இந்தியாவின் மூலிகை வளம் முழுக்க வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைககள் முற்றிலும் அழியும்நிலை உருவாகி உள்ளது.
உலகில், இந்தியா உட்பட 12 நாடுகளில் மட்டுமே அடர்ந்த வகை காடுகள் உள்ளன. இந்தியாவில் மேற்குதொடர்ச்சி மலை, இமயமலை, அந்தமான் நிகோபார் தீவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளில் 45 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. காடுகளில் 34 சதவீதம் மரங்கள். மீதமுள்ள 66 சதவீதம் செடிகள், கொடிகள், புற்கள், மூலிகை தாவரங்களாக உள்ளன. உலக அளவில், மூலிகை ஏற்றுமதியில் சீனா முதலிடமும், இந்தியா இரண்டாம் இடமும் பெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மூலிகைகளில் 15 சதவீதம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. மீதம் உள்ள மூலிகைகள் வனங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படுகிறது.
இந்த மூலிகைகளில் இருந்து கேன்சர், எய்ட்ஸ் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கின்றனர். ஒரு கிலோ சந்தன மரத்தை விற்றாலே 600 ரூபாய் மட்டும் கிடைக்கும். ஆனால், ஒரு கிலோ மூலிகைகள் 15 ஆயிரம் ரூபாய் வரை வெளிநாடுகளில் விலை போகிறது. மூலிகைகளை பேக் செய்து கடத்துவது மிகவும் எளிது. எனவே, இந்திய காடுகளில் உள்ள மூலிகை வளம் வெளிநாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகை இனங்கள் முற்றிலும் இந்தியாவில் இருந்து அழிந்து போய் விடும், என சுவிட்சர்லாந்தை சேர்ந்த சர்வதேச வனவியல் அறிஞர் ரெவன் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் அழிந்து வரும் வனவிலங்குகளையும், மரங்களையும் பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. ஆனால், மூலிகைகளை பாதுகாக்க சட்டங்கள் இல்லை. எனவே, கடத்தல்காரர்கள் தற்போது மூலிகைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்து குவிக்கின்றனர். இதை தடுத்து, மூலிகைகளை காப்பாற்ற, தனி சட்ட வரைமுறை கொண்டு வர வேண்டும். அதன்பிறகு மூலிகைகள் பாதுகாக்கப்படுவதுடன், விளைச்சலை பெருக்கி மருத்துவத்துறையிலும் பயன்படுத்த முடியும்,
அழிந்துவரும் அரிய வகை மூலிகைகள்: புதங்கலி, மரமஞ்சள், ஒருமுக ருத்ராட்சம், அம்ரிதபாலா, சர்க்கரைக்கொல்லி, ஜானக்யா அரியல்பத்ரா, அரக்கபச்சை, ஸ்ரைக்கோபோஸ் கைலனிக்கா, க்னோகர்பஸ் மேக்னோகர்பா, கொலமாவு, கிங்ஜியோடென்ட்ரோம், பினோடெர்ம், சிறுபூழை, சங்குபுஷ்பம், உகில், குண்டுமணி, கற்றாலை, முடக்கத்தான், பெரண்டை உட்பட ஏராளமான அரியவகை மூலிகைகள் வேகமாக அழிந்து வருகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக