"வனத்தை பாதுகாக்கா விட்டால், எதிர்கால சந்ததிகள் நோய்களால் பாதிக்கப்படுவர்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில்
பந்தலூர் வணிக வளாகம் முன், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிவலிங்கம் வரவேற்றார்.
தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்துப் பேசியதாவது: சூரிய ஒளியில் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களும், அகச்சிவப்பு கதிர்களும் கலந்திருக்கின்றன. இவற்றை பூமிக்குள் ஊடுருவ விடாமல் தடுப்பது தான் ஓசோன் படலம். ஆனால் வன அழிப்பு, தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சுக்காற்று, பிளாஸ்டிக்கை எரிப்பதால் எழும் புகை மண்டலம் ஆகியவற்றால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவன கணக்கெடுப்பின் படி, உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு 20 முதல் 30 லட்சம் பேர், தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், இதில் 20 சதவீதம் பேர், ஆபத்தான சூரிய ஒளிக்கதிர்களால் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது. மனிதர்கள் மட்டுமல்லாது தாவரங்கள், வன விலங்குகள் என அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
இதனால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையிலும், ஓசோன் படலத்தை பாதுகாக்கும் வகையிலும், கடந்த 1987 செப்., 16ம் தேதி, கனடாவில் ஓசோன் படலத்தை அழிக்கும் நச்சுகளுக்கு எதிராக உடன்படிக்கை ஒன்றை, ஐ.நா., சபை தாக்கல் செய்தது. 24 நாடுகள் இந்த உடன்படிக்கையை ஏற்று, ஓசோன் படலத்தை காக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது. வனங்களை பாதுகாப்பதன் மூலம், பல பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததிகள் பல நோய்களிலிருந்து தாக்கப்படாமல் பாதுகாக்கப்படுவர்.
விழிப்புணர்வு பிரச்சார துண்டு பிரசுரத்தை, பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி வெளியிட்டார். பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தண்டபாணி, ஸ்டீபன், அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பிரதீப், ஜெயம் பவுண்டேசன் நிர்வாகிகள் கண்ணதாசன், விஜயகுமாரி, சங்க நிர்வாகிகள் அசோக்குமார், செல்வி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக