அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

குழந்தைகளின் உரிமைகள்

ஆசிரியர் அடித்து மாணவன் மயங்கி விழுந்தான்; ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து மாணவன் தற்கொலை என்பது போன்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாகும்போது, அவை பெரிதாக நம் கவனத்தைக் கவர்வதில்லை. குழந்தைகள்மீதான வன்முறை என்று விவாதிக்கப்படும்போது, மேலே குறிப்பிட்ட செய்திகள் லேசாக நம் ஞாபகத்தில் நிழலாடுகின்றன. இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று நம் நினைவிலிருந்து இவற்றை உதறிவிட்டுச் சென்றுவிடுகிறோம். ஆனால், உண்மையில் குழந்தைகள்மீது நிகழ்த்தப்படும் வன்முறையின் அளவும் தாக்கமும் நாம் நினைப்பதைவிடப் பெரியவை. வளர்ந்த நாடுகளில் அதற்கான சட்டங்கள் இருக்கும் நிலையில், இந்தியா இப்போதுதான் விழித்துக்கொண்டிருக்கிறது. குழந்தைகள்மீதான வன்முறை என்பது ஓர் உலகளாவிய போக்கு. இந்த வன்முறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி நம்மிடம் தகவல்கள் ஏதும் இல்லை. இந்தியா மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளிலும் அதே நிலைதான். இந்தியாவில் மாறிவரும் பொருளாதார - சமூகச் சூழல் குழந்தைகளை மேலும் பாதுகாப்பற்ற சூழழுக்குத் தள்ளுகிறது. இத்தகைய வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் மனங்களில் ஏற்படும் காயம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆறுவதில்லை. அவர்களது ஆளுமையை அது வெகுவாகப் பாதிக்கிறது.
எது குழந்தைகள்மீதான வன்முறை என்னும் வரையறையானது தேசம், கலாச்சாரம், சமூகம் ஆகியவற்றிற்கேற்ப மாறக்கூடியது. பொதுவாகக் குழந்தைகள் மீதான வன்முறையை உடல் ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை, உணர்வு ரீதியான வன்முறை, புறக்கணிப்பு என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இவற்றில் உடல் ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை ஆகியவை குறித்த கவனம் சமீப காலமாக எழுந்திருந்தாலும், உணர்வு ரீதியான வன்முறை பற்றியும் புறக்கணிப்புப் பற்றியும் யாரும் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. குழந்தைகளை மிகக் கடுமையாகத் திட்டுவது, இருட்டு அறையில் அடைத்துவைப்பது, நீண்ட நேரம் எதிலாவது கட்டிவைப்பது, மட்டம் தட்டுவது, ஒரு குழந்தையோடு ஒப்பிட்டு அலட்சியம் செய்தல், உருப்படாதவள்/படாதவன் என மற்றொருவரிடம் சொல்வது, பொது இடத்தில் அவமானப்படுத்துவது, குழந்தையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடத்துவது ஆகியவற்றை உணர்வு ரீதியான வன்முறை என்று வகைப்படுத்தலாம். புறக்கணிப்பு என்பது பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கே நேர்கிறது. குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகளை மறுப்பது, அதாவது, தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி, உணர்வு ரீதியான பாதுகாப்பு, கல்வி ஆகியவை இதில் அடக்கம்.
குழந்தைகள்மீதான வன்முறை, உலகம் முழுவதுமே உண்டு என்றாலும் மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள ஆசிய நாடுகளில்தான் இது அதிகம் நடக்கிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்பதால், குழந்தைகள் ராணுவத்தில் சேர்க்கப்படுவது, அகதிகளாவது, கடத்தப்படுவது, அனாதையாகத் தெருவில்விடப்படுவது ஆகியவையும் நடக்கின்றன. உலகிலேயே தெற்காசியப் பகுதியில்தான் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம். அதேபோல இந்தப் பிராந்தியத்தில்தான் குழந்தைகள்மீதான வன்முறையும் அதிகம்.
உலக அளவில் குழந்தைகளில் 19 சதவீதத்தினர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். 2001ஆம் வருட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 44 கோடி பேர் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். இந்தியாவின் மக்கள்தொகையில் இது 42 சதவீதம். 1974ஆம் வருடத்திய குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை, குழந்தைகளை முக்கியமான தேசியச் சொத்து என்கிறது. ஆனால், இந்தியாவில் நிலவும் குழந்தைத் திருமண முறை, ஜாதி அமைப்பு, பெண் குழந்தைகளை மட்டமாக நடத்துவது, குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியவை அவர்கள்மீதான வன்முறைக்கு மேலும் வலுச் சேர்க்கின்றன. அதேபோல, இந்தியாவில் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குக் குடியேறுவது அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, நகர்ப்புறத்தில் வறுமை அதிகரித்து, குழந்தைகள் தெருவில் அலைய விடப்படுவதோடு, பிச்சையெடுக்கவும் விதிக்கப்படுகிறார்கள். வருடந்தோறும் இந்தியாவில் 25 லட்சம் குழந்தைகள் மரணமடைகிறார்கள். பெண் குழந்தையாக இருந்தால் சாகும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம்.
அதேபோல, உலகிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள தேசம் இந்தியாதான். 2005ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 14,975 வழக்குகள் பதிவாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறது நேஷனல் க்ரைம் ரெகார்ட்ஸ் பீரோ (என்.சி.ஆர்.பி.). பதிவாகாமல்போன வழக்குகள் இதைவிடப் பல மடங்கு இருக்கும் என்பது தெளிவு. என்.சி.ஆர்.பி. பதிவுசெய்திருக்கும் வழக்குகள் எல்லாமே இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்படக்கூடிய குற்றங்கள் மட்டுமே. அதாவது கொலை, பாலியல் பலாத்காரம் போன்றவை. ஆசிரியர் அடிப்பது, குழந்தைகளிடம் ஆபாசப் படம் காட்டுவது, திட்டுவது, அவமானப்படுத்துவது போன்றவை ஐ.பி.சி.யின் கீழ் குற்றங்கள் ஆகமாட்டா என்பதால், அவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரம் இதில் வராது. குழந்தைகள்மீதான குற்றங்கள் அதிகம் பதிவுசெய்யப் படாததே இம்மாதிரிக் குற்றங்களுக்கு நாம் கொடுக்கும் மிகக் குறைவான முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில் குழந்தைகளின் மீதான குற்றம் குறித்துச் சட்டம் இயற்ற விரும்பும் மத்திய அரசு, அதற்குத் தேவையான புள்ளிவிவரங்கள் இல்லை என்பதை உணர்ந்தது. இந்தப் பிரச்சினையின் தீவிரம் நாம் நினைத்திருப்பதைவிட அதிகம் என்பதும் உணரப்பட்டது. இதையடுத்துக் குழந்தைகள்மீதான வன்முறை பற்றிய தேசிய ஆய்வை மேற்கொள்ள முடிவெடுத்தது அமைச்சகம். இந்த ஆய்வின் முடிவுகள் பல விதங்களில் அரசுக்கு உதவும். முதலில் குழந்தைகள்மீதான வன்முறை பற்றித் தேசத்தில் நிலவும் மௌனம் உடையும். குழந்தைகள்மீதான வன்முறை பற்றிச் சட்டம் இயற்றவும் கொள்கைகளை வகுக்கவும் திட்டங்களைச் செயல்படுத்தவும் உதவும். இந்த ஆய்வின் அடிப்படையில் அரசு, சிவில் அமைப்புகளும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்.
இந்த ஆய்வுக்காக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, வட கிழக்கு எனத் தேசம் ஆறாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு மாநிலங்கள் ஆய்வுக்காகத் தேர்வுசெய்யப்பட்டன. இது தவிரக் கூடுதலாக மகாராஷ்டிராவும் தேர்வுசெய்யப்பட்டது. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமாகக் கருதப்படும் மும்பை அங்கிருப்பதும் பெருமளவில் மக்கள் அங்கே குடிபெயர்வதும் இதற்கான காரணங்கள். ஆக மொத்தம் 13 மாநிலங்களில் இந்தக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இம்மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு மாவட்டங்கள் என 26 மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டன. பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகள், பள்ளியில் படிக்கும் குழந்தைகள், வேலை பார்க்கும் குழந்தைகள், தெருவில் திரியும் குழந்தைகள், ஏதாவது ஓர் அமைப்பின் பாதுகாப்பில் இருக்கும் குழந்தைகள் எனப் பல்வேறு பொருளாதார, கல்வி மட்டங்களில் இருக்கும் குழந்தைகளிடம் இந்தக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக 12,447 குழந்தைகள் இந்தக் கணிப்பில் பங்கேற்றார்கள். பெற்றோர், இளைஞர், பிறர் என வேறு 4,773 பேரிடமும் கணிப்புகள் நடத்தப்பட்டன. மொத்தம் 17,220 பேர் இதில் பதிலளித்தார்கள்.
இந்தக் கணிப்பின் முடிவுகளும் குழந்தைகள்மீதான வன்முறை பற்றிய ஐ.நா. பொதுச் செயலரின் உலகளாவிய ஆய்வின் முடிவுகளும் சேர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த தேசிய அளவிலான விவாதத்தை எழுப்பியிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை, அரசாங்க ஆவணக் காப்பகத்தின் மற்றொரு கோப்பாக மாறாமல் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையைத் தூண்ட வேண்டும். சிவில் சமூகமும் பெற்றோரும் இதில் பங்கேற்க வேண்டும். நிலைமை படுபயங்கரமாக இருக்கிறது என்று சொல்லி நாடு முழுவதும் அச்சத்தைக் கிளப்புவது இந்த அறிக்கையின் நோக்கமல்ல. என்ன செய்தாக வேண்டும் என்பதையும் இந்த அறிக்கை சொல்கிறது.
1974ஆம் வருடத்திய குழந்தைகளைப் பற்றிய தேசியக் கொள்கை இந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தாது. அதனால், அதை மாற்றியமைக்க வேண்டும், அல்லது புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும். மாநில அரசுகள் குழந்தை உரிமைப் பாதுகாப்புக் கமிஷனை அமைக்க வேண்டும். குழந்தைகள்மீதான வன்முறையைத் தடுக்கத் தேசிய அளவில் சட்டமியற்ற வேண்டும். பாலியல் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, குழந்தைகளை வைத்து ஆபாசப் படமெடுப்பது, பாலியல் ரீதியான பயன்பாட்டிற்காகவே குழந்தைகளை வளர்ப்பது, அவர்களைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டுவது, கடத்துவது, விற்பது, அடிப்பது, கட்டிவைப்பது போன்ற தண்டனைகளைத் தடுக்கும் வகையில் தேசிய அளவில் சட்டமியற்ற வேண்டும். பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான 70 சதவீதக் குழந்தைகள் தாங்கள் துன்புறுத்தப்பட்டதை யாரிடமும் சொல்வதில்லை. குழந்தைகளுக்கு மிகவும் தெரிந்தவர்களும் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்களுமே இச்செயலில் ஈடுபடுகிறார்கள். புதிய சட்டம் இவற்றையும் கணக்கில்கொள்ள வேண்டும்.
புலம் பெயர்தல், நகரமயமாக்கல் ஆகியவற்றின் காரணமாகப் பெருமளவிலான குழந்தைகள் தெருவில் விடப்படுகிறார்கள். இவர்கள் பிச்சையெடுத்தல், வேலை பார்த்தல், குப்பை பொறுக்குதல் என வாழ்க்கையைக் கடத்த வேண்டியிருக்கிறது. இம்மாதிரிக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கல்வி, உணவு, உடை, இருப்பிடம், தொழில் பயிற்சி ஆகியவற்றை வழங்க வேண்டும்.
தங்கள்மீதான வன்முறையின் காரணமாகவே நிறையக் குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். அதேபோல, பொருளாதாரக் காரணங்களால் படிப்பைவிட்டுவிட்டு எங்கேயாவது வேலைபார்க்கும் சூழல் ஏற்படுகிறது. சில சமயங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டு வீட்டு வேலைகளுக்கும் பாலியல் தொழிலுக்கும் அனுப்பப்படுகிறார்கள். ஆண்டுதோறும் ஏராளமான குழந்தைகள் காணாமல்போகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களைத் தேட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. இவ்வாறு காணாமல்போகும் குழந்தைகள்தாம் எல்லா விதமான வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு உதவிகள் செய்யப்பட வேண்டும்.
இவையெல்லாவற்றையும் செயல்படுத்த, குழந்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ளக்கூடிய, குழந்தைகளின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய, அவர்களைப் பாதுகாக்கும் விதத்தைப் புரிந்துகொண்ட ஒரு படையை உருவாக்க வேண்டும். இதற்காக, இத்தகைய விஷயங்களை உள்ளடக்கிய படிப்புகளைப் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். தவிர, காவல் துறைப் பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், குடிமைப் பணிக்கான பயிற்சிக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் குழந்தைகள் உரிமைகள் பற்றிய பாடங்களையும் சேர்க்க வேண்டும். பெண் குழந்தைகளை இழிவாக நடத்தும் போக்கு நாடு முழுவதும் நிலவுகிறது. பெண் குழந்தைகளுக்குக் கல்வி, சரிவிகித உணவு, சரியான கவனிப்பு ஆகியவற்றைத் தர வேண்டியது பெற்றோரின் கடமை.
குழந்தைகளின் உரிமை குறித்த விவாதம் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம்பெற வேண்டும். அவற்றில் குழந்தைகளைப் பெருமளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். மீடியாக்களில் குழந்தைகளின் உரிமை பற்றிய செய்தி வரும்போது, அவை வாசகரின் பரபரப்பு ஆர்வத்திற்குத் தீனிபோடும் வகையில் அமையாமல், குழந்தைகளின் உரிமை குறித்த கவனத்தைக் கோருபவையாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குழந்தைகளின் அடையாளம் எந்த இடத்திலும் வெளிப்படக் கூடாது.
இது முதல் முயற்சி என்பதால், குழந்தைகள்மீதான வன்முறை என்னும் வரையறைக்குள் மட்டுமே கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகளின் உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்பட, அவர்கள்மீதான வன்முறை, அவற்றின் விளைவுகளை அறிய மேலும் சில துல்லியமான பிரிவுகளின் கீழ்க் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும். அவை:
1. குழந்தைகளின் உரிமைகள்
2. குழந்தைகளைத் துன்புறுத்தல், அவர்கள்மீதான அதன் விளைவுகள்
3. குழந்தைகள்மீதான வன்முறைக்கான காரணங்கள், அதன் விளைவுகள்
4. பள்ளிகளில் தரப்படும் கடுமையான தண்டனைகள்
5. நகர்ப்புற வறுமையும் குழந்தைகளும்
6. வீட்டு வேலை பார்க்கும் குழந்தைகள், டீக் கடைகளில், தெருவோரக் கடைகளில் வேலை பார்க்கும் குழந்தைகள் எனத் தனித் தனிப் பதிவுகள்
7. குழந்தைகளைப் புறக்கணித்தல்
8. பாலியல் பாரபட்சம்
9. ஆதரவற்ற குழந்தைகளும் தத்தெடுக்கும் முறைகளும்
இத்தகைய பிரிவுகளின் கீழ்த் தகவல்கள் சேகரிக்கப்படும்போது, எதிர்காலத்தில் அவை குழந்தைகளைப் பாதுகாக்கப் பெருமளவு உதவும். அதேபோல, குழந்தைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளைக் காக்கும் அமைப்புகளிடையே ஓருங்கிணைப்பும் தேவை. உதாரணமாக, காவல் துறை, தன்னார்வ அமைப்புகள், குழந்தைகளுக்கான மனநல மருத்துவர்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு இருந்தால், ஆதரவற்ற குழந்தை ஒன்று மீட்கப்படும்போது, அக்குழந்தைக்கு மறுவாழ்வு அளிப்பது எளிதாக இருக்கும்.
இந்தக் கணிப்பின் முடிவுகளைவைத்துப் பார்த்தால், பள்ளிக்கூடங்கள்தான் குழந்தைகளுக்கான மிகப் பாதுகாப்பான இடங்கள். ஆகவே, எல்லாக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க முயல வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் விரும்பும் வகையில் பாடங்களைக் கற்றுத்தரத் திட்டங்கள் வகுக்க வேண்டும். பெண் குழந்தைகளின் தேவையைக் கவனத்தில் கொண்டு, பள்ளிகளின் சுகாதார வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். இது பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதை அதிகரிக்கும்.
பள்ளிகளில் ஆசிரியர்களால் குழந்தைகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவது எல்லா இடங்களிலும் இருக்கும் ஒரு தீமை. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதைத் தடை செய்திருந்தாலும், எல்லாப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் அடிப்பது தொடரவே செய்கிறது. இம்மாதிரி ஆசிரியர்களால் அடிக்கப்படுவதைத் தடைசெய்து மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும். அடிக்கும் ஆசிரியர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படவும் வேண்டும். பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய வசதி பற்றிய கூட்டங்களில் குழந்தைகளும் இடம்பெற வேண்டும்.
வேலைபார்க்கும் இடங்களிலிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்கள் கல்விக் கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் குடும்பங்களின் மேம்பாட்டிற்கெனத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
சிறுவர் பாதுகாப்பு இல்லங்கள், சிறார் சீர்திருத்த இல்லங்கள், ஆதரவற்றோருக்கான இல்லங்கள் ஆகியவை குழந்தைகள் வளர்வதற்கான சிறப்பான இடங்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், ஆதரவற்ற குழந்தைகள் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய இல்லங்கள் தவிர்க்க முடியாதவையாகின்றன. பல சமயங்களில் இந்த இல்லங்களின் பொறுப்பாளர்களே குழந்தைகளைத் தவறாகக் கையாள்கிறார்கள். அதனால், இம்மாதிரி இல்லங்களைப் பராமரிக்க, சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.
முடிவாக, பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரின் பாதுகாப்பில்தான் வளர்கின்றன என்னும் நிலையில் அவர்களுக்குத்தான் குழந்தைகளின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு முதலில் ஏற்பட வேண்டும். இதற்கான விரிவான பிரச்சாரங்கள் செய்யப்படுவதே இதற்கான தீர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக