குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகள் சில இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றது. அனைத்துக் குழந்தைகளும் சம உரிமைகளைக் கொண்டுள்ளனர். சமமான மதிப்பு உடையவர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட உரிமை உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் துஷ்பிரயோகத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் பாதுகாக்கப்பட உரிமை உள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் தன் கருத்தை வெளிப்-படுத்தவும், மதிக்கப்படவும் உரிமை உள்ளது.
- இந்த உரிமைகள் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் பொருந்தும்.
- அனைத்துக் குழந்தைகளும் சம மதிப்பு உடையவர்கள். அனைத்துக் குழந்தைகளும் சம உரிமைகள் கொண்டவர்கள். அவர்களை பாரபட்சமாக நடத்தக் கூடாது.
- உங்கள் தோற்றம், உங்கள் நிறம், உங்கள் பாலினம், உங்கள் மதம் அல்லது உங்கள் கருத்துகள் காரணமாக யாரும் உங்களை மோசமாக நடத்தக் கூடாது.
- குழந்தைகள் தொடர்பான முடிவுகள் எடுப்பவர்கள் உங்களுக்கு நல்லது எது என்று முதலில் சிந்திக்க வேண்டும்.
- வாழ்வதற்கான உரிமையும் முன்னேறுவதற்கான உரிமையும் உங்களுக்கு உண்டு.
- ஒரு பெயரும் ஒரு தேசிய இனமும் கொண்டிருக்க உங்களுக்கு உரிமை உண்டு.
- உங்கள் பெற்றோருடன் வாழ உங்களுக்கு உரிமை உண்டு. அப்படி வாழ்வது உங்களுக்கு மோசமானதாக இருந்தாலொழிய முடிந்தால், உங்கள் பெற்றோரால் வளர்க்கப்பட உங்களுக்கு உரிமை உண்டு.
- நீங்கள் யோசிப்பதைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. வீட்டில், பள்ளியில், அதிகாரிகளிடத்தில் நீதி-மன்றங்களில் உங்களுக்குத் தொடர்புள்ள விஷயங்கள் அனைத்திலும் உங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். உங்கள் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும்.
- உங்கள் வளர்ப்பிலும், முன்னேற்றத்திலும் உங்கள் பெற்றோருக்குக் கூட்டுப் பொறுப்பு உள்ளது. உங்கள் விருப்பங்களுக்கு அவர்கள் எப்போதும் முதன்மை அளிக்க வேண்டும்.
- அனைத்து வகையான வன்முறைகள், புறக்கணிப்பு, துஷ்பிரயோகம், மோசமாக நடத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட உங்களுக்கு உரிமை உள்ளது. பெற்றோராலோ பிற பாதுகாவலர்களாலோ நீங்கள் சுரண்டப்படக் கூடாது.
- உங்கள் குடும்பத்தை நீங்கள் இழந்திருந்தால், பராமரிப்பு அளிக்கப்பட உங்களுக்கு உரிமை உள்ளது.
- உங்கள் நாட்டிலிருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டால், நீங்கள் குடியேறும் புதிய நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் உங்களுக்கு உண்டு. நீங்கள் தனியாக இருந்தால் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் உதவி பெற உங்களுக்கு உரிமை உள்ளது. முடிந்தால் உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் மீண்டும் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும்.
- அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு மதிப்பான வாழ்க்கைக்கு உரிமை உள்ளது. நீங்கள் ஊனமுற்றவராக இருந்தால், கூடுதலான ஆதரவும் உதவியும் பெற உங்களுக்கு உரிமை உள்ளது.
- உடல்நலம் சரியில்லாதபோது, தேவைப்படும் உதவியும் பராமரிப்பும் பெற உங்களுக்கு உரிமை உள்ளது.
- பள்ளிக்குச் செல்லவும், மற்றவர்களின் உரிமைகளை மதித்தல், மற்ற கலாச்சாரங்களை மதித்தல் போன்ற முக்கியமான விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் உங்களுக்கு உரிமை உள்ளது.
- ஒவ்வொரு குழந்தையின் எண்ணங்களும் நம்பிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும். நீங்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால், உங்கள் சொந்த மொழி, உங்கள் சொந்த கலாச்சாரம், உங்கள் சொந்த மதம் ஆகியவற்றுக்கு உரிமை உள்ளது.
- விளையாடவும், ஓய்வெடுக்கவும், ஆரோக்கியமான சூழலில் வசிக்கவும் உங்களுக்கு உரிமை உள்ளது.
- உங்கள் பள்ளிக் கல்வியில் குறுக்கிடுகிற அல்லது தடுக்கிற, உங்கள் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆபத்தான தொழில் செய்யும்படி நீங்கள் கட்டாயப்படுத்தப்படக் கூடாது.
- யாரும் உங்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தக் கூடாது அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது. நீங்கள் மோசமாக நடத்தப்பட்டால், பாதுகாப்பும் உதவியும் பெற உங்களுக்கு உரிமை உள்ளது.
- உங்களைக் கடத்தவோ விற்கவோ யாருக்கும் அனுமதி இல்லை. குரூரமான, ஆபத்தான முறையில் யாரும் உங்களைத் தண்டிக்கக் கூடாது. நீங்கள் போர் வீரர் ஆக வேண்டியதில்லை.. ஆயுதப் போரில் பங்கேற்க வேண்டியதில்லை..
அனைத்துப் பெரியவர்களும், குழந்தைகளும் இந்த ஒப்பந்தம் பற்றி அறிந்திருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் பற்றி அறிந்துகொள்ள உங்களுக்கு உரிமை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக