தேசிய அளவில் பிரபலமாக இருந்த "கோத்தகிரி ஆரஞ்சு' கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து அரிய வகையாக மாறிவிட்டது,' என ஊட்டியில் நடந்த உணவு தின சிறப்பு நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், உலக உணவு தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
உணவு உரிமை உறுதிமொழியை மாணவர்கள்,ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில் ""உலகளாவிய உணவு தேவை இயற்கையை நம்பியே உள்ளது. நீராதாரங்கள் நீர்வழித்தடங்கள் சோலை வனங்கள், சதுப்பு நிலங்களை காப்பது அவசியம்.
தேசிய உணவு உற்பத்தி 60 சதவீத மக்களுக்கே சென்றடைவதாக உள்ளது. சரிவிகித உணவு கிடைப்பது குறைந்து வருகிறது. நவீன உணவுகள் உடலை கெடுப்பதுடன், நோயை வாங்குவதற்கு ஒப்பாக உள்ளது, ''என்றார்.
விழிப்புணர்வு சங்க செயலாளர் ஜனார்தனன் பேசுகையில், ""உணவு தானிய பதுக்கல், உணவு தானியங்கள் வீணாக்குதல் தவிர்ப்பதற்காக ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம். கொழுப்பு உணவுகளால் உயிரிழப்போரை விட, பட்டியினாலும் சத்துணவின்மையால் இறப்போர் பல லட்சமாக உள்ளது. உலக உணவு மண்டலத்தை உருவாக்கி உணவு உற்பத்தியில் ஒரு பங்கை ஒவ்வொரு நாடும் பட்டினி சாவில் வாழும் மக்களுக்கு வழங்கும் பட்சத்தில் உணவின்மையால் வாடுவோரை காப்பாற்ற இயலும். நீலகிரி மாவட்டத்தில் கிராம மக்கள் மலை காய்கறிகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த காலம் போய் நகரில் வந்து காய்கள் வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.நீலகிரியில் உள்ள கோத்தகிரி ஆரஞ்சு தேசிய அளவில் பிரபலமான காலம் போய் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து, அரிய வகையாக மாறியுள்ளது வருந்ததக்கது. உணவு உற்பத்தி குறைவினால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட இறக்குமதி மூலம் சரிகட்டலாம் என்ற ஆட்சியாளர்களின் போக்கு கண்டிக்கத்தக்கது. பசுமை புரட்சி ஏற்பட்டு தன்னிறைவு எட்ட வேண்டும். புதிய பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்கள் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்.'' என்றார்.
டாக்டர் அமராவதி ராஜன் "உடல் நலம் உணவின் பங்கு' என்ற தலைப்பில் பேசினார்.
நாட்டு நலப்பணி திட்டப் பணி ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஆசிரியர் சிவராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக