பந்தலூர்: "மாணவர்கள் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பந்தலூர் புனித சேவியர் மாணவர் நுகர்வோர் மன்றம் சார்பில், சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், உலக பார்வை தின நிகழ்ச்சி கருத்தரங்கு நடத்தப்பட்டது.
மாணவர் நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""முக்கியத்துவம் வாய்ந்த கண்களை பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமை. 60 சதவீத பார்வை குறைபாடு, சிகிச்சை மூலம் குணப்படுத்தவும், 20 சதவீதம் தடுக்கவும் முடியும். பிறவியிலேயே கண்பார்வை இழத்தல், வைட்டமின் "ஏ' குறைபாடு, சர்க்கரை அளவு அதிகரித்தல், தொற்றுநோய் போன்றவை கண் பார்வை இழப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே தான், நுகர்வோர் பாதுகாப்பு மையம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து, விழிப்புணர்வு மற்றும் கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வருகிறது,'' என்றார்.
பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் டாக்டர் அமராவதி ராஜன் பேசுகையில், ""உலகில் ஒவ்வொரு 5 நொடிக்கும் ஒருவர் பார்வை இழப்பதுடன், ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் பார்வையை இழக்கின்றனர். அதிகபட்சம் குழந்தைகள் என்பது தான் வருத்தம் தரக்கூடியது. விளையாட்டுகள் மூலம் கண்களில் அடிபட்டு கருவிழி படலம் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோகிறது. மாணவர்கள் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். சிறுவயது குழந்தைகளுக்கு வைட்டமின் "ஏ'சத்து குறைவால், பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதைப் போக்க, குழந்தை பிறந்த 6 மாதம் முதல் 5 வயது வரை, ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒரு முறை வைட்டமின் "ஏ' சத்து நிறைந்த திரவம் வழங்கப்படுகிறது. அரசு சுகாதாரத் துறை மூலம் வழங்கப்படும் இந்த திரவத்தை பயன்படுத்தவும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வழங்குவதிலும், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். தொற்றுநோய் கிருமிகள் மூலமும் கண் பாதிக்கப்படும் நிலையில், வைரஸ் கிருமிகளால் பார்வை பாதிக்கப்பட்டால், அடிக்கடி துடைத்தல் உட்பட செயல்களை மேற்கொள்ளாமல், குளிர்ந்த நீரில் கழுவுவதுடன், உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவரை அணுக வேண்டும்,'' என்றார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நெல்லியாளம் நகர மன்றத் தலைவர் காசிலிங்கம் பேசுகையில், ""கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதால், பலர் பயன் பெற்றுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளுக்கு, மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றார்.
சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் பேசுகையில், ""சுகாதாரத்தை பாதுகாப்பதில் மாநில அரசு பல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பார்வை குறைபாடுடைய மாணவர்களை கண்டறிந்து, கண் கண்ணாடிகள் வழங்கப்படுகிறது. பந்தலூர் தாலுகாவில் மட்டும் 352 மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் வைட்டமின் "ஏ' திரவம், உயிர்திரவம் என அழைக்கப்படுகிறது. இதை, அந்தந்தப் பகுதி சுகாதார செவிலியர்கள், குழந்தைகளுக்கு வழங்குவர். இதன் மூலம் கண்பார்வை குறைபாடு மட்டுமின்றி, தோல் நோய்களும் கட்டுப்படுத்தப்படுகிறது,'' என்றார்.
பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, கவுன்சிலர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி செலீன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெள்ளு, பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தை சேர்ந்த ஸ்ரீதரன், கண் பரிசோதகர் நாகூர் கணி, நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள், நுகர்வோர் மைய மாணவர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக