியினர் ஆகியோரை ஷெட்யூல்ட் அல்லாத சாதியினர், பாரபட்சம் காட்டுவது, வன்முறை ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டன.
இம்மாதிரியான குற்றங்களை விசாரிப்பதற்காகவென்றே சிறப்பு நீதிமன்றங்களை மாவட்ட வாரியாகச் சம்பந்தப்பட்ட அரசுகள் ஏற்படுத்தவும், இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு நீதிமன்றங்களில் இவ்வகையான வழக்குகளை அரசு சார்பில் எடுத்து நடத்த சிறப்புப் பொது அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இவை சம்பபந்தப்பட்ட குற்றங்களுக்குப் பொது அபராதம் விதிக்கவும் முடியும்.
(3:11) தெருவோரச் சிறுவர்கள் மற்றும் வீட்டை விட்டு ஓடிவரும் குழந்தைகள்                    
இளம் வயதினருக்கான நீதிமுறை (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000
இளம் வயதினருக்கான நீதிமுறை (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000 என்பது இளம் வயதினர் அல்லது குழந்தைகளுக்கானது (18 வயது பூர்த்தியடையாத நபர்கள்).
இச்சட்டம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைப்படும் குழந்தைகளுக்கும் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களுக்குமானது.
பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகள்
பிரிவு 2 (டி) யின்படி, பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தை என்பது:
- தனக்கென்று ஒரு வீடு அல்லது வாழ வழி இல்லாத குழந்தை
- குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையைக் காப்பாற்ற முடியாத நிலையில் இருப்பது.
- அனாதையான குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் காணாமல் போன குழந்தைகள், வீட்டை விட்டு ஓடி வந்த குழந்தைகள் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தேடியும் கிடைக்காத பெற்றோர்களின் குழந்தை.
- கொடுமைக்கு அல்லது பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தை, அல்லது சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தை, அல்லது இதுபோன்று பயன்படுத்தப்படும் பலவீனமான நிலையில் இருக்கும் குழந்தைகள்.
- போதைப் பொருள் கடத்தல், அல்லது பழக்கப்படுத்தல் போன்றவற்றிற்கு ஆட்படக்கூடிய நிலையில் இருப்பவர்கள்.
- ஆயுதம் ஏந்திய சண்டைகளின்போது பாதிக்கப்பட்டக் குழந்தைகள், உள்நாட்டுச் சண்டைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் பேரிடர்கள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்கள்
குழந்தைகள் நலம் கவனிக்கும் குழு
சட்டப்படி ஒவ்வொரு மாநில அரசாங்கமும் மாவட்ட வாரியாக குழந்தைகள் நலத்தைக் கவனிக்கும் கமிட்டிகளை ஏற்படுத்த வேண்டும். இந்தக் குழுவினர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட புகார்கள், வழக்குகள், ஆகியவற்றை விசாரித்துத் தீர்க்கவும் குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு அவர்களுக்கான சிகிச்சைகள், மறுவாழ்வு தேவைப்படுபவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது, அவர்களது அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுகிறதா என்று கண்காணித்தல், குழந்தைகளுக்கான மனித உரிமைகள் மதிக்கப்படுகிறதா என்பதைக் கவனித்து அறிதல் போன்றவற்றை இந்தக் குழுவினர் செய்ய வேண்டும்.
குழுவினரிடம் குழந்தைகளை அழைத்து வருதல்
பாதிக்கப்பட்ட எந்தக் குழந்தையாக இருந்தாலும் அக்குழந்தையின் பாதுகாப்பிற்கும் பராமரிப்பிற்கும் தேவை இருந்தால் அக்குழந்தையை இந்தக் கமிட்டியைச் சேர்ந்த குழுவினரிடம் அழைத்து வரலாம். சிறுவர்களுக்கான காவல்துறைப் பிரிவு, அல்லது இதைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் காவல் அதிகாரி, பொது நல ஊழியர், குழந்தைகள் உதவி மையம் (தொலைபேசி மூலம் உதவும் அமைப்பு), மாநில அரசாங்கத்தால் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற சமூக நல இயக்கம் அல்லது சமூக் நல ஊழியர் ஆகியோருக்கு இந்த உரிமை உண்டு. சம்பந்தப்பட்ட குழந்தையும் நேரடியாக வரலாம்.
குழந்தையின் பிரச்சினைகள் அல்லது விவரங்களை விசாரித்து அறிந்த பின்னர் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்ப உத்தரவிடலாம். அதன் பிறகு நம்பிக்கைக்கு உரிய, சமூக நல ஊழியர் அல்லது இயக்கம் போன்றவர்கள் மூலம் குறிப்பிட்ட குழந்தையின் பிரச்சினைகள் பற்றிய விவரங்களை விரைவில் முழுவதும் விசாரிக்குமாறு கோரலாம்.
இந்த விசாரணையின் முடிவில், குழந்தைக்குக் குடும்பமோ அல்லது வலுவான வேறு ஆதரவோ இல்லை என்பது தெரியவந்தால், அந்தக் காப்பகத்திலேயே குழந்தை தொடர்ந்து இருக்கும்படி கமிட்டி பரிந்துரை செய்யலாம். குழந்தைக்கு உரிய ஆதரவு கிடைக்கும் வரை அல்லது 18 வயது வரை அங்கிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை இந்தக் கமிட்டிக்கு உள்ளது.
சட்டங்களை மீறும் குழந்தைகள்
சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயலைச் செய்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான குழந்தைகள் தொடர்பான பிரச்சினை இது.
சிறுவர்களுக்கான நீதிமன்ற வாரியம்
மாநில அரசு, சிறுவர்களுக்கான நீதிமன்ற வாரியத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும், நிறுவ வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரியங்கள் அமைக்கப்படலாம். குற்றச்சாட்டுக்கு ஆளான குழந்தைகளுக்கு ஜாமீன் வழங்குவது, குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு, வழக்குகளை விரைவில் முடிப்பது ஆகியவை இந்த வாரியங்களின் பணியாகும்.
போதைப் பொருட்கள் உட்கொள்ளல்
போதை மருந்துகள் மற்றும் மனநிலை பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொள்வது பற்றிய சட்டம் 1985
போதை தரக்கூடிய மருந்தை அல்லது மனநிலை பாதிப்பு பொருட்களைத் தயாரிப்பது, வைத்திருப்பது, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது, வாங்குவது, விற்பது போன்றவை சட்ட விரோதமானவை. போதை மருத்துக்கு அடிமையாக ஆக்குவது, போதை மருந்தைக் கடத்துவது போன்றவையும் தண்டனைக்கு உரிய குற்றங்கள்.
போதைப்பொருள் குற்றவாளிகள் வன்முறையில் ஈடுபடுவது அல்லது வன்முறையில் ஈடுபடுவதாக மிரட்டுவது, 18 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளை இதற்காகப் பயன்படுத்தல் ஆகியவையும் தண்டனைக்குரிய குற்றங்கள்.
கல்வி நிறுவனங்களில் அல்லது சமூக சேவை அமைப்புகளில் இக்குற்றத்தைச் செய்வது மிக அதிகமான தண்டனையைப் பெற்றுத்தரும்.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் போதை மருந்துகள் மற்றும் மனநிலை பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை கடத்தல் தடுப்பு சட்டம் 1988.
போதைப் பொருள் கடத்துவதற்குக் குழந்தைகளை பயன்படுத்துபவர்கள் குற்றங்கள் செய்ந்த் துணை செய்கிறவர்கள், இந்தச் சட்டத்தின்படி சதிச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று கருதப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
சிறுவர்களுக்கான நீதிமன்ற நடைமுறை (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000
இந்தச் சட்டத்தின் பிரிவு 2 (டி) யின்படி, போதை மருந்து பழக்கத்துக்கு உட்படும் சூழ்நிலையில் இருந்தாலோ போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய நிலையில் இருந்தாலோ அந்தக் குழந்தை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு உரியதாகக் கருதப்படும்.
குழந்தைகள் பிச்சையெடுப்பு
குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பலவந்தப்படுத்துவது, அல்லது பழக்கப்படுத்துவது ஆகியவை கீழ்க்காணும் சட்டங்களை மீறுவதாகக் கருதப்படும்
சிறுவர்களுக்கான சட்டம் 2000
குழந்தையைப் பிச்சையெடுக்கவைப்பது அல்லது அதற்காகப் பயன்படுத்துவது ஆகியவை தண்டனைக்கு உரிய கடுமையான குற்றங்களாகக கருதப்படும் (பிரிவு-24). வன்கொடுமைக்கும் சித்திரவதைக்கும் உள்ளாகி, அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பிச்சை எடுப்பது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் உரியவர்கள் என்று சிறுவர்களுக்கான சட்டம் கூறுகிறது.
இந்தியக் குற்றவியல் சட்டம்
மைனர் வயதுடைய குழந்தைகளைக் கடத்துவது, அங்கங்களை ஊனப்படுத்திப் பிச்சை எடுக்க வைப்பது ஆகியவை ஐபிசி பிரிவு 363 ணீ யின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகள் சட்டங்களை மீறும் குழந்தைகள்
குற்றங்களைப் புரியும் குழந்தைகளுக்குப் பெரியவர்களுக்குக் கொடுப்பது போன்ற கடுமையான தண்டனைகள் கொடுப்பதில்லை அவர்கள் 'சட்ட முறைகளுடன் ஒத்துப்போகாதவர்கள்' என்றுதான் கருதப்படுவார்களே தவிர சிறுவர்களுக்கான (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000-ன்படி குற்றவாளிகள் என்று கருதப்பட மாட்டார்கள்.
இந்தச் சட்டத்தின்படி, குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஜாமீன் பெற உரிமை உண்டு. இவர்களுக்கு ஜாமீன் கொடுப்பது சட்டப்படி கட்டாயமும் ஆகும். ஜாமீன் கொடுக்கப்பட்டால், அந்தக் குழந்தையின் நலன் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிந்தால், ஜாமீன் கொடுக்கப்படாது. இந்நிலையிலும்கூட, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார்கள். இதற்குப் பதிலாக, அவர்களைச் சீர்திருத்தும் நோக்குடன்தான் நீதிமன்றத்தின் அணுகுமுறை இருக்கும். சில கட்டுப்பாடுகளுடன் விடுவிப்பது, புத்திமதிகள், ஆலோசனை அல்லது கடிந்துரைத்தல், அல்லது அவர்களுக்காக என்று இருக்கும் சிறப்புச் சீர்த்திருத்த இல்லங்களுக்கு அனுப்பப்படுதல் ஆகிய நடவடிக்கைகளே எடுக்கப்படும்.
(4) குழந்தைகளைப் பாதுகாக்க ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும்?               
குழந்தைகள் எந்த இடமாக இருந்தாலும் அந்த இடங்களில், அலட்சியம் செய்யப்படுதல், வன்கொடுமைக்கு உள்ளாதல், வன்முறைக்கு உள்ளாதல் தவறாகப் பயன்படுதல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்திலும் சில விதங்களில் துன்புறுத்தப்படலாம். வீடுகளிலும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகலாம். உங்களது வகு ப்பில் படிக்கும் குழந்தை, பள்ளிக்கு வெளியே வன்முறை / துன்புறுத்தப்படல் / சுரண்டப்படுதல் போன்றவற்றிற்கு ஆளாகி இருக்கலாம். நீங்கள் அதை அதை அலட்சியம் செய்யக் கூடாது. சொல்லப்போனால், அவர்களுக்கு நீங்கள் உதவியாக வேண்டும். இது எப்போது உங்களால் முடியும் என்றால், முதலில் இம்மாதிரியான பிரச்சினையால் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அடையாளம் காண முடிய வேண்டும். அதைப் புரிந்துகொள்ளத் தேவையான நேரத்தை செலவிட வேண்டும். அவற்றைத் தீர்க்க என்ன செய்யலாம் என்பது பற்றிய வழிமுறை குறித்துச் சிந்திக்க வேண்டும்.
குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய உங்களது கடமை என்பது, பள்ளியை விட்டு வெளியில் வரும்வரைதான் என்று நினைக்காதீர்கள். பள்ளி வாழ்க்கையைப் பெற முடியாத குழந்தையின் வாழ்க்கையில் உங்களுடைய தலையீடு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதற்காக உங்களுடைய மனதைத் தயார் நிலையில் வைக்க வேண்டியதுதான். அவர்களுடைய பிரச்சினையைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ளவும் அவற்றைத் தீர்ப்பதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி யோசிக்கவும் வேண்டும். நீங்கள் மானசீகமாக முடிவு செய்தால், அந்தப் பிரச்சினை தீரத் தேவையான ஏற்பாடுகள், வழிமுறைகள் ஆகியவற்றை உருவாக்க முடியும். இதனால், உங்களால் செய்ய முடியும் என்று கனவிலும் நீங்கள் நினைக்காத காரியங்களைச் சாதிக்க முடியும்.
(4:1) நீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியரா?                  
கீழ்க்கண்டவாறு நடந்து கொண்டால், அவ்வாறான ஆசிரியராக உங்களால் ஆக முடியும்.
- குழந்தைகளுக்கான உரிமைகளும் மனித உரிமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது போன்றப் புரிதலை, நீங்கள் இருக்கும் சமுதாயத்தில் உருவாக்குங்கள்.
- உங்களுடைய வகுப்புகள் நடக்கும்போது அதில் இருப்பது மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதைக் குழந்தைகள் உணருமாறு செய்யுங்கள்.
- புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் திறந்த மனதுடன் இருங்கள்
- குழந்தைக்கு, நண்பனாகவும் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருங்கள்.
- சுவையாகப் பாடம் எடுங்கள். மாணவர்களுக்குப் பயனுள்ள பல தகவல்களைச் சொல்லுங்கள்
- நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், குழந்தைகள் கேள்விகள், சந்தேகங்கள் கேட்பதற்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
- துன்புறுத்தப்படுவது, உதாசீனப்படுத்தபடுவது, கற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருப்பது போன்ற பல குறைபாடுகளை அறிந்து உணரப் பழகுங்கள்.
- குழந்தைகள் தங்களது அபிப்பிராயங்கள், கவலைகள், பயன்கள் சோகங்கள் போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களோடு பழகுங்கள். அவர்களோடு சாதாரண விஷயங்களைப் பற்றியும் கலந்து பேசுங்கள்.
- நன்றாக கவனிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், குழந்தைகள் பள்ளியிலும் தங்களது வீடுகளிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் விவாதியுங்கள்.
- மாணவ மாணவியரின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய விஷயங்களைப் புரிந்துகொள்ளச் செய்யுங்கள்.
- இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், பயன் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கலந்துகொள்ள அவர்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளச் செய்யுங்கள்.
- பள்ளியின் நிர்வாகத்தினருடன், மாணவர்களைக் கலந்துரையாடச் செய்யுங்கள் அதற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள்.
- பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் குழந்தைகளுக்கு என்று இருக்கும் உரிமைகளைப் பற்றி விவாதம் ஏற்பாடு செய்யுங்கள்.
- உடல் ரீதியான தண்டனைகளைத் தரக் கூடாது என்று தீர்மானியுங்கள். எதுவாக இருந்தாலும், பேசிப் புரியவைப்பது, ஆற்றுப்படுத்தல் போன்ற முறைகளைக் கையாண்டு குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு ஏற்படுவதன் அவசியத்தைப் புரியவையுங்கள்.
- பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள். சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள், பாரபட்சம் காட்டப்படும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகிய குழந்தைகளோடு நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
- வேலை செய்யும் சிறுவர்களைப் பற்றி எதிர்மறையாகச் கூறப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள். அதே போல, தெருவோரச் சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள், கடத்தல்கள், இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறைகள், குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படல், சட்டத்துக்கு எதிரான செயல்களைச் செய்யும் குழந்தைகள் போன்ற பாதுகாப்புத் தேவைப்படும் பல குழந்தைகள் எதிர்மறையான உதாரணங்களாக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்.
- உங்களது வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
- ஜனநாயக முறையில் செயல்படும் அதே நேரத்தில் கட்டமைப்பு இல்லாத வகையில் செயல்படாதிருங்கள்.
- குழந்தைகளைப் பள்ளியில் மட்டுமின்றி, அவர்களது சமூகங்களிலும் துன்புறுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- அப்படி நிகழக்கூடிய சூழ்நிலை எழுந்தால், காவல்துறையை அழைக்கவோ/சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவோ தயங்காதீர்கள்.
- குழந்தைகள் தங்களது கருத்துகளை, அவர்கள் சார்ந்த சமூகங்களின் பெரியவர்களிடம் எடுத்துக்கூறுமாறு ஊக்கப்படுத்துங்கள்.
- நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யயும் பொறுப்பைக் குழந்தைகளுக்குத் தாருங்கள் அவர்களுக்குப் பொறுப்புகளைத் தந்து அவற்றை நிறைவேற்ற வழிகாட்டுங்கள்.
- குழந்தைகளைப் பக்கத்தில் இருக்கும் முக்கிய இடங்கள், மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றிற்குக் கூட்டிச் செல்லுங்கள்.
- குழந்தைகளைக் கலந்துரையாடல்கள்/விவாதங்கள்/கேள்விபதில் நிகழ்ச்சிகள் மற்றுமுள்ள அர்த்தமுள்ளப் பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்துங்கள்.
- புது விதமான முறைகளில், பெண் குழந்தைகள் கல்வி கற்பது, வகுப்பறைகளில் மனம் ஒன்றிக் கலந்துகொள்வது போன்றவற்றை உறுதிசெய்யுங்கள்.
- பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்தும் பெண்கள், வகுப்புக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் பெண்களைப் பற்றி அறிந்து அவ்வாறு அவர்கள் தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் இருக்க வழி செய்யுங்கள்.
- குழந்தைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க அனைத்து ஆசிரியர்களும் முனைந்து உதவி செய்தால் நிச்சயம் முடியும்.
- உங்களது கவனிக்கும் திறன்தான் மிகவும் முக்கியமானது. கூர்ந்து கவனித்தால்தான் உங்கள் வகுப்பில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் சரியான முறையில் மதிப்பீடு செய்ய முடியும். எதாவது பிரச்சினை இருப்பதை உங்களால் கண்டறிய முடிந்தால், அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து அறிவதுதான் உங்களது அடுத்த கட்டப் பணியாக இருக்க வேண்டும்.
இதற்கு அடுத்தாக, பிரச்சினை இருக்கும் குழந்தை குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்கள் மூலமாக எந்த விதத்திலாவது நெருக்குதலுக்கு ஆளாகி இருக்கிறதா என்று கேள்வியைக் கேட்டுக்கொண்டு, அதற்கான விடை தேடுங்கள்.
குழந்தை த்ன் பிரச்சினைகளை எவ்வகையிலாவது வெளிப்படுத்தச் செய்யுங்கள். எழுத்து மூலமோ, வர்ணம் தீட்டுதல், ஓவியம் தீட்டுதல், அல்லது கதை எழுதுதல் ஆகியவற்றின் மூலம் குழந்தை தனது பிரச்சினைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள். உங்களிடமோ பள்ளி மனநல ஆலோசகரிடமோ நண்பரிடமோ சமூக சேவகர் போன்றவரிடமோ பேசச் செய்யுங்கள்.
(4:2) ஆசிரியர் என்ற வகையில், எச்ஐவி தொற்று இருப்பது அல்லது பாதிப்பு உண்டாகி இருந்தால் அவர்களது உரிமைகள் மீறப்படாமல் இருக்க என்ன செய்வீர்கள்?                        
குழந்தைகளின் வயது, மனமுதிர்ச்சி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, பாலியல் கல்வியைப் பயிற்று வைக்க முடியுமா என்று பாருங்கள்.
குழந்தைகளிடத்தில் எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய தகவல்களைக் கூறுங்கள். இந்த நோய் தனி நபரை எப்படிப் பாதிக்கிறது மற்றும் பரவுகிறது என்பதைப் பற்றித் தெரிவியுங்கள். இவை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள்.
வகுப்பறையில், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயினால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் எந்த விதத்திலும் முத்திரை குத்தப்படாமல், தனிமைப்படுத்தப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவது, வலுப்படுத்துவது ஆகியவை பல நிலைகளில் இருந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ள ஒரு செயலாகும். இதற்காக, பேச்சுவார்த்தை, கூட்டு சேர்வது, ஒருங்கிணைப்பு, அதுவும் இரு தரப்பினருக்கும் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொண்டு இதைச் செய்வது, போன்றவை அவசியமாகும்.
இவற்றைச் செய்யும்போது மரபு ரீதியான செயல்பாடுகள், அணுகுமுறைகள் போன்றவை அவசியம். அடிப்படைத் தேவைகளான சேவைகளைச் செய்து தருவது, அவற்றைக் கண்காணிப்பது போன்றவை மட்டுமின்றி அவர்களது முன்னேற்றங்களுக்காகச் செயல்படும் தனி நபர்களை அடையாளம் கண்டுகொள்வது ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.
அரசாங்கம் குழந்தைகளுக்காக வகுத்துள்ள திட்டங்கள் என்ன, அவை மூலம் என்ன பயன்கள் என்பதை ஆசிரியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் இத்தகைய திட்டங்களால் பயன்பெறக்கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண வேண்டும். இம்மாதிரியான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் பட்டியலை உங்களது பகுதியில் உள்ள வட்டார, தாலுகா, மண்டல பஞ்சாயத்து உறுப்பினர் அல்லது பிடி பிஓ ஆகியவர்களில் யாரிடம் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். நீங்கள் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், கீழ்க்காணும் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பது அவசியம்.
- காவல்துறை
- உங்களது பஞ்சாயத்து / முனிசிபாலிடி, நகராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்.
- அங்கன்வாடி ஊழியர்கள்
- ஏஎன்எம்எஸ்
- வட்டார / தாலுகா / மண்டல மற்றும் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்கள்.
- வட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) அல்லது வட்டார வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அதிகாரி
- மாவட்ட நீதிபதி / மாவட்ட ஆட்சித்துறைத்தலைவர்
- உங்களது பகுதிக்கு அருகில் உள்ள குழந்தைகள் நலக் கமிட்டி அலுவலகம் அல்லது அலுவலர்.
- உங்களது பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான உதவிக் தொலைபேசித் தொடர்பகம் அல்லது இயக்கம்.
4.3 பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளை அடையாளம் காணும் வழிகள்.                  
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரிடம் காணப்படும் அடையாளங்கள்

சிறுமிகள்
6-11 வயதுவரை
12-17 வயதுவரை

மற்ற குழந்தைகளுடன் பழகும்போது நடத்தையில் பாலுணர்ச்சி வெளிப்படையாகத் தெரிவது.
தன்னைவிட வயது குறைவான குழந்தைகளுடன் பாலியல் நோக்கத்துடன் பழகுதல், அவர்களைத் தன் விருப்பத்துக்கு இணங்கவைக்க முயலுதல்

தான் அனுபவித்த பாலியல் வன்கொடுமையை விவரித்தல்.
நடத்தையில் பாலுணர்வு வெளிப்படுதல் அல்லது பாலுணர்வு பற்றிய விஷயங்களை முழுவதுமாகத் தவிர்த்தல்

அந்தரங்க உறுப்புகளைப் பற்றி அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டுவது
உணவு உட்கொள்வதில் சிக்கல்கள்

தன்னைவிட வயதில் மூத்தவர்களைப் பாலியல் ரீதியாக அடையாளம் காணுதல் மற்றும் உறவு முறை குறிப்பிடுதல்
குற்ற உணர்வு வெட்கம், அவமானம் ஆகிய உணர்வுகளிடமிருந்து தன்னை விலக்கிவைத்துக்கொள்ளும் முயற்சிகள்

திடீரென்று பெண்கள், ஆண்கள் அல்லது குறிப்பிட்ட இடங்கள் குறித்த பயத்தை அல்லது அச்சத்தை வெளிப்படுத்தல்
வீட்டை விட்டு ஓடிவிடுதல்

பெரியவர்களின் பாலியல் நடத்தைகளைப் பற்றி வயதுக்கு மீறிய விஷயங்களைத் தெரிந்து வைத்திருத்தல்


தூக்கத்தில் பிரச்சினைகள், மாற்றங்கள் கெட்ட கனவுகள் மற்றும் பயமுறுத்தும் கனவுகளால் பீதியடைதல்

சிறுவர்கள்
6-11 வயதுவரை
12-17 வயதுவரை

மற்ற குழந்தைகளுடன் பழகும்போது நடத்தையில் பாலுணர்ச்சி வெளிப்படையாகத் தெரிவது.
தன்னைவிட வயது குறைவான குழந்தைகளுடன் பாலியல் நோக்கத்துடன் பழகுதல், அவர்களைத் தன் விருப்பத்துக்கு இணங்கவைக்க முயலுதல்

ஆண்கள், பெண்கள் அல்லது குறிப்பிட்ட இடங்களைக் குறித்து திடீரென்று பயப்படுதல்
திடீரென்று குழந்தைத்தனமாக நடந்துகொள்ளுதல்

தூக்கத்தில் பிரச்சினைகள், கெட்ட கனவுகள் மற்றும் பயமுறுத்தும் கனவுகளால் பீதியடைதல்.
குறிப்பிட்ட நபர்களைப் போல நடந்துகொள்ளுதல், வேண்டுமென்றே ஆபத்தான காரியங்களில் ஈடுபடுதல்.     

திடீரென்று முரட்டுத்தனமாக நடந்துகொள்வது அல்லது குறிப்பிட்ட நபர் போல நடித்துக்கொள்ளுவது.
குற்றஉணர்வு, வெட்கம், அவமானம் ஆகிய உணர்வுகளிடமிருந்து தன்னை விலக்கிவைத்துக்கொள்ளும் முயற்சிகள்

ஏற்கனவே பிடித்த விஷயங்கள் பிடிக்காமல்போவது


குழந்தைதனமான நடத்தைகளை வெளிப்படுதல்

முன்னெச்சரிக்கை: மேலே குறிப்பிட்ட அடையாளங்கள், அல்லது அறிகுறிகள் ஆகியன ஒரு குழந்தை பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருக்கிறது, அதன் காரணம், பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என்பதைத் தெரியப்படுத்தும் அறிகுறிகள்தாம். இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அறிகுறிகள் ஒரு குழந்தையிடம் தென்பட்டால், அக்குழந்தையின் மேல் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது என்று முடிவுக்கு வரக் கூடாது. பல அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் ஆகியன இருந்தால் மட்டுமே, இம்மாதிரியான முடிவுக்கு வர வேண்டும். இதில் உங்களது உள்ளுணர்வு கூறுவதை மதியுங்கள்.
ஆதாரம்: யுனிசெஃப், கற்றுக்கொள்வதைப் பற்றி ஆசிரியரின் உரை ((http://www.unicef.org/teachers/ Last revised April, 1999) - ஐ. லேத்: குழந்தைகள் பாதுகாப்பு)
குழந்தைகள் எப்போதுமே, பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். கீழ்ப்படிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுத்தான் வளர்க்கப்படுகிறார்கள் பெரியவர்களின் நடத்தைகள் பிடிக்காத போதும், இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்ற படம் படிகிறது. தங்களுக்குப் பிடிக்காத அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாத வகையில், வயதில் மூத்தவர்கள் நடந்துகொள்ளும்போது அதை மறுப்பதற்குக் குழந்தைகள் மறந்துவிடுவார்கள். இத்தகைய சூழ்நிலையில், முடியாது என்று சொல்லக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
(4:4) உடலில் குறைபாடு உள்ள குழந்தைகளிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்த பத்துக் கட்டளைகள்    
(1) உடலில் குறைபாடு உள்ள குழந்தைகளை, 'முடியாதவன்' 'முடங்கி இருப்பவன்' 'ஊனமுற்றவன்' என்று எதிர்மறையாகக் குறிப்பிடுவதற்கு பதில் உடலில் குறைபாடு உள்ள, அல்லது நடமாடுவதில் குறைபாடு உள்ள குழந்தை என்று கூறலாம். 'சக்கர நாற்காலியில் முடங்கியிருப்பவர்' என்பதற்குப் பதிலாக, சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் குழந்தை' என்று குறிப்பிடலாம். 'செவிடு, ஊமை' என்பதற்குப் பதிலாக, 'கேட்பதிலும் பேசுவதிலும் பிரச்சினை உள்ள குழந்தை' என்று கூறலாம் மன வளர்ச்சி குன்றியவன் என்பதற்குப் பதிலாக மூளைச் செயல் பாட்டில் குறைபாடு உள்ள குழந்தை என்று கூறலாம்.
(2) குறைபாடுகள் உள்ள குழந்தைகளை, குறைபாடுகள் ஏதும் இல்லாத குழந்தைகளோடு ஒன்றிணைத்து சமமான நிலையில் வைத்துக் குறிப்பிடுங்கள். உதாரணமாக உடல் குறைபாடு உள்ள ஒரு மாணவன், தன்னைவிட வயது குறைவான, குறைபாடுகள் எதுவும் இல்லாத குழந்தைக்குப் பாடங்கள் சொல்லிக்கொடுக்க முடியும், உடல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் அவ்வாறான குறைபாடுகள் இல்லாத குழந்தைகளுடன், எந்தெந்த விதங்களில் பழக முடியுமோ, அத்தனை விதங்களிலும் பழக வேண்டும்.
(3) குறைபாடுகள் உள்ள குழந்தைகளை, தங்களது எண்ணங்களை, உணர்வுகளைச் சுதந்திரமான முறையில் வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுங்கள் கல்வி மற்றும் பள்ளி சம்பந்தமான திட்டங்கள், செயல்பாடுகளில் குறைபாடுள்ள குழந்தைகளுடன் அவ்வாறான குறைபாடுகள் குழந்தைகளுடன் சேர்த்துப் பணியாற்ற அனுமதியுங்கள்.
(4) குழந்தைகளை நல்லமுறையில் கவனித்து, அவர்களிடம் உள்ள குறைபாடுகளை கவனித்து அறிந்துகொள்ளுங்கள். குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதும் இளம் வயதில் கல்வி கற்பதின் ஒரு பகுதிதான். குறைபாடுகளை எந்த அளவுக்கு விரைவாகக் கண்டுபிடிக்கிறோமோ அந்த அளவுக்கு விரைவாகவும் பலனுள்ள வகையிலும் சிகிச்சை அளிக்கவும் குறைபாடுகளின் கடுமையைக் குறைக்கவும் முடியும்.
(5) குறைபாடுகளைக் கண்டுபிடிக்க முடிந்த பின்னர், தகுந்த சிகிச்சை, பரிசோதனைகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
(6) குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பயன்படுத்துவதற்கு, புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில், பாடங்கள் கற்றுக்கொள்ளப் பயன்படும் உபகரணங்கள் மற்றும் வகுப்பறைகள் ஆகியவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்யுங்கள். கண்பார்வை குறைபாடுள்ள குழந்தைக்கு, பெரிய எழுத்தில் எழுதிப் பாடங்களைக் கற்பிப்பது, முன்னால் உட்காரவைப்பது போன்றவற்றைச் செய்யலாம். நடமாடுவதில் பிரச்சினை உள்ள குழந்தை எளிதாக நுழையும் விதத்தில் வகுப்பறையை மாற்றி அமையுங்கள். குறைபாடுகள் குறித்த நேர்மறை எண்ணங்களை மாணவர்கள் மனத்தில் உருவாக்கும் விதத்தில் பாட முறைகள், விளையாட்டு, மற்றும் இதர நடவடிக்கைகளில் மாற்றம் செய்யுங்கள்.
(7) குறைபாடுகள் உள்ள குழந்தைக்கு எந்த வகையான சிறப்பான தனித் தேவைகள் இருக்கும் என்பது பற்றி, அவர்களின் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்குத் தெரியப்படுத்துங்கள். பெற்றோர்களிடத்தில் தனியாகவும் பொது நிகழ்ச்சிகளிலும் இவற்றைப் பற்றி உரையாடுங்கள்.
(8) தங்கள் குழந்தையின் குறைபாட்டால் விரக்தி அடைந்திருக்கும் பெற்றோர்களிடத்தில், அத்தகைய குழந்தைகளை எப்படிச் சரியான விதத்தில் கையாள முடியும் என்பது குறித்த எளிய வழிமுறைகளைக் கற்றுக்கொடுங்கள். பொறுமையைக் கடைப்பிடிக்கவும், கோபத்தால் அக்குழந்தைகளைத் துன்புறுத்துவதைத் தவிர்க்கவும் அவர்களுக்கு உதவுங்கள்.
(9) உடல் குறைபாடுகள் உள்ள குழந்தையின் உடன் பிறந்தவர்களும் இதர குடும்ப உறுப்பினர்களும் எப்படி நடந்துகொண்டால் பெற்றோர்களின் விரக்தி, மன வேதனை ஆகியவற்றைக் குறைக்கலாம் என்பது பற்றி வழிகாட்டுங்கள்.
(10) உடல் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்களைப் பள்ளி சம்பந்தப்பட்ட செயல்பாடுகள், திட்டங்களை முடிவு செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுத்துங்கள்.
ஆதாரம் யுனிசெஃப், கற்றுக்கொள்ளும் முறைகளைப் பற்றிய ஒரு ஆசிரியரின் உரை.
(4:5) குழந்தைகளின் கௌரவத்தை மதிக்கும்படியான ஆக்கபூர்வமான கட்டுப்பாடுகளை உருவாக்கி ஊக்குவித்தல்         
- குழந்தையின் சுய கௌரவத்தை மதியுங்கள். - சமூகத்தில் கலந்து பழகும் நடத்தை முறைகள், சுய கட்டுப்பாடுகள், மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும். - குழந்தைகள் கூடிய வரையிலும் அதிகமான விஷயங்களில் பங்கெடுத்துக்கொள்ளச் செய்யுங்கள். - குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த தேவைகளை மதியுங்கள். - குழந்தையின் ஊக்கம் கொண்ட இயல்பு, வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறை ஆகியவற்றை மதியுங்கள். - அவர்களுக்கு நியாயம், நீதி ஆகியவை கிடைக்கச் செய்யுங்கள். - ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துங்கள்.
ஆதாரம்: உடல் ரீதியான தண்டனையை ஒழிப்பது: குழந்தைகளிடத்தில் ஆக்கபூர்வமான முறையில் கட்டுப்பட்டை வளர்ப்பதற்கான வழிமுறைகள் - யுனெஸ்கோ வெளியீடு.
(4:6) பள்ளியின் சூழ்நிலையை மாற்றுவதுதான் உங்கள் முன் இருக்கும் மிகப் பெரிய சவால்                        
உங்கள் பள்ளி குழந்தைகளுடன் நட்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பள்ளியா? கீழ்க்கண்ட முறைகளில் செயல்பட்டால் அப்படி ஆக முடியும்.
- 'பிரம்படியைத் தவிர்ப்போம் பிள்ளைகளைக் காப்போம்' என்பதுதான் குழந்தைகள், பெற்றோர்கள், மற்றும் சமூகத்திற்கான கோஷமாக இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர் இருக்க வேண்டும். உளவியல் பிரச்சினைகள் மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினைகள் இருக்கும் அறிகுறிகளுடன் காணப்படும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர்கள் காப்பாளர்கள் ஆகியோருக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும்.
- பள்ளியில் சமூக சேவகர் ஒருவரும் இருக்க வேண்டும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நண்பர்கள், குடும்பம் மற்றும் சமூகம் ஆகியோர்கள் ஆக்கபூர்வமாகச் செயலாற்றுவதற்கான தூண்டுகோலாக இவர்கள் செயல்பட வேண்டும்.
- பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் ஒவ்வொரு பள்ளியின் முக்கியமான அங்கமாக இருக்க வேண்டும். பெ.ஆ. சங்கங்களின் கூட்டங்கள். ஆசிரியர்கள் பெற்றோர்களிடையே, பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்து வதற்கான பொது மேடையாக இருக்க வேண்டும். இந்தக் கூட்டங்களில் குழந்தைகள் வகுப்புகளில் எப்படிப் படிக்கிறார்கள் என்பது மட்டுமின்றி, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி, முன்னேற்றத்தைப் பற்றியும் பயனுள்ள விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.
- ஆசிரியர்கள் பல்வேறு விதமான பயிற்சிகளைப் பெற அனுப்பி வைக்கப்படுவதுபோல, குழந்தைகளின் உரிமைகள் குறித்த நடவடிக்கைகள் பற்றிய பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
- பள்ளியில் குழந்தைகளைப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றிக் குழந்தைகள் முறையிடவும் விவாதிக்கவும் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
- பள்ளிகளில் வாழ்க்கைத் திறன் கல்வித் திட்டத்தில் பாலியல் கல்வி என்பது முக்கியமான பகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும்.
- பள்ளி வளாகங்களுக்கு உள்ளேயே பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல குடிநீர் மற்றும் கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். பெண்களுக்கும் பையன்களுக்கும் தனித்தனியான கழிவறைகள் இருக்க வேண்டும்.
- சிறு அறைகள் அல்லது கூடாரங்கள் போன்றவற்றில் நடத்தப்படும் சிறு பள்ளிகளில் தண்ணீர் அருந்துவது, இயற்கை உபாதைகளுக்கு என்று போதுமான நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.
- உடல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பள்ளியின் கட்டட அமைப்பு, கற்பிக்க்கும் உபகரணங்கள்மாகியவை இருப்பது அந்தப் பள்ளி உடல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறைப்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும். உங்கள் பள்ளியில் கூடியவரையில் இவை அனைத்தும் இருப்பதை உறுதிசெய்யுங்கள். இத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்ய, உள்ளூரில் உதவிகளைப் பெறலாம்.
- பள்ளிகளுக்கு உள்ளேயும், வெளியே உள்ள சுற்றுப்புறங்களிலும் எந்த விதமான வியாபாரத்தையும் அனுமதிக்கக் கூடாது.
- ஆசிரியர்கள், தங்களது வீடுகளில் வீட்டு வேலை செய்யக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற நெறிமுறையைப் பள்ளிகள் கறாராகக் கடைபிடிக்க வேண்டும். பள்ளியில் உள்ள இந்தக் கண்டிப்பு சமுதாயத்திற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
- பள்ளி வளாகத்தினுள் போதைப் பொருள் உபயோகமோ பிற தவறான பழக்கங்களோ இருக்கின்றனவா என்பதைக் கண்காணிக்கக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். மிக அவசியமான இந்த நடைமுறையை ஒவ்வொரு பள்ளியும் பின்பற்ற வேண்டும்.
- பள்ளி வளாகத்துக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்ற பிற அலுவலர்கள் ஆகியோரை விசாரித்துத் தண்டிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு அவற்றின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- பள்ளியில் பாலினம், உடல் குறைபாடுகள், சாதி, மதம் அல்லது எச்ஐவி/எய்ட்ஸ் போன்றவற்றின் அடிப்படையில் குழந்தைகளைப் பாரபட்சதோடு நடத்தினால் அவற்றை எப்படி எதிர்கொள்வது, என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள், சட்டதிட்டங்கள், வழிமுறைகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.
- பள்ளிகளில், குழந்தைகள் பாதுகாப்புக்கான கண்காணிப்புக் குழுவை அல்லது பிரிவை ஏற்படுத்த வேண்டும். இந்தக் குழுவில், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பஞ்சாயத்து/முனிசிபாலிட்டி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் அங்கத்தினர்களாக இருக்க வேண்டும். இந்தக் குழுவானது, பாதுகாப்பு மற்றும் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் எந்த விதத்திலாவது துன்புறுத்தப்பட்டால் காவல்துறையினரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமோ தெரிவிக்கவோ புகார் கொடுக்கவோ வேண்டும்.
(4:7) குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடிய அர்த்தமுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்:          
- உரையாடல்கள்/விவாதங்கள்/வினாடிவினா நிகழ்ச்சிகள்
- கதை சொல்வது
- வர்ணம் தீட்டுவது, உள்ளூர் கலை (அந்த வட்டாரத்திற்கே உரியகலை)
- சிறிய அல்லது பெரிய நாடகங்கள்
- மண் பொம்மைகள், மற்றும் பிற வழிகளில் பொருள்களை உருவாக்குதல்
- பொம்மைகள் செய்தல்
- முகத்தை வரைதல்
- காகிதங்களில் பல உருவங்களை உருவாக்குதல்
- புகைப்படக்கலை
- சுற்றுலா மற்றும் வெளியூர் பயணம்
- விளையாட்டுக்கள் (அரங்கத்தினுள்ளும் மைதானத்திலும்)
- பல்வேறு விஷயங்களைப் பற்றிய கண்காட்சிகள்
“நல்ல ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டியிருக்கும் ஆனால் தரமற்ற ஆசிரியர்களால் ஏற்படும் நஷ்டம் அதைவிட மிக அதிகம்” - பாப் டால்பெர்ட்