சமீபகாலமாக மவுனமாக ஒரு மனோ வியாதி, சமூகத்தை பீடித்து வருகிறது. அது, தினசரி செய்திகளில் முக்கியத்துவம் பெறும், கள்ளக்காதல் தான். நல்ல காதலுக்கே அங்கீகாரம் தர யோசிக்கும் சமுதாயத்தில், இப்படி தான்தோன்றித்தனமாக தலை தூக்கி இருக்கும், கள்ளக்காதல் விவகாரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.
சாதாரண மனிதனையும், புனிதனாக்கும் காதல் எங்கே, மனிதரை மிருகத்தை விட கொடூரமானதாக மாற்றும் கள்ளக்காதல் எங்கே? தமிழ் சூழலுக்கு அன்யோன்யமான இந்த கலாசாரம், சமீபகாலமாக அதிகமாக பரவ காரணம் என்ன என்று, சமூகவியல் ஆய்வாளர்களும், மனோதத்துவ நிபுணர்களும் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர்.
உலகில் தோன்றிய முதல் ஆண் ஆதாம், முதல் பெண்ணான ஏவாள் மீது கொண்ட மோகம், காதலால் தான், அவளிடம் தன் உணர்வை கூறவே, "மொழி' உருவானதாக சொல்வர். அதற்கு பிறகு இருந்த நாகரிகமற்ற சமூகத்தில் தான், வரம்பற்ற உறவுகளும், அதனால் ஏற்பட்ட வன்முறைகளும் ஏராளம்.காதலுக்காக உலகில் ஏற்பட்ட போர்களும், சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிகளும் எண்ணிலடங்காதவை. நாகரிகம் வளர, வளர திருமண பந்தம் என்ற ஒன்றை, சமூகம் ஏற்படுத்தியது; ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடும் உருவானது.இந்த யதார்த்தத்தை மீறும் போது, பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஆனால், சின்னக் குழந்தையை கொல்லும் அளவிற்கு ஒரு பெண்ணை, பிசாசாக மாற்றும் இந்தக் கள்ளக்காதல், ஒரு கலாசாரமாக பரவுவதற்கு முன்பே, முளையிலேயே கிள்ளி எறியும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
சமூக கவுரவத்தை நடுத்தர வர்க்கம் தான், காலம் காலமாக காப்பாற்றி வருவதாக ஒரு மாயை உருவாக்கப் பட்டிருந்தது.ஆனால், இப்போது நடக்கும் பெரும்பாலான இந்தக் கள்ளக்காதல் விவகாரங்களும், அதன் விளைவாக நடக்கும் கொலைகளும், நடுத்தர குடும்பங்களில் தான் நடந்து வருகின்றன.நம் மனதில் பதிந்திருக்கும் மத்திய வர்க்க பண்பாட்டு உருவகங்கள் மட்டுமல்ல, தமிழ் சமூகத்தின் மீதான கண்மூடித்தனமாக கண்ணியமும் தகர்ந்து போகும் சம்பவங்களை தான், பார்த்து வருகிறோம்."காதல் என்பது டீன்-ஏஜ் பருவத்தை அறிவிக்கும் அடையாளம். அது ஒரு உயிரியல் ஆன்ம நடவடிக்கை' என்பார் அறிஞர் குருபேக்ஸ் ராக்ஸ். ஆனால், இங்கு காதல் வசப்படுபவர்கள் எல்லாம் டீன்-ஏஜ் பருவத்தினர் மட்டுமல்ல, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள், திருமணமானவர்கள். அதனால் தான், இவை, "கள்ளக்காதல்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
திருமண வாழ்வில் கிடைக்காத சந்தோஷம், வெளியே தேடும் ஆவல் ஒரு பக்கம், இளம் வயதில் இப்படி தம்மால் காதலை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கம்.தோல்வியடையும் திருமண பந்தத்திலிருந்து எளிதாக வெளியே வரும்படி, விவாகரத்துக்கான வழிகளும் சட்டத்தில் இல்லை. விவாகரத்து என்று கோர்ட் படியேறிவிட்டால், திருமண பந்தத்திலிருந்து விடுதலை பெற ஆண்டுக்கணக்கில் தவம் இருக்க வேண்டிய நிலை உள்ளது."மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்பதை, தவறாக அர்த்தப்படுத்திக் கொண்ட அவலம், ஆரோக்கியமான பாலியல் உறவை கூட அனுபவிக்க முடியாத சூழல், சராசரி மனிதர்களை தவறான பாதைகளுக்கு அழைத்து செல்கிறது.அதற்காக, ஏற்கனவே செய்து வரும் தவறிலிருந்து தப்பிக்கவோ, மறைக்கவோ, காப்பாற்றவோ, பழி வாங்கவோ, கொலை வரை ஒரு மனிதன், அவன் ஆணோ, பெண்ணோ செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதை நினைக்கவே நெஞ்சு பதறுகிறது.இந்த அசட்டுத் துணிச்சல், இவர்களுக்கு எப்படி ஏற்படுகிறது? கொலை செய்தால் அதற்கான கடுமையான தண்டனை உண்டு என்று தெரிந்தும், இவ்வளவு விட்டேத்தியாக சட்டத்தையும், இன்னொரு சக உயிரையும் பறிக்கும் மனநிலைக்கு எப்படி இவர்கள் சென்றனர்.
பெண்களை வெறும் கவர்ச்சி பொம்மைகளாகவும், அலங்கார சிலைகளாகவும், உணர்வற்ற ஜடங்கள், புணர்வதற்கு மட்டுமே லாயக்கானவர்கள் என்ற பிம்பத்தையும், பெரும்பாலோர் மனதில் ஏற்படுத்தியதில், தமிழ் சினிமாவிற்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் முக்கியப் பங்குண்டு.எந்த தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டாலும் காதல்... காதலை தவிர, வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லை என, பிரசாரம் செய்யும் படங்களாகவே இருக்கும். கதாநாயகி என்றால், அவள் நாயகனால் காதலிக்கப்பட வேண்டும்; அதற்கான தகுதி ஹீரோவிற்கு இல்லாவிட்டாலும் சரி.
பிளஸ் 2 படித்துக் கொண்டிருப்பாள் கதாநாயகி. அவள் எப்படியும் நல்ல மார்க் எடுத்து, இன்ஜினியராகவோ, டாக்டராகவோ வருவதற்கு வாய்ப்புண்டு. அச்சமயம் பார்த்து வரும் ஹீரோ படிக்காதவன், எதற்கும் லாயக்கில்லாதவன். அவளிடம் வலியப் போய், வன்முறையை பிரயோகித்து, "காதல் தான் உலகம்...' என்று மூளை சலவை செய்து, படிப்பிலிருந்து தடம்மாற வைத்து, அவள், அவனை வேறு வழியின்றி காதலிக்கும் வரை துரத்தி திரிவான்.
எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும், பெண்களை கீழ்த்தரமான குணம் கொண்டவர்களாகவும், வில்லியாகவும், ஏறக்குறைய சூனியக்காரியாகவும் காட்டுகின்றனர். இல்லாவிட்டால், ஆட்டம், பாட்டம், போட்டி என்ற பெயரில், அவர்கள் அங்க அசைவுகளை ஆபாசமாக காட்டி, சின்ன வயதிலேயே கெட வைக்கின்றன.மொபைல்போன், இன்டர்நெட் போன்ற நவீன சாதனங்கள் வந்த பிறகு, காதலும், கள்ளக்காதலும் போட்டி போட்டு வளரத் தான் செய்யும் என்ற வாதமும் சரியே.
அல்லும் பகலும் பாடுபட்டு, தூக்கம், சாப்பாடு மறந்து, வெளிநாட்டினர் சினிமா, "டிவி' மொபைல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் என, மனித குல வளர்ச்சிக்காக கண்டுபிடிக்கின்றனர். ஆனால், இங்கோ அதை மனித குலம் தலைகுனிய, சமுதாயம் சீரழிவை நோக்கி செல்ல பயன்படுத்தும் விதத்தில், வியாபார சூழ்ச்சிகளால் பின்னப்பட்டிருக்கிறது.ஆண் - பெண் நட்பு என்றாலே, அது பாலியல் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும் என்ற, "தமிழ் சினிமா' கட்டமைக்கும் தவறான சித்தரிப்பை தூக்கி எறிவோம்.அன்பு, நட்பு, நன்றி, கருணை இந்த நான்கு உணர்வுகளுக்கும் மனிதன் முக்கியத்துவம் தந்தால், காதல், கள்ளக்காதல் இவைகளிலிருந்து விடுதலை பெறும் ஆரம்பமாக அது இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக