அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

"பெயருக்கு' மட்டுமே விளையாட்டு மைதானங்கள்

 ஊட்டியில், பல சர்வதேசப் போட்டிகளுக்கு பயிற்சிக் களமாக இருந்த விளையாட்டு மைதானங்கள், இன்று, சமூக விரோதிகளின் கூடாரங்களாகவும், கழிவு நீர் குளங்களாகவும் மாறி வருவது, விளையாட்டு ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற ஊட்டியில், இதமான காலநிலையை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. சுற்றுலாவுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தளமாகவும், சர்வதேச வீரர்களை, உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு தயார் படுத்தும் களமாகவும் உள்ளது.
ஊட்டியில் உள்ள காந்தி மைதானம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானம், காந்தல் கால்பந்து மைதானம்; ஜோசப் பள்ளி மைதானம்; எச்.பி.எப்., உட்பட பல மைதானங்கள், நீலகிரியில், பல தேசிய மற்றும் சர்வதேச வீரர்களை உருவாக்கி உள்ளன.
காந்தி மைதானம், எச்.பி.எப்., மைதானம், காந்தல் கால்பந்து மைதானங்கள் 75 ஆண்டுகள் பழமையானவை. மைதானங்களில் கால்பதித்த வீரர்கள் பலர், சிறப்பு வாய்ந்த போட்டிகளில் சாதித்துள்ளனர். கால்பந்து விளையாட்டில் "ஒலிம்பிக்' தங்கராஜ், சர்வதேச தடகள வீரர் சங்கர், சர்வதேச கைப்பந்து வீரர் சந்திரமோகன் உட்பட பல தேசிய வீரர்கள் உருவாக, இந்த மைதானங்கள் முக்கிய காரணிகளாக இருந்துள்ளன. தவிர, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான பல போட்டிகளை நடத்தவும், 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கும் பயன்பட்டு வருகின்றன.
"நேச்சர் ஹை ஆல்டிடியூட் சென்டர்': இந்தியாவில் இருந்து, பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும் அனைத்து தடகள வீரர்களும், தங்களின் பயிற்சிக்காக, சிறப்பு வாய்ந்த குளிர் வாசஸ்தலங்களுக்கு சென்று, நடத்தப்படும் முகாம்களில் பங்கேற்பர். இத்தகைய காலநிலையில் பயிற்சி மேற்கொள்ளும் போது, அவர்களுக்கான உத்வேகம் அதிகரிக்கும்; இவற்றுக்கு, ஊட்டி, குன்னூர் மற்றும் இமாச்சலப் பிரதேசப் பகுதிகள் கைகொடுத்து வருகின்றன. தடகள வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் அளவுக்கு, ஊட்டியில் காலநிலை உள்ளதால், ஆண்டுதோறும், பல சர்வதேச வீரர்கள் பயிற்சி எடுக்க வருகின்றனர். சமீபத்தில் நடத்தப்பட்ட காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற பல வீரர்கள், ஊட்டி மற்றும் குன்னூரில் சிறப்பு பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியத்துவத்தை அறிந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாநில விளையாட்டு துறை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஊட்டியில், சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டுப் பயிற்சி மையத்தை (ஹை ஆல்டிடியூட் சென்டர்) உருவாக்க, இரு ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. பயிற்சி மையம் அமைக்க, ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு வந்த உயரதிகாரிகள், கால்நடை பராமரிப்புக்கு சொந்தமான இடத்தில், 2 ஏக்கரில் மையம் அமைக்க முடிவு செய்தனர்.
"தீட்டுக்கல் பகுதியில் முதற்கட்டமாக, 2 கோடி மதிப்பில், விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளுடன் கூடிய சர்வதேச பயிற்சி மையம் அமைக்கப்படும்' எனவும் அறிவித்துச் சென்றனர். பல மாதங்கள் கடந்தும், திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது, இழுபறியாகத் தான் உள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் மாறும் போதும், பல திட்டங்களும் மாறிவிடுவதை போல, விளையாட்டு மைய திட்டமும், கிடப்பில் போடப்பட்டதாகவே தெரிகிறது. சர்வதேச பயிற்சி மையம் அமைக்க ஆய்வு செய்யப்பட்ட இடத்தை ஒதுக்குவதில், அரசு துறைகளுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னை தான், தாமதத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதப்படுத்துவதால், மாவட்டத்தில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களும், தேசிய மற்றும் சர்வதேச "கனவுடன்' பயிற்சியில் ஈடுபட்டுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் சோர்வடைந்துள்ளனர்.
சுற்றுலா விழாவுக்கு "சந்தோஷ் டிராபி' மைதானம்: ஊட்டியில், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளுக்கு முன், சர்வதேச தரத்துடன் கூடிய திறந்தவெளி மைதானம் அமைக்கப்பட்டது. பார்வையாளர்கள் அமரக் கூடிய தளம், இயற்கை சூழ்ந்த புல்வெளிகளால் உருவாக்கப்பட்டது. இங்கு கால்பந்து போட்டிகளை நடந்த, "கிக்யூ' வகை புற்களால் கொண்டு தளம் அமைக்கப்பட்டது; தடகள வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு தளமும் அமைக்கப்பட்டது. சிறப்பு வாய்ந்த மைதானத்தில், இதுவரை 50க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநில கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, பிரபலமான "சந்தோஷ் டிராபி' கால்பந்து போட்டிகள், இருமுறை நடத்தப்பட்டுள்ளன. தவிர, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் சில கால்பந்து அணிகள், 8 ஆண்டுகளுக்கு முன் ஊட்டிக்கு வந்து, இம்மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டன. காமன்வெல்த் போட்டிக்காக, நீலகிரிக்கு பயிற்சிக்கு வந்த பல வீரர்களும், இந்த ஓடுதளத்தை பயன்படுத்தியுள்ளனர்.
குறிப்பிடத்தக்க மைதானம், ஆண்டுதோறும் ஊட்டியில் நடத்தப்படும் அனைத்து சுற்றுலா விழாக்களின் போது, மேடை மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்க பயன்படுத்தப்பட்டு, நாசம் செய்யப்படுகிறது. மைதானத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையின் வற்புறுத்தலுக்காக, மைதானத்தில் மேடை அமைக்க சம்மதம் தெரிவித்து வருகிறது. விழாக்கள் முடிந்தவுடன், மேடை அமைக்க பயன்படுத்தப்பட்ட கம்பி, ஆணி, குண்டூசி உட்பட பிற பொருட்கள் சிதறிக் கிடப்பது வாடிக்கையாகி விட்டது. இதை, விளையாட்டு வீரர்களும், விளையாட்டு மைதான அலுவலக ஊழியர்களும் சுத்தம் செய்து, அதன் பின் தான், விளையாட்டுக்கு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
எதிர்கால அவசியமாகும் மைதானங்கள்: கால்பந்து, கைப்பந்து, தடகளம் உட்பட விளையாட்டுகளில் சாதனை படைக்க விரும்பும் ஏழை, எளிய மக்கள் அதிகம் உள்ள நீலகிரியில், இலவசமாக பயிற்சி மேற்கொள்ள அமைக்கப்பட்ட மைதானங்கள், எதிர்கால சந்ததிக்கான அவசர அவசியம். இவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம், மாவட்ட நிர்வாகம், கல்வி நிறுவனங்கள், விளையாட்டு சங்கங்களுக்கு உள்ளது.
ஊட்டி உட்பட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும், ஆக்கிரமிப்பு உட்பட பிற பாதிப்புகளில் இருந்து மீட்க, அதிகாரிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் முன்வர வேண்டும். அப்போது தான், சர்வதேசப் போட்டிகளில், நீலகிரி மாவட்ட வீரர்கள் சாதிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.
நோய் பரவ காரணமாகுது : ஊட்டி காந்தி மைதானம், காந்தல் கால்பந்து மைதானம், தற்போதும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 30 கல்வி நிறுவனங்களுக்கு பயன்பட்டு வரும் காந்தி மைதானம், பிச்சைக்காரர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் அடைக்கலமாக உள்ளது. இரவு நேரங்களில், சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. இதைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், மவுனம் சாதித்து வருகின்றனர்.
காந்தல் பகுதியில் உள்ள பழமையான கால்பந்து மைதானமும், எவ்வித பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. மைதானத்தின் அடிப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் செல்வதால், குழாய்களின் விரிசலால், மைதானத்தில் கழிவுநீர் தேங்குகிறது. இதை சீரமைக்க, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்தாண்டு 25 லட்சம் ஒதுக்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அலுவலகம், ஊட்டி நகரமன்றம் ஒப்புதல் அளித்தன. இத்தொகை, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது; இதுநாள் வரை, திட்டப் பணிகள் குறித்த அறிகுறி தென்படவில்லை. கோடை சீசன் சமயங்களில், வாகனங்களை நிறுத்த பயன்படுத்தப்படும் மைதானம், அதன் பின் சீரமைக்கப்படுவதில்லை. இதனால், மைதானத்தில் கழிவுநீர் தேங்கி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்டுகொள்ளாத விளையாட்டு சங்கங்கள் : ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானம், விளையாட்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஊட்டி வருகையின் போது, இவர் பயணித்த ஹெலிகாப்டரை, இம்மைதானத்தில் இறக்க முடிவு செய்த போது, சில அரசியல் கட்சிகளும், விளையாட்டு சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன; இதனால், வேறு பகுதியில் ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது.
மைதானத்தை மையமாக கொண்டு கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து உட்பட தடகள சங்கங்கள் செயல்படுகின்றன; தற்போது, விளையாட்டு மைதானத்துக்கு பாதிப்பு வரும் போது, ஒரு சங்கம் கூட போராட முன்வருவதில்லை. சில சங்கங்களின் கவுரவத் தலைவராக, மாவட்ட கலெக்டர் பதவி வகிப்பது தான் தயக்கத்துக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலா விழா உட்பட பிற நிகழ்ச்சிகளுக்கு இந்த மைதானம் பயன்படுத்தப்படும் போது எதிர்ப்பு தெரிவித்தால், மாவட்ட கலெக்டரை, பல காரியங்களுக்காக அணுக முடியாமல் போய்விடும் என்பதும், மற்றொரு காரணமாக உள்ளது. இத்தகைய "பின் வாங்கும்' நிலையில் இருந்து, விளையாட்டு சங்கங்கள் மாறினால் மட்டுமே, பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட மைதானத்தை பாதுகாக்க முடியும்

நன்றி  தினமலர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக