தேவையற்ற மற்றும் தரமற்றப் பொருட்களுக்கு செலவிடுவதால், பணம் விரயமாவதுடன், நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஊட்டி அருகே காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், என்.எஸ்.எஸ்., சார்பில், தரக் கட்டுப்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் செவணன் பேசுகையில், ""பணம் சம்பாதிக்கும் வழிகள் குறித்து சிந்திப்பதை விட, அதை செலவு செய்யும் போது அதிகமாக சிந்திக்க வேண்டும்; சம்பாதித்த பணத்தை முறையாக செலவு செய்ய வேண்டும்.
தேவையற்ற மற்றும் தரமற்றப் பொருட்களுக்கு செலவிடுவதால், பணம் விரயமாவதுடன், நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தேவையற்ற உணவுகளை புறக்கணிக்க பழக வேண்டும். சுவைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் உண்ணும் பண்டங்கள் பல, நோயை உருவாக்குகின்றன; இவற்றை தவிர்ப்பதுடன், பயன்படுத்தும் நபர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்கள் முன்வர வேண்டும்,'' என்றார்.சென்னை மக்கள் மைய திட்ட அலுவலர் கோதண்டராமன், சிறப்பு அழைப்பாளராக பேசுகையில், ""தரமற்றப் பொருட்களின் விற்பனை இன்று அதிகரித்துள்ளது. பிரபலமான நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை முறையாக ஆய்வு செய்து வாங்க வேண்டும். காய்கறிகள் உட்பட பல பொருட்களின் விளைச்சலை அதிகரிக்க, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன. நுகர்வோர் முறையாக கவனித்து வாங்க வேண்டும்,'' என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையத் தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""தரமான வாழ்வை, தரமான பொருட்களால் தான் பெற முடியும். தரமற்றப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தாலும், விரைவில் பழுதடைந்து அதிகபட்ச செலவுகளையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும். தரமான பொருட்களுக்கு, இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைவனம், ஐ.எஸ்.ஐ., எப்.பி.ஓ., ஹால்மார்க் போன்ற பலதரபட்ட முத்திரைகளை வழங்குகிறது. இந்த தர முத்திரை உள்ள பொருட்களை வாங்கும் போது, உத்திரவாதமும் கிடைக்கிறது. முத்திரை பெற்ற பொருட்கள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாமல் இருந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்கு பயன் தராவிட்டாலோ, இந்திய தர அமைவனத்தில் முறையாக புகார் செய்தால், போலி பொருட்கள் தயாரித்த நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""பால் போன்ற உணவுகள், குறுகிய காலத்தில் கெட்டுப் போகக் கூடியது. இவை போன்ற பொருட்கள், தற்போது மூன்று நாட்களுக்கு மேல் வைத்து விற்பனை செய்யப்படுகிறது; இதில் ரசாயனக் கலவை அதிகரித்துள்ளது. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை உட்கொள்வதால், ஜீரணக் கோளாறு ஏற்படுகிறது,'' என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் வெளியிடப்பட்ட கையேட்டை, பள்ளி தலைமை ஆசிரியர் வெளியிட, மக்கள் மைய திட்ட அலுவலர் கோதண்டராமன் பெற்றுக் கொண்டார். கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் என்.எஸ்.எஸ்., அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா வரவேற்றார். ஊட்டி மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, தேவர்சோலை மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் பூபதி, வார்டு கவுன்சிலர் அருணா சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக